Pages
பூமியை தாக்குமா? சூரிய சூறாவளி
உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.
‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.
“2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்” என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.
கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.
குண்டூஸ்.. டோன்ட் ஒர்ரி ஹாலிவுட் நடிகைகள் ஆறுதல்
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஹட்சன் (29). நடிகைகள், பாடகிகள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உடைத்தெறிந்தவர். 2006&ல் ட்ரீம்கேர்ள்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர். இதெல்லாம்விட.. அதிபர் ஒபாமாவின் நண்பர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ஒபாமா கேட்டுக்கொண்டதால் நிகழ்ச்சியில் பாடி அசத்தியவர்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உடம்பு இளைத்தால் நல்லதுதான். நானும் முயற்சி செய்கிறேன். ஆனால், இளைக்காவிட்டால் அலட்டிக் கொள்வதில்லை. நான் டயட்டில் இருக்க ஆரம்பித்த பிறகு, ஆடை சைஸ் 5 முறை அதிகரித்துவிட்டது. இப்போதெல்லாம் எவ்வளவு வெயிட் இருக்கிறேன் என்றுகூட பார்ப்பதில்லை.
‘குண்டாக இருக்கிறீர்களே’ என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக நாம் கவலைப்பட்டு மகிழ்ச்சியை தொலைக்க வேண்டுமா? நமக்கு நாம் ஓகேவா? அதுபோதும்.
இவ்வாறு ஜெனிபர் கூறினார்.
இதே கருத்தை அமெரிக்க மாடல் அழகியும் நடிகையுமான கிம் கர்டாஷியனும் (29) கூறியுள்ளார். ‘சூப்பர் ஸ்டிரக்சர்’ என்று உலகம் முழுவதும் புகழப்படுபவர். தன்னிடம் பிடிக்காத ஏரியா தொடைப்பகுதி என்கிறார் இவர். “எவ்வளவோ பயிற்சி செய்கிறேன்.. ஓடுகிறேன். தொடை அளவு குறையவில்லை. என் தொடைகள் இன்னும் சிறிய சைஸில் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். ஆயிரம்தான் இருந்தாலும் என் தொடையாச்சே. வெறுக்க முடியுமா? விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்பவேண்டியதுதான்” என்கிறார்.
3-ம் உலகப் போர் மூளும் பீதியை கிளப்பும் நாஸ்டர்டாம் கணிப்பு
14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.
சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார். இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார்.
அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது. இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார்.
நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.
அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.
2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.
2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.
2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.
இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம்
மியூச்சுவல் பண்ட்களில் இருப்பதுபோல, இனி பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம் அறிமுகமாகி உள்ளது.
இதை முதல்முறையாக நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அறிமுகம் செய்துள் ளது. மியூச்சுவல் பண்ட்களில் மொத்த முதலீடு, மாத தவணை முதலீடு என இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது முதலீட்டில் பங்குச் சந்தையின் சரிவின் போது நஷ்டம் அதிகம். மாதாந்திர முதலீட்டில் (எஸ்ஐபி) பங்குச் சந்தை சரிவின்போது அதிக யூனிட்கள் கிடைப்பதால், நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
இதனால், 2வது முறைக்கு நடுத்தர, சிறு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நேரடி முதலீட்டில் லாபம் அதிகம் என்ற போதிலும், திடீர் சரிவுகளால் நஷ்டமும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், சிறு, நடுத்தர முதலீட்டாளர்களின் முதலீடு குறைவாகவே உள்ளது.
பங்குச் சந்தை மீது எல்லா பிரிவினருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய பங்கு வர்த்தக ஆணையமான ‘செபி’ எடுத்து வருகிறது. இந்நிலையில், மியூச்சுவல் பண்ட் போலவே பங்கு சந்தையிலும் மாதாந்திர தவணையில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அளிக்கும் இந்த வசதியில், 2 வழிகள் உள்ளன.
மாதத்துக்கு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்வது முதல் வழி. அதன் குறைந்தபட்ச தொகை ரூ.750. 2வது வழியாக, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளை வாங்கலாம். மாதாந்திர முதலீட்டு திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள். பிறகு விரும்பினால் அதை நீட்டிக்கலாம் அல்லது பணத்தை திரும்பப் பெறவோ, பங்குச் சந்தையில் விட்டு வைக்கவோ செய்யலாம்.
அம்மா என்றால் அன்பு
அம்மா. இந்த வார்த்தையை கேட்டால் நம்மைஅறியாமல் உற்சாகம் வரும். படுபாதக செயல் செய்கிறவன்கூட அம்மா முகத்தை பார்த்ததும் சாந்தமாகிவிடுவான். இதற்கு காரணம் என்ன? தாயின் மனநிலைக்கும் குழந்தையின் மூளை செயல்பாடுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தின. 35 வயதை ஒட்டியிருந்தவர்களை வைத்து ஆய்வு நடந்தது. அறிமுகம் இல்லாத சிலரது போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அப்பா, அம்மாவின் போட்டோக்களும் காட்டப்பட்டன. அவற்றை பார்க்கும்போது மூளையில் அடையும் மாற்றம் எம்.ஆர்.ஐ. உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. அப்பா போட்டோ பார்ப்பதைவிட அம்மா போட்டோவை பார்க்கும்போது மூளையின் உணர்தல் மற்றும் உணர்ச்சி அதிகமானது. அதாவது, அம்மாவை பற்றிய தகவல்களை கேள்விப்படும்போது பல்பின் பிரகாசம்போல் மூளை பளிச்சென சுறுசுறுப்பாகிறது.
பிறந்த பிறகு முதல்முறை அழுவது, முதல் முறை பால் குடிப்பது, முதல் முறை சிரிப்பது, கத்துவது, நடப்பது, பேசுவது என எல்லாமே குழந்தைக்கு புதிய, த்ரில்லான அனுபவம்தான். இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு பக்கபலமாக இருந்த அம்மாவின் நினைவும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவள் நம்மை அரவணைத்துக் கொண்டதும் மூளையில் ஆழமாக பதிவாகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பதிவுகள் மறைவதில்லை. அதனால்தான், எத்தனை வயதானாலும் அம்மா என்றதும் மலர்ச்சி அடைகிறோம்.
கைக்குழந்தையை வளர்க்கும் காலக்கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். டென்ஷனாக, கவலையாக இருந்தால் அது குழந்தையின் அறிவாற்றலை பாதிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
செல்போனிலேயே எக்ஸாம் எழுதலாம்
நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் வேளையில் செல்போனில் தேர்வு எழுதும் முறையை பெங்களுரைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் கொண்டு வந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் பெற்றோரை அழைத்தும் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில் பெங்களுரைச் சேர்ந்த சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேடு என்ற ஆர்ட்ஸ் கல்லூரியில் செல்போன் மூலம் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் தேர்வு எழுதுவது பல வெளிநாடுகளில் பழக்கத்தில் உள்ளது. தற்போது கம்ப்யூட்டரில் உள்ள தகவல் தொடர்பு வசதிகள் கையடக்க செல்போனிலும் வந்துவிட்டதால் ஆன்லைனில் செய்யக்கூடிய அனைத்தையும் செல்போனிலேயே செய்ய முடியும்.
சேஷாத்ரிபுரம் கல்லூரியில் முதல் கட்டமாக பிபிஎம் மற்றும் பிசிஏ படிப்புகளில் இந்த செல்போன் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு நடைபெறும் நாளன்று வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் பேப்பர்களுக்கு பதிலாக ஒரே மாதிரியான செல்போன் தரப்படும். இதில் கேம்ஸ் மற்றும் மெசேஜ் வசதி இருக்காது. இந்த செல்போன்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். மாணவரின் பெயரை செல்போனில் பதிவு செய்தவுடன் சர்வருடன் இணைப்பு கிடைக்கும். கேள்வித்தாள் செல்போன் திரையில் தோன்றும். அப்ஜக்டிவ் முறையில் இந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை ‘டிக்’ செய்ய வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தவுடன் தேர்வை முடித்துக் கொள்கிறோம் என்பதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனடியாக அவரது விடைத்தாள் கல்லூரி சர்வரில் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் தரப்படும். இந்த முறையில் பேப்பர் செலவு மிச்சம். ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்த வேண்டிய வேலை மிச்சம். புதிய முறையில் தேர்வு என்பதால் மாணவர்களும் தேர்வை கண்டு பயப்படாமல் உற்சாகமாக தேர்வை எழுதுவார்கள்.
இது குறித்து கல்லூரி முதல்வர் எம்.பிரகாஷ் கூறுகையில், “தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கினோம். மாணவர்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இதில் காப்பி அடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றார். விடைத்தாள் திருத்தும் வேலை இல்லாததால் ஆசிரியர்களும் இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் வருகைப்பதிவுக்கும் இந்த செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் செல்போனில் உள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் வருகை பதிவாகிவிடும். கல்லூரிக்கு மாணவர் வரத் தவறினால் உடனடியாக கல்லூரியின் சர்வரிலிருந்து மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் சென்றுவிடும். இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு மட்டம் போட முடியாது. அட்டன்டெண்ஸ் எடுக்க வேண்டிய வேலையும் ஆசிரியர்களுக்கு இல்லை.
இந்திய வங்கிகளில் மோசடி 2,000 கோடியை தாண்டியது
கடந்த 2009 - 10ம் நிதியாண்டில் நாடு முழுவதும் வங்கிகளில் 24,797 மோசடிகள் நடந்துள்ளன. மோசடி தொகை 2,000கோடியை தாண்டியது.
கடந்த 2009 - 10ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இது பற்றி கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2005 - 06ம் ஆண்டில் 13,914 வங்கி மோசடிகள் நடந்தன. மொத்த மோசடி தொகை
1,381 கோடி. ஆனால், 2009 - 10ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,797 ஆகவும், மோசடி தொகை2,017 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2008 - 09ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 23,914. மொத்த மோசடி தொகை1,883 கோடி.
2009 - 10ம் நிதியாண்டில் நடந்த மொத்த மோசடிகளில் 1கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள மோசடிகளின் எண்ணிக்கை 225. இதில் சம்பந்தப்பட்ட தொகை 1,524 கோடி. இதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 212 ஆகவும், தொகை 1,404 கோடியாகவும் இருந்தது. வங்கிகள், இதற்கு முன்பு செய்ததைப் போலவே இந்த மோசடிகள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. 2009 - 10ம் ஆண்டில் 4,01,476 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2008 - 09ல் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 3,98,111. அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கை 1,95,811. கடந்த நிதியாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் 86.9 சதவீதம் வங்கிகளால் கண்டு பிடிக்கப்பட் டவை. மற்றவை ரிசர்வ் வங்கியால் கண்டு பிடிக்கப்பட்டன. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கக்கூடும்.
கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து இருப்பதால் அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியாமலேயே பொதுமக்களின் கைக்கு கிடைத்து அவர்கள் அதை வங்கிலேயோ அல்லது வர்த்தக நிறுவனங்களிலேயோ கொடுக்கக் கூடும். அப்படி, தெரியாமல் வாங்கி வங்கி கவுண்டர்களில் கொடுக்கும்போது 5 நோட்டுகள் வரை மட்டும் இருந்தால், அந்த நோட்டுகளை முடக்கி வைத்து விட்டு அதற்கான ரசீதை அந்த நபருக்கு வங்கிகள் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அந்த நபருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், அந்த நபர்களின் அடையாளத்துக்கான அத்தாட்சியை வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கசக்குதே அமெரிக்கா.. இனிக்குதே இந்தியா
அமெரிக்க மோகத்துடன் சென்ற இந்தியர்கள் தங்களது வேலை, கைநிறைய சம்பளம் போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு குடும்ப உறவுக்கும், பாசத்துக்கும் ஏங்கி தாய் நாடு திரும்பும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
‘என் மகள் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறாள்’, ‘மகன் இன்ஜினியராக இருக்கிறான்’ என்று சொல்வதை பெருமையாக கருதுகிறவர்கள் அந்தக்காலம் தொட்டு இந்த காலம் வரை இருக்கிறார்கள். பல இளைஞர்கள், இளைஞிகளின் கனவும் அமெரிக்கா செல்வதாகவே இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. ஆண்டுக்கணக்கில் அங்கு இயந்திரமயமான வாழ்க்கையில் உழன்ற பலர் உறவு, பாசம், கலாசாரம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்நாட்டு பிணைப்பை இழந்து விட்டது போல் உணருகின்ற பலரும் அவசர அவசரமாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
1990ம் ஆண்டு தனது 23ம் வயதில் ஐதராபாத்திலிருந்து அமெரிக்கா சென்றவர் கவுதம். பட்ட மேற்படிப்பு, மல்ட்டிநேஷனல் ஐ.டி. கம்பெனியில் உயர் பதவி, கைநிறைய சம்பளம், அமெரிக்க சிட்டிஷன்சிப்புடன் பிறந்த குழந்தை என கடந்த 18 வருடமாக அமெரிக்கவாசியாகவே வாழ்ந்தார். அந்த வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு திடீரென சொந்த ஊர் திரும்பினார். அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி என உறவுகளோடு வந்து கண்ணீரோடு கலந்து விட்டார்.
“பையை நிரப்பும் காசைவிட குடும்ப உறவுகள்தான் நம் மனதை ஆள்கிறது. சதா ஊர் ஞாபகம் வருகிறது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஊரில் இந்நேரம் நம் உறவுகள் என்ன செய்யும்? அவளுக்கு கல்யாணமாமே.. இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறதாமே.. என்ற தகவல்கள் ஏதோ ஒருவகையில் நாம் அங்கு இல்லாததை ஒரு இழப்பாக கருதச் செய்கிறது. பணம்தான் முக்கியம் என்று நினைத்தால் அதை இப்போது இந்தியாவிலேயே சம்பாதிக்கலாம். அதனால் நான் இந்தியா திரும்பிவிட்டேன்” என்கிறார் கவுதம்.
அமெரிக்காவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றவர் டாக்டர் பி.ரகுராம். வசதி, வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு திடீரென்று இந்தியா திரும்பினார். ‘இந்தியாவில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் மார்பக அறுவை சிகிச்சை மையங்கள் இல்லை என்று உணர்ந்தேன். அந்த சேவையை நம் மக்களுக்கு வழங்கும் லட்சியத்துடன் ஊர் திரும்பி விட்டேன். என் தாயார் பெயரில் மருத்துவமனை தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. இதன் மூலம் முழு திருப்தி கிடைத்திருக்கிறது” என்றார்.
அதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரமதி ரெட்டி (அப்பல்லோ மருத்துவமனை சீனியர் கன்சல்டன்ட்) கூறும்போது, “13 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து தம்பா, புளோரிடா பகுதிகளில் மருத்துவ தொழில் செய்தேன். அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிட்டேன். நமது கலாசாரம், குடும்ப பந்தம், பாசங்கள் நிறைந்த உறவுக்கான சூழ்நிலையில் எனது குழந்தையை வளர்ப்பதற்காக ஊர் திரும்பினேன்” என்றார்.
டாக்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இன்ஜினியர்கள், இந்தியா திரும்பினால் நிறைய சம்பாதிக்க முடியாது என்ற எண்ணம் கொண்ட உயர் அதிகாரிகள், வசதியான வாழ்க்கை இந்தியாவில் கிடைக்காது என்று எண்ணுபவர்கள்கூட மீண்டும் இந்தியா திரும்பும் எண்ணத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பல தொழில் அதிபர்களும், “அங்குள்ள மார்க்கெட் நிலவரம் மங்கி வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி தாய் மண்ணுக்கான வீரியம் எங்கிருந்தாலும் அதிகரித்து வருகிறது என்று கூறி தங்கள் தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு இங்கு வந்து வர்த்தகத்தை தொடங்கிவிட்டனர்.
நிதிமுதலீடு தொழில் நடத்தி வந்த மம்தா பானர்ஜி கூறும்போது, “18 வருடம் அமெரிக்காவில் நிறுவனம் நடத்தி வந்தேன். இப்போது அதற்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்தியா திரும்பி, இங்கே கம்பெனி தொடங்கி விட்டேன். மைக்ரோ சாஃப்ட் துறையில் புகழ்பெற்று விளங்கும் எனது கணவரும் தனது டீமுடன் இந்தியா திரும்பி நிறுவனத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் இப்படியொரு மனமாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.
‘மப்பில்’ இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது
தண்ணியடித்து விட்டு போதையில் இருந்தால் பைக், கார் ஸ்டார்ட் ஆகாது. இதற்கான பிரத்யேக கருவியை கோவை இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.
கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). பி.இ. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர். 2004&ம் ஆண்டில் முத்துக்குமார் கண்டுபிடித்த ‘ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர்’ என்ற கருவிக்கு போபாலில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது. பூட்டை உடைத்து திருடர்கள் வீட்டுக்குள் வந்தால், இந்தக் கருவி சத்தமிடுவதுடன் தானாக அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும். இதனால் திருட்டை தவிர்க்கலாம். இதேபோல பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது, ‘டிரங் அண்ட் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க இந்தக் கருவி பயன்படும். இதை பைக், கார்களில் டேஸ் போர்டு இருக்கும் இடத்தில் பொருத்த வேண்டும். கருவி சீல் வைக்கப்பட்டிருப்பதால் எலக்ட்ரிக் அமைப்பை கழற்றி மாற்ற முடியாது.
டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார், தானாக செயல்படும். வாகனம் ஓட்டுபவர் குடித்து இருந்தால் ‘மன்னிச்சிடுங்க பாஸ்... நீங்க மது குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்ட முடியாது’ என்று எச்சரிக்கை வரும். மது குடிக்காவிட்டால், டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும். அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும். அந்த எண்ணுடன், ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வாகனம் ஸ்டார்ட் ஆகும். வாகனத்தை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தால் 30 வினாடியில் கண்டுபிடித்து வாகனம் தானாக நின்றுவிடும். ‘மத்திய, மாநில அரசுகள், வாகன உற்பத்தியாளர்கள் உதவினால், இந்தக் கருவியை ஒவ்வொரு வாகனங்களிலும் பொருத்தி, விபத்துகளை தடுக்க முடியும்’ என்கிறார் முத்துக்குமார்.
உயிருக்கு ஆபத்தாகும் மருந்து, மாத்திரைகள்
டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் தானாகவே கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், ஏதாவது பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு பொதுமக்கள் தான் முழு பொறுப்பு. ஏனென்றால், என்ன மருந்து, மாத்திரைகள் உட்கொண்டோம் என்பதற்கு ஆதாரமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இருக்காது. அதனால், யாரையும் குறை சொல்ல முடியாது.
டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிடாமல், தேவையற்ற மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால், வீரியம் மிக்க மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள் பரவி வருகின்றன. இந்த கிருமிகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அழிக்கவும் முடியவில்லை. டிபி, என்டிஎம் பாக்டீரியா, இதுபோன்ற கிருமிகளில் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா நாடுகளிலும் இந்த கிருமிகள் பரவி வருகின்றன.
தலை வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கான மருந்து, மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக விளம்பரம் செய்கின்றன. அதை பார்க்கும் மக்கள், அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அந்த மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர்.
குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் என்று பாதிக்கப்பட்டால் உடனடியாக தாய்மார்கள் பாராசிட்டமால் மருந்து, மாத்திரைகளை அதிகமாக கொடுக்கின்றனர். மேலும், சொட்டு மருந்திற்கும், டானிக்கிற்கும் (சிரப்) வித்தியாசம் தெரிவதில்லை. சொட்டு மருந்தை 3 சொட்டு கொடுக்க வேண்டும், டானிக் ஒரு ஸ்பூன் தர வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், டானிக் அளவிற்கு, சொட்டு மருந்தை கொடுத்து விடுகின்றனர். டாக்டரின் ஆலோசனை இல்லாமல், டானிக், பாரசிட்டமாலை அதிகமாக கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்.
நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் ஜீரண மண்டலத்திற்கு சென்று சிறுகுடல், பெருகுடல் வழியாக நோய்களுக்கு தீர்வு காண்கிறது. அதன்பின், கடைசியாக கல்லீரல் வந்தடைகிறது. அதையடுத்து மருந்து, மாத்திரைகள் கரைந்து சிறுநீராக வெளியேறுகிறது. கல்லீரல், சிறுநீரகம் செயல்பாட்டை அறிந்து, உடல் எடையை கணக்கிட்டு, டாக்டர்கள் மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்கள். டாக்டர்கள் பரிந்துரைத்ததை விட கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் நேரடியாக வாங்குகின்றனர். அந்த மருந்தின் பக்க விளைவுகள் தெரிவதில்லை. எவ்வளவு டோஸ் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதனால், முதலில் கல்லீரல் செயலிழக்கும், அதன்பின் சிறுநீரகம் என படிப்படியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கப்பட்டு, கடைசியாக உயிருக்கே ஆபத்தாக அமையும். படித்தவர்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளை பற்றி அறைகுறையாக தெரிந்தவர்கள்தான், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர்.
தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், “மருந்து கடைக்காரர்கள் வலிகளை நீக்கும் மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, மயக்க மருந்து, தூக்க மாத்திரை போன்ற பட்டியலில் உள்ள மருந்துகளை டாக்டர்கள் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொடுக்க அனுமதியில்லை. சாதாரண காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற மருந்து, மாத்திரைகளை விற்கலாம். அதுவும் அளவுக்கு அதிகமாக கொடுக்க அனுமதி இல்லை” என்றார்.
ஆனந்த் இந்திய குடிமகனா வெளிநாட்டு பிரஜையா’
எப்போதும் சண்டை சச்சரவுடன் வாழும் மக்கள், எதிரி நாடு போர் தொடுத்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். அப்படி யாரும் உதவிக்கு வராத பட்சத்தில் உள்நாட்டிலேயே எவராவது அந்த பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கிறது.
விஸ்வநாதன் ஆனந்த் விவகாரத்தில் மனிதவள மேம்பாடு துறை அதிகாரி ஒருவருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கணித மாநாட்டை முன்னிட்டு ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் பல்கலைக்கழகம் தீர்மானித்தது. மத்திய பல்கலை என்பதால் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதை கேட்டதற்கு, ‘ஆனந்த் இந்திய குடிமகனா வெளிநாட்டு பிரஜையா’ என்று சந்தேகம் கிளப்பி மொத்த பேருக்கும் ஒரே நேரத்தில் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டார் அதிகாரி.
‘ஆனந்த் இந்தியன் இல்லை என்றால் வேறு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது’ என்ற கேள்வியில் தொடங்கி, ‘பச்சைத் தமிழனை அந்நியனா என கேட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்’ என்பதுவரை இணையதளத்தில் சர்வதேச இந்தியர்களின் ஆவேசம் தெறிக்கிறது. சதுரங்க உலகின் சக்கரவர்த்தி, செஸ் ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே மனிதன், பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு வீரன், ஒவ்வொரு வெற்றிக்காகவும் நாடாளுமன்றத்தால் வாழ்த்தப்படும் மகத்தான இந்தியன் ஆனந்த். மாயவரத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து உலகை வென்றவர் இன்று ஸ்பெயினில் வசிக்கிறார். வசிப்பிடத்தால் குடியுரிமை மாறுவதில்லை. அவரது பாஸ்போர்ட் மீது அசோக சக்கர முத்திரைதான் மின்னுகிறது.
இதெல்லாம் தவிர, கவுரவ பட்டத்துக்கும் குடியுரிமைக்கும் சம்பந்தமே கிடையாது. இந்திய தலைவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் நமது நிறுவனங்கள் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் கவுரவ பட்டங்கள் வழங்குவது வழக்கமான நடைமுறை. அப்படி இருக்கும்போது ஒரு அரசு அதிகாரிக்கோ பல்கலைக்கழக நிர்வாகிக்கோ இப்படியொரு சந்தேகம் எழுந்ததே புதிராக இருக்கிறது.
பக்கத்து நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வந்து வசிப்பவர்களுக்கு குடியுரிமையும் சலுகைகளும் கொடுத்து வாழவைக்கும் அதிகார வர்க்கத்துக்கு சொந்த நாட்டு குடிமகன் விளையாட்டு உலகின் தலைமகன் அந்நியனாக தெரிவது கடைந்தெடுத்த அநியாயம்.
சென்னையில் இறக்குமதியாகும் ஆபத்து
சென்னை நகரை எலக்ட்ரானிக் குப்பை மேடாக்க ஒரு கூட்டமே கிளம்பியிருக்கிறது. இ-வேஸ்ட் அல்லது இ-ஸ்கிராப் என்று சொல்லப்படும் மின்னணு கழிவுகள்.
டெலிபோன், கம்ப்யூட்டர், டெலிவிஷன், கால்குலேட்டர், வாஷிங் மெஷின், ரேடியோ, டியூப்லைட், ஃபிரிட்ஜ், பொம்மை, பேட்டரி, டிவிடி பிளேயர்.. மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் எதுவானாலும் செயலற்று போனால் இ - ஸ்கிராப். அமெரிக்காவில் ஓராண்டில் 3 கோடி கம்ப்யூட்டர் 10 கோடி டெலிபோன் இப்படி கழிக்கப்படுகிறது. முழுவதும் செயல் இழந்திருக்கலாம் அல்லது காலாவதி ஆகியிருக்கலாம். ரிப்பேருக்கு அழுவதைவிட புதிதாக வாங்குவது சுலபம் என்பதால் இப்படி.
இந்த சாதனங்களில் பல பாகங்கள் மறுசுழற்சி முறையில் புதுப்பிக்க கூடியவை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் விலை குறைந்த இரும்பு, அலுமினியம் போன்றவையும் இவற்றில் இருக்கின்றன. உடலுக்கும் சூழலுக்கும் கேடு உண்டாக்கும் நச்சு சமாசாரங்களும் உள்ளன. குழி தோண்டி புதைத்தாலும் நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கும் வீரியம் கொண்டவை இந்த பொருட்கள்.
இவற்றை கப்பல் கப்பலாக சென்னைக்கு ஏற்றுமதி செய்கின்றன பல நாடுகள். எரியாத டியூப்லைட், செத்த பேட்டரி பொறுக்கி உடைத்து ஈயம், பித்தளை சுரண்டி சேகரிக்கும் பழக்கம் இருப்பதால் இங்குள்ள சில வியாபாரிகள் ஆபத்தான அந்நிய கழிவுகளை வரவழைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் நிலம், நீர், காற்று மாசு படுவதுடன் எண்ணற்ற நோய்களும் பரவும் என்பதை அவர்கள் மறைக்கின்றனர். மூன்று நாள் முன்பு 4 நாடுகளில் இருந்து 8 கன்டெய்னர்களில் வந்த 127 டன் கழிவுகளை சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர். மூன்று மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.
கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும் இவ்வாறு தொடர்ந்து நடப்பது புதிராக இருக்கிறது. எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு வேகமாக அதிகரிக்கும் நிலையில், இங்கு இ-வேஸ்ட் அதிகரிக்காமல் தடுக்க வேண்டிய நெருக்கடி நமக்கு இருக்கிறது. இந்த லட்சணத்தில் கூடுதல் ஆபத்தை இறக்குமதி செய்யும் ஆசாமிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படும்.
முகேஷை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆகிறார் அனில்
நாட்டின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் நீண்ட காலமாக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, முதல் முறையாக 2வது இடத்துக்கு இறங்குகிறார். முதலிடத்தை வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் விரைவில் பிடிக்கிறார்.
உலோகங்கள், சுரங்கங்கள் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கிறார் வெளிநாடு வாழ் இந்தியரான அனில் அகர்வால். அவரது வேதாந்தா குழுமம் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை 44,200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வேதாந்தா குழும நிறுவனங்களில் அனில் அகர்வால் குடும்பத்தினரின் பங்குடன், கெய்ர்ன் இந்தியாவில் அவரது பங்குகளும் சேர்ந்தால் மொத்த மதிப்பு 1.67 லட்சம் கோடியாக உயர்கிறது.
இது ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மொத்த பங்கு மதிப்பான 1.45 லட்சம் கோடியை விட அதிகம். எனவே, இதுவரை நாட்டின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ், விரைவில் 2வது இடத்துக்கு வருகிறார். அனில் அகர்வால் முதலிடம் பிடிக்கிறார். இது அனில் அம்பானியின் மொத்த பங்கு மதிப்பான 80,000 கோடியைவிட 2 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 82.5 கோடி
இந்தியாவில் மாதத்துக்கு ஒருவரது வருமானம் 1,035க்குகீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை 82.5 கோடி என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த பிரிவினரை ஏழைகளாக அது பட்டியலிட்டுள்ளது.
இதுபற்றி ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை வருமாறு:
இந்தியாவில் நடுத்தர வருமான பிரிவினர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது உலக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. எனினும், நடுத்தர பிரிவினரில் பெரும்பகுதியினரின் தனிநபர் மாத வருமானம் 1,035 முதல் 2,070
ஆக உள்ளது. குடும்பத்தில் ஒவ்வொருவரின் சராசரி மாத வருமானம் இதுவாக இருப்பவர்கள் எண்ணிக்கை 22.4 கோடி. இவர்களை கீழ்நிலை நடுத்தர மக்கள் (லோயர் மிடில் கிளாஸ்) எனலாம்.
அடுத்ததாக,2,070 முதல் 5,177 வரை மாத தனிநபர் வருமானம் கொண்டவர்கள் 4.5 கோடி பேர் உள்ளனர். இவர்கள் நடுத்தர மிடில் கிளாஸ் பிரிவினர்.
மாதத்துக்கு ஒருவர் 5,177 முதல் 10,354 வரை வருமானம் சம்பாதித்தால் அவர்கள் உயர் நடுத்தர வருமான பிரிவினராக (அப்பர் மிடில் கிளாஸ்) கருதப்படுகின்றனர். இவர்களது எண்ணிக்கை 50 லட்சம் மட்டுமே.அதற்கும் மேலாக மாதத்துக்கு 10,354 மேல் வருமானம் சம்பாதிப்பவர்கள் பணக்கார பிரிவில் உள்ளனர். அதாவது, ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்து, மொத்த மாத வருமானம் 41,416க்கு மேல் இருந்தால் அவர்கள் பணக்கார பிரிவினர். இதேபோல, ஏழைகள், நடுத்தர மக்களும் கணக்கிடப்பட்டுள்ளனர்.
எனினும், ஆசிய நாடுகளில் லோயர் மிடில் கிளாஸ் மக்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
நிலவு சுருங்கி வருகிறது
நிலவு சுருங்கி வருகிறது.. அதன் அளவில் இனி அதிகரிக்க வாய்ப்பு இல்லை’ என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு இது. நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களை வைத்தே நிலவு சுருங்குவதை கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் உட்பகுதியில் குறைந்து வரும் வெப்பநிலை காரணமாக அப்பகுதி சுருங்குகிறது. உட்பகுதி சுருங்குவதால் அந்த பருமனுக்கேற்ப மேற்பகுதியிலும் சுருக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கீறல்கள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடும் போது சமீப காலங்களில் இந்த கீறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் இந்த சுருக்கம் சட்டென நிகழவில்லையாம். பல பில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
நிலவின் சுருக்கம், மெல்ல மெல்ல காற்றிறங்கும் பலூன் போல இருக்கிறதாம். மேலும் நிலவின் வெப்பநிலை குறைவு காரணமாக இதுவரை அதன் ஆரம் 100 மீட்டர் வரை சுருங்கி விட்டது என்று கூறுகிறார் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனைச் சேர்ந்த தாமஸ் வாட்டர். நிலவின் மேற்பரப்பை காட்டும் புகைப்படங்களை ஆய்வு செய்து, நிலவின் உயர்ந்த பரப்பில் இந்த கீறல்கள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த கீறல்களை ‘லோபேட் ஸ்கார்ப்ஸ்’ என்கிறார்கள். 1970களில் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களிலும் இதே கீறல்கள் இருந்தன. ஆனால் தற்போது ‘நாசா’ எடுத்த படங்களில் 14 புதிய கீறல்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதை வைத்தே நிலவு சுருங்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
‘சுருக்கத்தால் நிலவு முழுக்க மறைந்து விடப் போவதில்லை. அதேசமயம் அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு கிடையாது. இதனால் பூமிக்கும் ஆபத்து வராது’ என்று கூறுகிறார் தாமஸ் வாட்டர்.
வங்கி கணக்கில் மோசடி - உஷார்
வங்கி வாடிக்கையாளர்களிடம் புதிய வழியில் செல்போன் மூலம் மோசடி நடைபெறுவதாக மும்பை போலீசார் எச்சரித்துள்ளனர். இது மற்ற நகரங்களுக்கும் பரவுவதால் சென்னை உட்பட மாநகர மக்களை வங்கிகள் உஷார்படுத்தியுள்ளன.
வங்கிகள், போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திடீரென யாருக்காவது மோசடி பேர்வழியிடம் இருந்து செல்போனில் அழைப்பு வரும். வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது (பொதுவாக,20,000க்குமேல்) என்று கூறுவார் பலே கில்லாடி. கிரடிட் கார்டு மோசடி நடந்திருக்கலாம் என்று பதறுவார் வாடிக்கையாளர். இணைப்பு துண்டிக்கப்படும். மேற்கொண்டு விவரம் அறிய அதே செல்போன் எண்ணுக்கு வாடிக்கையாளர் தொடர்பு கொள்வார். ‘உங்கள் கணக்கில் மேலும் திருடு போகாமல் இருக்க தற்காலிகமாக முடக்குகிறோம். அதற்கு உங்கள் ஐடி, பாஸ்வேர்டு சொல்லுங்கள்’ என்பார் மோசடி பேர்வழி. வங்கி பிரதிநிதி என்று நம்பி ஒப்பிப்பார் வாடிக்கையாளர். அடுத்த சில நிமிடங்களில் பறிபோகும்.
இப்படி வங்கி பிரதிநிதி போல பேசும் ஆண் அல்லது பெண் மோசடி பேர்வழி, நுனி நாக்கு ஆங்கிலத்திலும் அவரவர் மொழியிலும் சந்தேகம் வராதபடி பேசுவார். கிரடிட் கார்டு வாடிக்கையாளர்தான் அவர்களது குறி. வங்கி வாடிக்கையாளரில் பெரும்பாலோர் வங்கியின் லேண்ட்லைன் எண், மேலாளர், குறைதீர்ப்பு நடுவர் எண்களை தெரிந்து வைத்திருக்காதது மோசடி கும்பலுக்கு சாதகமாகிறது. இதுபற்றி ஏராளமான புகார்கள் வருவதாக வங்கி, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அம்மாவுக்கு வயசு 2 லட்சம்
மனித குலத்தின் முதல் தாயாக கருதப்படும் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒரு பெண்ணிடம் இருந்தே தோன்றியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் பற்றியும் இந்த முதல் பெண் எப்போது வாழ்ந்தாள் என்பது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியிருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பெருகிவரும் மக்கள்தொகை, வழக்கொழிந்த மக்கள் இனம் உள்பட பல அம்சங்களை வைத்து கணித ரீதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் மாரக் கிம்மல் கூறியதாவது:
மனித உடலில் 100 லட்சம் கோடிக்கும் அதிகமான செல்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மைட்டோகாண்ட்ரியா என்ற பொருள் உள்ளது. செல்லுக்கு தேவையான சக்தியை இவைதான் வழங்குகின்றன. இதில் இருக்கும் பகுதிப் பொருள் ஜீனோம். இந்த ஜீனோமின் குணங்கள் தாயிடம் இருந்தே வருகின்றன. எத்தனை பரம்பரைகள் ஆனாலும், இந்த ஜீனோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா ஆகியவை தாயுடன் தொடர்புடையதாகவே இருக்கும். இதன் அடிப்படையில் வித்தியாசமான மரபணு பண்புகள் கொண்ட 10 மனித மாதிரிகளை உருவாக்கினோம். அதில் இருந்து அதற்கு முந்தைய வம்சம், அதற்கும் முந்தைய வம்சம் என்று 10 மாதிரிகளைக் கொண்டு தனித்தனியே கணக்கிடப்பட்டது. இதன்மூலம், முதன்முதல் ஜீனோம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தெரியவந்துள்ளது. மனித குலத்தின் முதல் தாயாக கருதப்படும் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.
கண்காணிப்பை மீறி போதை ஆசாமி விமான நிலையத்தில் ....
பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பை மீறி போதை ஆசாமி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் புகுந்து அங்கு நின்றிருந்த ஒரு கண்காணிப்பை மீறி போதை ஆசாமிஏற முயன்றிருக்கிறார். ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என வழக்கம்போல விசாரணை நடக்கிறது.
பொதுவாக, விமான நிலையத்தில் வழக்கமான நாட்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு இருக்கும். கார் பார்க்கிங், விமான நிலைய வராண்டா வரை உள்ளூர் போலீசார் இருப்பார்கள். அடுத்தகட்டமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CSF) இருப்பார்கள். மூன்றாவது கட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் (PCAS) இருப்பார்கள். இதுபோக, விமான நிறுவனங்களின் பாதுகாப்பு வீரர்களும் இருப்பார்கள். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படையினர், சிறப்பு போலீசார் என கூடுதலாக மூன்று அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.
சுதந்திர தினம் என்பதால் அன்றும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி எப்படி ஒருவர் விமானம் வரை சென்றார் என்பது பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன செய்கிறோம் என தெரியாமல் போதையில் ஒருவர் இவ்வளவு தூரம் செல்ல முடிந்தால், திட்டமிட்டு செயல்படுத்தும் தீவிரவாதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்?
இப்படி நடப்பது முதல் முறையல்ல. ஓடுபாதையில் நாய் ஓடுவது, மர்ம நபர்கள் விமானம் வரை செல்வது என பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அத்துமீறும் மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைபவர்கள் பிடிபடும்போது அவர்களை போதை ஆசாமி என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி பிரச்னையை அமுக்கிவிடுகின்றனர்.
ஸ்டேட் போலீஸ், சென்ட்ரல் போலீஸ், சாதாரண உடையில் உளவு போலீஸ், திரும்பும் இடமெல்லாம் கண்காணிப்பு கேமரா என இத்தனை இருந்தும் அத்துமீறல்கள் நடப்பது பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
விமான நிலையத்தில் புல் வெட்டுபவர், கட்டுமான தொழிலாளர், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருடன் பாதுகாப்பு போலீசார் பழகுவது, அந்த பரிச்சயம் காரணமாக ஐ.டி. கார்டைக்கூட சோதனை செய்யாமல் உள்ளே அனுமதிப்பது போன்றவை தீவிரவாதிகள் விமான நிலையத்தின் உள்ளே நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அதற்குள் விழித்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது.
Subscribe to:
Posts (Atom)



































