Tuesday, August 10, 2010 | By: INDIA 2121

இந்தியா - வங்கதேசம் இணைப்பு

 அசாம், அருணாச்சல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகியவற்றை வடகிழக்கு மாநிலங்கள் என்கிறோம். நாடாளுமன்றத்தில் 25 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து டெல்லிக்கோ சென்னைக்கோ வருபவர்கள், இந்தியாவுக்கு சென்று வருகிறோம் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
இது காஷ்மீரில் சொல்வதுபோல் தனிநாடு எண்ணத்தால் அல்ல. மெயின் இந்தியாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே வங்காள தேசம் இருப்பதால் தோன்றும் தூர உணர்வு. பூட்டானுக்கும் வங்கதேசத்துக்கும் மத்தியில் ஓரிடத்தில் குறுகலான மேற்குவங்க நிலப்பரப்பு இருக்கிறது. அந்த வழியாகத்தான் சுற்றிவளைத்து செல்ல வேண்டியிருக்கிறது. வங்கதேசம் உருவாக இந்தியா காரணமாக இருந்தாலும் அந்த நாட்டுடன் நல்லுறவு இல்லை. எனவே அதன் வழியே வடகிழக்கை அடைய இயலவில்லை. அந்த நிலை விரைவில் மாறும் என்ற செய்தி வந்திருக்கிறது.
வங்கதேசம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்திய மக்களும் வாகனங்களும் சரக்குகளும் செல்ல அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. அந்த இணைப்புக்கான நவீன சாலை, ரயில்பாதை வசதிகள் இப்போது இல்லை. அவற்றை ஏற்படுத்த இந்தியா 100 கோடி டாலர் கடன் வழங்கியுள்ளது. நேபாளம், பூட்டான் நாடுகளும் இந்த பாதைகளை பயன்படுத்தலாம். தெற்கு ஆசியாவின் நான்கு நாடுகள் இவ்வாறான ஒரு இணைப்பை உருவாக்க முன்வந்திருப்பது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பமாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வங்கதேசம் ஏழை நாடு. ஆனால், பாகிஸ்தானை போல அங்கும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் மூலமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சியின் பலன்களை முகர்ந்து பார்க்கக்கூட முடியாத நிலையில் தவித்தது. முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா பிரதமர் ஆன பிறகு அந்த பரிதாப நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு எடுத்தார். ஜனவரியில் டெல்லி வந்தபோது அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சென்றார். அதன் விளைவுகளில் ஒன்று இந்த இணைப்பு.
சம்பந்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் இதனால் பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதால் தீவிரவாதிகள் இந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க எதையும் செய்வார்கள். இருநாட்டு அரசுகளும் ஆரம்பத்திலேயே அதற்கு தயாராவது நல்லது.
Monday, August 9, 2010 | By: INDIA 2121

காமன்வெல்த் விளையாட்டு

 
காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை பாராட்ட வேண்டும். மீடியா மொத்தமும் அடித்து துவைத்து உலர்த்தினாலும் அசராமல் சிரிக்கிறார். ‘நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார்.
‘பிரதமரும் சோனியா காந்தியும் சொன்னால் ராஜினாமா செய்வேன் ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு’ என்று அவர் சொல்வதை கேட்டு எதிரிகளும் புன்னகைப்பார்கள். கல்மாடிக்கு எதிரிகளுக்கு  பஞ்சமில்லை. செல்வாக்கு மிக்கவர்கள். அதனால்தான் கல்மாடியின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய முடிந்தது.
அக்டோபர் 3 முதல் 14 வரை காமன்வெல்த் போட்டிகள் நடக்க இருக்கிறது. புதுடெல்லியை புரட்டிப் போட்டு பத்தாயிரம் கோடி செலவில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். 1951, 1982ல் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திய அனுபவம் டெல்லிக்கு இருக்கிறது. ஆனாலும் இது பிரமாண்ட ஏற்பாடு. 2020ல் ஒலிம்பிக் போட்டியை கொண்டுவர போடும் அடித்தளம். வேலைகள் மேயில் முடிந்திருக்க வேண்டும். இன்னும் நடக்கிறது. போட்டி முடிந்த பிறகும் தொடரக்கூடும்.
சரமாரியாக ஊழல் புகார்கள் பறக்கின்றன. பல நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக மணிசங்கர் அய்யர் தொடங்கிவைத்தார். அது ஒரு புகாரே அல்ல. டெல்லிக்கு வரும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு லட்சம் டாலர் பணமும் மொத்த செலவுத் தொகையும் தருவதாக வாக்குறுதி கொடுத்துதான் 46க்கு 22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் கனடாவை தோற்கடித்து இந்தியா இந்த போட்டியை நடத்த அனுமதி பெற்றது. அப்போது ஹைதராபாதில் நாம் ஆப்ரிக்க , ஆசிய விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினோம். இந்தியாவிடம் வசதி இருக்கிறது என்ற நம்பிக்கை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது ஊழலாகாது.
பல்லாயிரம் கோடிகள் புழங்கும் திட்டத்தை செய்கூலி சேதாரம் இல்லாமல் நிறைவேற்ற முடியாது. இந்தியாவில் நடந்த முதல் ஊழல் இதுதான் என்பது போல சிலர் துள்ளிக் குதித்து விமர்சிப்பது போலித்தனம். 826 பதக்கம் ரெடியாக இருக்கிறதாம். 76 நாடுகள் பங்குபோட வருகின்றன. 2006 மெல்பர்ன் போட்டியில் இந்தியாவுக்கு 50 கிடைத்தது. டெல்லியில் அதிகம் கைப்பற்ற வழி தேடுவோம்.
Saturday, August 7, 2010 | By: INDIA 2121

ஒரு இந்து இளைஞனின் மரணம்- பாகிஸ்தானில் எழுச்சி

 ஒரு இந்து இளைஞனின் மரணம் பாகிஸ்தானின் மனசாட்சியை தூக்கத்தில் இருந்து உலுக்கி எழுப்பியிருக்கிறது.
இஸ்லாமாபாத் அருகே விமானம் மலையில் மோதி 152 பேர் பலியானார்கள். லண்டனில் இளைஞர் நாடாளுமன்ற முகாமுக்கு சென்று திரும்பிய 6 பேர் அதில் அடங்குவர். அவர்களில் ஒருவர் பிரேம்சந்த். சொட்டுநீர் பாசனத்தின் மூலம் பாகிஸ்தானில் வேளாண்மை புரட்சி ஏற்படுத்தலாம் என்று கட்டுரை சமர்ப்பித்து பாராட்டு பெற்றிருந்த இளைஞர். அவரது சவப்பெட்டி மேல் பெயருடன் ‘கஃபிர்’ என்ற வார்த்தையை சேர்த்திருந்தார் அதிகாரி.
இறுதிச் சடங்குக்காக பெட்டி மீது மதத்தை குறிப்பிடுவது வழக்கம். இந்து என்பதற்கு பதில் அப்படி எழுதி இருந்ததை பார்த்து பிரேம்சந்தின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் பார்வையில் படாமல் மைபூசி மறைத்து, ‘நாங்கள் உன்னை நேசிக்கிறோம்’ என எழுதி வைத்தனர். என்றாலும், அஞ்சலி செலுத்தும்போது ஒரு மாணவன் அடக்க முடியாமல் கொட்டி விட்டான். பெற்றோரும் உறவினர்களும் துடித்துப் போனார்கள். மற்றவர்களும் குமுறினர்.
கஃபிர் என்பது அரபு வார்த்தை. முஸ்லிம் அல்லாதவர்களை குறிப்பிடுவது. இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காதவர் என்பது அதன் அர்த்தமாக இருந்தாலும், மத தீவிரவாதிகள் அதை ‘எதிரி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியதால் அவதூறான சொல்லாக தோற்றம் பெற்றுவிட்டது. மரணத்தில்கூட ஒரு மனிதனுக்கு உரிய மரியாதை வழங்க நமக்கு தெரியவில்லையே என்று இளைஞர்கள் கொதிப்புடன் இணைய தளங்களில் எழுதுகின்றனர். அனைத்து மதங்களையும் மதிக்க இறைவன் கட்டளையிட்டாலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஏன் பின்பற்றுவதில்லை; இதுதான் சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களின் நாட்டுப்பற்றுக்கு வழங்கும் அங்கீகாரமா என்று சாட்டையடி கொடுக்கின்றனர்.
மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முற்படும் சக்திகள் செல்வாக்குடன் செயல்படும் பாகிஸ்தானில் இந்த கண்டன குரல்கள் கேட்பது அசாதாரண விஷயம். படித்தவர்களும் பத்திரிகைகளும்கூட அரசின் அநீதிகளை மவுனமாக சகித்துக் கொள்ள பழகிவிட்ட சூழலில் பாகிஸ்தான்இளைஞர்களின் ஆவேசம் ஆரோக்கியமான புதுக்காற்று.
Friday, August 6, 2010 | By: INDIA 2121

இந்தியர்கள் முதலிடம்

 இந்தியர்கள்தான் நேர்த்தியாக உடை அணிந்து வேலைக்கு செல்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. அரசு நிர்வாகம், ஊழல், சுகாதாரம், ஏழ்மை என்று பல ஆய்வுகளில் மட்டமான இடம் கிடைத்த வருத்தத்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் பரிசு.
வேலைக்கு செல்லும்போது ஸ்மார்ட்டாக உடை அணிகிறீர்களா? அரை டிரவுசர் அணிந்து வேலைக்கு போவது சரிதானா? இவைதான் கேள்விகள். 24 நாடுகளில் 12 ஆயிரம் பேரிடம் கேட்கப்பட்டது. இந்தியர்களில் 58 சதவீதம் பேர் முதல் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். 62 சதவீதம் பேர் ஆபீசுக்கெல்லாம் டிரவுசரில் போகக்கூடாது என்கின்றனர். அந்த அடிப்படையில், அலுவலகத்துக்கு கண்ணியமான முறையில் உடையணிந்து செல்பவர்களில் இந்தியர்கள்தான் முதலிடம் என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அடுத்து தென் கொரியா (47%), சீனா (46), அமெரிக்கா (37) கடைசியில் ஹங்கேரி (12).
வேலை என்று வந்துவிட்டால் அதற்கான சம்பிரதாயத்தை பின்பற்றுவதே முறை என்று நம்மவர்கள் கருதுகின்றனர். 1980 வரை உலகமே அப்படி நினைத்தது. கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்ற வார்த்தைகள் பிரபலமாக தொடங்கியதும் அலுவலகத்துக்கு கேஷுவல் டிரஸ் போதாதா என்ற கேள்வி எழுந்தது. கோட், சூட், டையுடன் விடிய விடிய உழைப்பது நரகத்தில் உழல்வதற்கு சமம். நேரம் காலம் பாராமல் சாப்ட்வேர் இன்ஜினியர்களை வேலை வாங்க சிலிக்கான் வேலி தொழிலதிபர்கள் அறிமுகம் செய்த உத்தி ஷார்ட்ஸ்,ஷர்ட் அனுமதி.
வழக்கமான உழைக்கும் வர்க்கத்தில் இருந்து தங்களை வித்தியாசமாக காட்டிக் கொள்ள வேறு பிரிவினரும் சம்பிரதாய உடையை உதறினர். கல்லுடைப்பது போன்ற கடினமான பணிகளை செய்பவர்களுக்கு ஜீன்ஸ் ஷர்ட் வசதியாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘படைப்பாளிகள்’ ஜீன்ஸ் + தொளதொளா சட்டைக்கு மாறினர். உடை விதிகள் அமலில் இல்லாத நிறுவனங்களில்கூட, உடையில் ஆர்வம் காட்டாதவர்கள் வேலையிலும் ஏனோதானோ என்றுதான் இருப்பார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்களாம்.
இப்போதெல்லாம் அநேக கல்லூரிகளில் பார்மல் உடைக்கு மட்டுமே அனுமதி.
சில பெண்கள் கல்லூரிகளில் கூட புடவையில் வந்தால் மட்டுமே அனுமதி
நேர்த்தியாக உடை அணிபவர்கள்தான் பெரிய பொறுப்புகளுக்கு முன்னேற முடியும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.


Wednesday, August 4, 2010 | By: INDIA 2121

நண்பர்கள் தினம் கொண்டாடலாமா?

அப்பா தினம், அம்மா தினம் எல்லாம் மேலைநாட்டு தயாரிப்புகள். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனியாக வாழ பயிற்சி பெறும் கலாசாரம் அவர்களுடையது. பிரியமானவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள் ஒதுக்கி மனதில் குறுகுறுப்பு ஏற்படாமல் தவிர்க்கிறார்கள். வாழ்த்து அட்டை, பரிசுப் பொருள் தயாரிப்பாளர்கள் இதனால் பலனடைகிறார்கள்.
இந்திய கலாசாரம் இறுதிவரை இணைபிரியாமல் வாழ்வது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை, முதுமையிலும் மறவாத பள்ளிப்பருவ நட்பு நமக்கு பழகிப் போன விஷயங்கள். எனவே, ‘தினம்’ கொண்டாட இங்கே அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை. என்றாலும், எதையாவது சாக்கிட்டு ஸ்வீட் எடு கொண்டாடு என்று குதூகலிப்பது மாணவ சமுதாயத்தின் வாடிக்கை. 24 மணி நேரமும் நட்பு என்ற கடலில் களைப்பில்லாமல் நீந்திக் கொண்டிருக்க முடியும் அவர்களால். அந்த ஜீவன்களை போய் ‘நண்பர்கள் தினம் கொண்டாடாதே’ என்று தடுப்பவர்கள் எத்தனை பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டும்!
தர்ம சேனா, பஜ்ரங் தளம் என பல பெயர்களால் அறியப்படும் இந்து தீவிரவாத அமைப்புகள் அந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளன. தனிமனித சுதந்திரத்துக்கு முதல் மரியாதை அளிக்கும் அந்த மதத்துக்கு இவர்களைவிட எதிரிகள் எவருமில்லை. சட்டீஸ்கர் மாநிலத்தின் பல நகரங்களில் இந்த கூட்டம் தாண்டவம் ஆடியிருக்கிறது. நண்பர்கள் தின வாழ்த்து சொல்ல பொது இடங்களில் சந்தித்த மாணவ மாணவிகளை துரத்தி துரத்தி தாக்கி, முகத்தில் கரி பூசி, தலை முடியில் கோந்து தடவி பகிரங்கமாக அவமானப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு மங்களூரில் இக்கூட்டம் மாணவிகளை அசிங்கப்படுத்தி மக்களின் ஆவேசத்தை சந்தித்தது. இந்த சம்பவங்களை போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. மகாராஷ்டிராவில் பரிவாருக்கு பதிலாக போலீசே அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது. புனே நகரில் பண்ணை வீட்டில் கூடிய 350 மாணவ மாணவிகளை சுற்றி வளைத்து கைது செய்ததாம்.
தீவிரவாதிகள், கொடுங் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவ விட்டு அப்பாவிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ள கூச்சப்படாத ஒரு சீருடைப் படை இந்த நாட்டில் ஒழுக்கத்தை காப்பாற்ற தடி சுழற்றுவது காமெடியா டிராஜெடியா தெரியவில்லை.
Tuesday, August 3, 2010 | By: INDIA 2121

இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தானுக்கு குட்டு

 ஊரெல்லாம் மகாராஜாவை பார்த்து, ‘அடடா, என்ன அழகான ஆடை!’ என்று உச்சு கொட்டி வியந்தபோது, ஒரு குழந்தை மட்டும் ‘அரசர் ஏன் அம்மணமாக இருக்கிறார்?’ என்று கேட்டதாக கதை கேட்டிருக்கிறோம். அரசனை பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல என்பது தெரியாததால் அது உண்மையை பேசிவிட்டது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கும் குழந்தை மனம். அமெரிக்காவிடம் ஆயுதமும் பணமும் வாங்கிக் கொண்டு அதன் படைகளை ஒழிக்க தலிபானுக்கு உதவுகிறது பாகிஸ்தான் என்ற உண்மை விக்கிலீக் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருப்பதை குறிப்பிட்ட கேமரூன், ‘பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக நடிக்கிறது பாகிஸ்தான். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாது’ என்று எச்சரித்தார்.
பாகிஸ்தானுக்கு கோபம். உண்மை பேசுவதே தப்பு; அதை இந்திய மண்ணில் நின்று பேசுவது கொடுங்குற்றம் ஆயிற்றே. இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது. ஐ.எஸ்.ஐ தலைவர் லண்டன் விசிட்டை கேன்சல் செய்துவிட்டார். கேமரூன் தைரியமான குழந்தையும்கூட. ‘உண்மையை ஓப்பனாக சொன்னேன். என் அரசு ஒளிவுமறைவு இல்லாமல் இனி அப்படித்தான் வெளிப்படையாக செயல்படும்’ என்று கூறிவிட்டார். கேமரூன் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவரது அமைச்சரும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையும் பயங்கரவாத ஆதரவையும் பற்றி நினைவு தெரிந்த நாளிலிருந்து கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி சமாதிக்கு வந்து மலர் வளையம் வைக்கும் வெளிநாட்டு தலைவர்கள் அத்தனை பேரும் இந்திய தலைவர்களோடு விருந்து சாப்பிடும் வேளையில் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். பகிரங்கமாக சொல்வதில்லை. ஒரு மதச்சார்பு அரசை பகைத்துக் கொள்வானேன் என்ற ராஜநீதி அவர்களை தடுக்கிறது. 90 ஆயிரம் ஆவணங்கள் அம்பலப்படுத்திய பிறகும் உலகமகா வல்லரசு மென்று முழுங்கும் நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் சர்வதேச அரசியலில் நேர்வழியில் பயணம் செய்வதென்று எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது.
வாய்மை தூய்மை நேர்மை போன்றவை அரசு கடைபிடிக்க வேண்டிய நெறிகள் அல்ல என்று எந்த சாணக்கியனும் சொல்லவில்லை.
Monday, August 2, 2010 | By: INDIA 2121

டாக்டர்கள் சிபாரிசு செய்யும் விளம்பரங்கள்

 
  டாக்டர்கள் சிபாரிசு செய்வது என்று சொல்லி ஒரு பொருளை விற்றால் மக்கள் நம்பி வாங்குவார்கள். அது டாக்டர் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. டாக்டரே போலியாக இருப்பாரோ என்ற கேள்வி எழும் நிலைமை ஏற்பட்ட பிறகு இந்த மாதிரியான விளம்பரத்துக்கு பலன் கிடைத்தால் பெரிய விஷயம்.
ஆனால், டாக்டர்கள் தம்மை பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்று தடை இருக்கும் நாட்டில், டாக்டர்களின் சங்கம் எப்படி ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்ய முடியும்? இரண்டு லட்சம் டாக்டர்கள் உறுப்பினராக இருக்கும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அதைத்தான் செய்கிறது. டிராப்பிக்கானா பழரசம், குவாக்கர் ஓட்ஸ், டெட்டால், லைசால், அக்வாகார்ட், பேம்பர்ஸ் நாப்கின் என்று பல பொருட்கள் ஆரோக்கியத்துக்கு அல்லது சுகாதாரத்துக்கு நல்லது என்று ஐ.எம்.ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தங்கள் விளம்பரங்களில் குறிப்பிடுகின்றன. இதற்காக சில கோடிகள் ஐ.எம்.ஏ.க்கு தரப்படுகிறது.
உலகத்திலேயே பொருள் தயாரிப்பாளர்களின் விளம்பரத்துக்கு ஒத்தாசையாக இருந்து அதற்காக பணம் பெறும் முதலாவது மருத்துவ அமைப்பு இதுதான். தயாரித்து பதப்படுத்திய பழச்சாறு தினமும் 200 மில்லிக்கு மேல் குழந்தைகளுக்கு கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும், அதிக குண்டாகும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதை சுட்டிக்காட்டி ஒரு டாக்டர் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு புகார் அனுப்பினார். கமிஷன் ஐ.எம்.ஏ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. ‘இனி அப்படி செய்ய மாட்டோம். ஆனால் ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்தால் நிறைய நஷ்ட ஈடு கொடுக்க நேரும்’ என்று ஐ.எம்.ஏ முறையிட்டுள்ளது. இந்த மாதம் கூடி ஒழுங்கு விதிகளை திருத்தி இதுபோன்ற அவலங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) கூறியுள்ளது.
போலி, காலாவதி பிரச்னைகளால் பொதுமக்கள் மிரண்டு நிற்கும்போது தவறான சான்றிதழ் மூலம் ஆபத்துக்கு கதவு திறக்கும் வேலையை மருத்துவ அமைப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தனி மனிதர்கள்தான் பணம் சம்பாதிக்க பறக்கிறார்கள் என்றால், எந்த தேவையும் இல்லாத தொழில் அமைப்புகள் எதற்காக கோடிகளை தேடி ஓட வேண்டும் என்பதற்கும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு ஐ.எம்.ஏ.க்கு இருக்கிறது.
Related Posts with Thumbnails