Wednesday, August 18, 2010 | By: INDIA 2121

ஒரு எம்பியின் சம்பளம் 1 லட்சம்

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்துவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பது ஆச்சரியம்.
ஒரு எம்.பி.யின் சம்பளம் ரூ.16,000. ஒரு பியூனின் சம்பளத்தைவிட இது குறைவு என்று லாலு பிரசாத் குமுறுகிறார். தப்பான வழியில் நிறைய சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதால் மற்றவர்களுக்கும் நல்ல சம்பளம் மறுப்பது நியாயமல்ல என்கிறார். இந்த கோரிக்கை புதிதல்ல. அதை ஆராய்ந்த குழு, சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த சிபாரிசு செய்தது. எண்பதாயிரம். அது அமைச்சரவை செயலாளர் வாங்கும் சம்பளம். அதைவிட ஒரு ரூபாய் மேலே போட்டுக் கொடுங்கள் என்று எம்.பி.க்கள் கேட்டு, அரசும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
மாவட்டத்தை ஆட்சி செய்யும் கலெக்டர்களே பிரமாண்டமான பங்களாவில் வசித்தாலும் குடும்ப செலவுகளை சமாளிக்க திணறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் எந்த அரசியல்வாதியும் குடும்ப செலவுக்கு திண்டாடுவதாக சரித்திரமும் இல்லை,பூகோளமும் இல்லை . ஆனால்  விலைவாசி யாரையும் விட்டு வைக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தனி. சம்பளத்தை அப்படியே கட்சிக்கு கொடுத்து விட வேண்டும். மாத செலவுகளுக்கு கட்சி ஒரு சிறு தொகை கொடுக்கும். அதை வைத்து சமாளித்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இது தெரியும். அதனால் அதிகமாக தொந்தரவு கொடுப்பதில்லை. மற்ற கட்சியினர் அவ்வளவு அதிர்ஷ்டம் செய்யவில்லை. தினம் நூறு பேர் வருவார்கள். அதில் பலருக்கு சாப்பாடு போட்டு, ஊர் திரும்ப பஸ் கட்டணமும் கொடுக்க வேண்டியிருக்கும். கட்சிக்காரர், தெரிந்தவர், பத்திரிகையாளர் என்று தினமும் ஒரு வீட்டில் ஒரு நல்லது கெட்டது நடக்கும். மொய் எழுத வேண்டும்.
மக்கள் பிரதிநிதி என்றால் இப்படி பல வகையிலும் செலவுகள் இருக்கும். அதற்கு பணம் இல்லையென்றால் என்ன ஆகும்? மக்கள் சந்திப்பை தவிர்க்கலாம்; அல்லது தவறான வழிகளை நாடலாம். இது தெரிந்து சில மாநிலங்கள் எம்.எல்.ஏ சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளன.
மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் வாழ்ந்த நாடு.எந்த அரசியல்வாதியும்
அரசின் சம்பளத்தை மட்டுமே நம்பி இங்கு வாழவில்லை.பதவி வருமுன் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும்,பதவிக்கு வந்த பின்பு பல கார்கள்,பல பங்களாக்கள்
பலதரப்பட்ட  தொழில்கள்,கான்ராட் என எல்லாவித செல்வ செலிப்போடுதான் வாழ்கிறார்கள்.ஏன் வட்டம்,மாவட்டம் கூட அன்றாட செலவுக்கு திண்டாடவில்லை.
சம்பளத்தை அதிக படுத்த சொல்லும் லல்லு பற்றி நான் சொல்ல வேண்டாம்.உலகுக்கே
தெரியும்.இந்தியாவில் இருக்கும் அரசியவாதிகளில் யார் செலவுக்கு திண்டாடுகிறார்கள்.
அரசு அது பற்றி ஒரு சர்வே எடுக்கட்டும்,எந்த அரசியவாதி கஷ்டபடுகிரானோ அவர்களுக்கு மட்டும் சம்பளம் ஏற்றலாம். மற்றபடி தேவையில்லாமல் மக்களின் வரிபணத்தை வீணடிக்க வேண்டாம்.அந்த பணத்தில் மக்களுக்கு நல்ல சாலை வசதி,குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரலாமே? இந்தியாவில்
பீகார்,ஒரிசா போன்ற மாநிலங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத கிராமங்கள் ஏராளம்.இது போன்ற குறைபாடுகளால் தான் இந்த மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ளது.அரசு திட்டங்கள் தீட்டும் போது தொலை நோக்கு
பார்வையோடு மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்களுக்கு இது போன்ற நிதிகளை
பயன்படுத்தலாமே.
Tuesday, August 17, 2010 | By: INDIA 2121

பாஸ் வேலைக்கு ஆண்களே தகுதி

 ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்வதை பெண்களே விரும்பவில்லை என்கிறதாம் ஒரு சர்வே. பிரிட்டனில் நடத்தியது. மூவாயிரம் ஊழியர்கள், அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தொகுத்திருக்கின்றனர். பாஸ் பொறுப்புக்கு ஆண்களே சரியானவர்கள் என்று 75 சதவீத ஆண்களும் 63 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.
தலைமை பதவியில் இருப்பவரை பாஸ் என்று குறிப்பிடுவது சகஜம் என்றாலும் அவர் பெண்ணாக இருந்தால் பாஸ் என அழைப்பவர்கள் அரிது. பெண்கள் வேலைக்கு போக தொடங்கிய காலத்தில் இருந்தே இப்படியான ஆய்வுகள் நடக்கின்றன. முடிவுகள் வேறு மாதிரி இருந்ததில்லை. காரணங்களும் கூட.
சொந்த பிரச்னைகளை வேலையுடன் சம்பந்தப்படுத்தி குழப்புவதும், முதுகில் குத்துவதும் பெண்கள் சொல்லும் குறைகள். குத்திக் காட்டுவது, சந்தேகப்படுவது, மன பிராந்தி, மூட் மாற்றம் என்பவை ஆண்கள் தரும் பட்டியல். ஆண் பாஸ் என்றால் நாற்காலியை பற்றி அனாவசியமாக பயப்படுவதில்லை; எது சொன்னாலும் காதுகொடுத்து கேட்பார்; புகார்கள் மீது நியாயமாக முடிவு எடுப்பார் என இரு தரப்பும் புகழ்மாலை சூட்டுகின்றன.
ஆணுக்கு அடுத்த இடம்தான் பெண்ணுக்கு என்பது எல்லா நாகரிகத்திலும் மனித மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திரா காந்திகளும் நூயிகளும் விதிவிலக்குகளாக பார்க்கப்படுகின்றனர். உதைக்க உரிமையுள்ளவன் கணவன் என்று மனைவி தீர்ப்பெழுதும் நிலை மாறவில்லை. பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கிய ஒரு நூற்றாண்டுக்குள் தலைகீழ் மாற்றம் சாத்தியமில்லை. அத்தகைய பெண்கள் சிறுபான்மை. அவர்களிலும் இடறிவிழாமல் ஏணியேறி மேலிடத்தை எட்டுவோர் இன்னும் குறைவு. இந்த பயணத்தில் எதிர்கொண்ட அநீதிகள் ஆழ்மனதில் ஏற்படுத்தும் காயங்கள் வாழ்நாளில் ஆறக்கூடியவை அல்ல. சுலபத்தில் யாரையும் நம்ப மறுப்பது அந்த வலியின் வெளிப்பாடு. அதோடு சிறுபான்மை பார்வையும் சேரும்போது வெளிமதிப்பீடுகள் இப்படித்தான் அமையும்.
என்றாலும், 37 சதவீத பெண்களும் 25 சதவீத ஆண்களும் பெண் பாஸ் ஓகே என்று சொல்வதை உதாசீனப்படுத்த முடியுமா, என்ன? அடுத்த நூற்றாண்டில் இந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை இன்று யாராலும் கணிக்க முடியாது.
Friday, August 13, 2010 | By: INDIA 2121

மொபைல் தண்ணியில விழுந்துடுச்சா? உடனே எடுத்து குக்கர்ல போடுங்க...

 
தண்ணீரில் நன்கு ஊறிய செல்போனை எடுத்துக் கொள்ளவும். அதை ‘டிரையர் பாக்ஸில்’ போட்டு மூடவும். அரை மணி நேரம் கழித்து உங்கள் சூப்பர் செல்போன் ரெடியாகிவிடும். தேவைக்கேற்ப பவுச், டேக் சேர்த்து சட்டை பாக்கெட்டிலோ, பெல்ட்டிலோ செருகிக் கொள்ளலாம். இது காமெடி ‘சமையல்’ குறிப்பு அல்ல. நிஜம்தான்.
ரசம், தண்ணீர் தொட்டி, டாய்லெட்டில் செல்போன் தவறிவிழுந்த அனுபவம் பலருக்கு இருக்கும். மழைநீரில் குளிக்காத செல்போன்களே பெரும்பாலும் இருக்காது. வெளிப்பகுதியை டவல் போட்டு துடைத்து, பல மணி நேரம் வெயிலில் காய வைத்து சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றாலும், முதல் ஸ்குரூவை கழற்றியதுமே ‘நோ வாரன்டி’ என்று கறாராக சொல்லிவிடுவார் சர்வீஸ் சென்டர் ஊழியர். செல்போனின் உள்பகுதிகளில் புகுந்த தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் காய்வதில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறது ஜப்பானை சேர்ந்த ஜே.எம்.சி. ரிஸ்க் சொல்யூஷன்ஸ் நிறுவனம். தண்ணீரில் நனைந்த செல்போனை காயவைப்பதற்காக ‘டிரையர் பாக்ஸ்’ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது. சிறிய ஜெராக்ஸ் மெஷின் சைஸில் இருக்கிறது கருவி. நனைந்த செல்போனை இதனுள் போட வேண்டும். அரை மணி நேரத்தில் செல்போனின் உள்பாகங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் முழுவதும் காய்ந்துவிடுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்பட பல நகரங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், செல்போன் சர்வீஸ் சென்டர் உள்பட பல இடங்களிலும் விரைவில் இக்கருவிகள் வைக்கப்பட உள்ளன. செல்போனை உலர்த்தித் தர ரூ.585 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இக்கருவி பற்றி ஜே.எம்.சி. அதிகாரிகள் கூறுகையில், “செல்போன் ஸ்கிரீன், உள்ளே இருக்கும் சிப்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். சற்று வெப்பம் அதிகரித்தாலும் செல்போன் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுவிடும். எனவே, அதற்கேற்ற வெப்பம் தரும் வகையில் டிரையர் பாக்ஸ் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
டோக்கியோவுக்கு வந்து, சென்னைக்கு வந்து, நம்ம ஏரியாவுக்கு டிரையர் பாக்ஸ் வருவதற்குள் தண்ணீரில் செல்போன் விழுந்துவிட்டால் என்ன செய்வது? வெளிப்பகுதியை நன்கு துடைத்து, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போடுங்கள். ஈரத்தன்மையை அரிசி எடுத்துவிடும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

குழந்தை திருமணம்

 ஒவ்வொன்றுக்கும் ஒரு வயது இருக்கிறது. சிறு வயது விளையாட்டுக்கானது. வாலிப வயது காதல் வயது. அப்புறம்தான் திருமண வயது. இது உலக வழக்கம். ஆனால் விளையாடும் வயதிலேயே திருமணம் முடிக்கும் கொடுமை இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னமும் தொடர்கிறது. என்ன நடக்கிறது, இதற்கு அப்புறம் என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியாத சிறுவர்களை, சிறுமிகளை திருமண பந்தத்தில் தள்ளும் வழக்கம் வட இந்தியாவில்தான் அதிகம். தமிழகத்திலும் அதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டு விடுகிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குட்டிக் கிராமம் கரடிமடை. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நடப்பதாக இருந்துள்ளது. படிக்க வேண்டிய வயதில் திருமணமா? என மனம் வெறுத்த சிறுமி அது குறித்து வருவாய்த் துறையினர் நடத்திய மக்கள் குறைதீர்ப்பு முகாமில் புகார் கொடுத்துள்ளார். இரு குடும்பத்தினரையும் கூப்பிட்டு விசாரணை நடத்திய வருவாய்த் துறையினர் கட்டாய திருமணம் நடத்துவது குற்றம், மீறி நடத்தினால் அத்தனை பேரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த பிறகு திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டாய திருமணம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்த குடும்பத்தினர், சிறுமியை மீண்டும் பள்ளிக்கு அனுப்பவும் சம்மதித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் பெண் குழந்தைகளைப் பெற்றதில் இருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாக நினைக்கும் பெற்றோர், எவ்வளவு சீக்கிரம் பெண்ணை கட்டிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடமையை முடித்துவிட நினைக்கின்றனர். நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு, சிறுமியாக இருக்கும்போதே, திருமணம் என்ற கிணற்றில் தள்ளி விடுகின்றனர். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. பெற்றோர் எப்படியோ, அடுத்த தலைமுறை சுதாரிப்பாக உள்ளனர். உறவினர் மூலமோ அல்லது நேரடியாகவோ புகார் கூறி இதுபோன்ற கட்டாய திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். காரணம் கல்வி அறிவு. ஒரு தலைமுறை படித்து விட்டாலே போதும். பால்ய விவாகம் என்றால் என்ன எனக் கேட்கும் வகையில் அடுத்த தலைமுறை வந்துவிடும். அதற்காகவாவது கல்வி அவசியம். 
 
கொசுறு செய்தி
‘திருமண வயது’ என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயதை எட்டாத சிறுவன், சிறுமியர் மனமொத்து திருமணம் செய்து கொண்டால் அது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் குமாரும்(18), பூனம் சர்மாவும்(16) வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். இதை ஏற்றுக் கொள்ளாத பூனத்தின் பெற்றோர் ஜிதேந்தர் தங்களது மகளை கடத்தியதாக போலிசில் புகார் செய்தனர். பூனம் ஒரு மைனர் என்பதால் போலீசாரும் வழக்கு பதிவு செய்து ஜிதேந்தரை தேடிக் கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் வி.கே.ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருமண வயதை எட்டாத சிறுவன், சிறுமி மனமொத்து திருமணம் செய்து கொண்டால் அது செல்லும். இந்து திருமண சட்டத்தில் உள்ள பால்ய விவாக தடுப்பு ஷரத்தில் இத்தகைய திருமணம் செல்லாது என்று கூறப்படவில்லை. சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் மட்டுமே திருமணம் செல்லாது என அறிவிக்க முடியும். சிறுவன் ஜிதேந்தர் தற்போது சிறுமி பூனத்தின் சட்டப்படியான பாதுகாவலன்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும் என இந்து திருமணச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மீறி திருமணம் செய்தால் அது செல்லாது என்று சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இதன் அடிப்படையில் தற்போது நீதிபதி அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றிலிருந்து "பொக்கிஷம்" என்ற புதிய பகுதி ஆரம்பம்:
"பொக்கிஷம்"
இது சென்னை மெரினா கடற்கரை - அன்று
சென்னை மெரினா கடற்கரை - இன்று
 இது 13 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை .
Thursday, August 12, 2010 | By: INDIA 2121

காஷ்மீரின் உண்மை கதை

காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பிரதமர் சொன்னதை கேட்டு பாரதிய ஜனதா கொதித்து எழுந்துள்ளது. எல்லா கட்சிகளும் ஒப்புக் கொண்டால் என்று அவர் கண்டிஷன் போட்டிருக்கிறார். அதை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. சுயாட்சி கொடுப்பது சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னோட்டம் என்ற ரீதியில் கண்டிக்கின்றனர்.
காஷ்மீர் ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்த பூமி. என்றாலும் அது பழங்கதை. 1350ல் தொடங்கிய முஸ்லிம் ஆட்சி ஐந்து நூற்றாண்டுகள் நீடித்ததன் தாக்கம் இன்றுவரை தெரிகிறது. 1820ல் மகாராஜா ரஞ்சித் சிங் கைக்கு காஷ்மீர் மாறியதோ, 1947ல் அதை சுதந்திர இந்தியாவுடன் மகாராஜா ஹரிசிங் இணைத்ததோ மத விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறி, பெரும்பான்மை சதவீதம்தான் தொண்ணூறை தாண்டியது. ஜம்முவும் லடாக்கும் அவர்கள் குறைவாக உள்ள பகுதிகள்.
இன்றைய தேதியில் காஷ்மீரின் 45 சதவீத நிலப்பரப்பு இந்தியாவிடம் உள்ளது. 33 சதவீதம் பாகிஸ்தான் பிடியில். மீதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. நம் வசமுள்ள காஷ்மீரையும் கைப்பற்றுவது, முடியவில்லை என்றால் அதை தனி நாடாக மாற்றுவது பாகிஸ்தானின் லட்சியம். இதற்காக 63 ஆண்டுகளாக போராடுகிறது. அவ்வப்போது போரிடுகிறது. சீனா, சவுதி உட்பட பல நாடுகள் உதவுகின்றன. அந்த கனவு நனவாக விடக்கூடாது என்பதற்காக இந்தியா கொடுக்கும் விலை கொஞ்சமல்ல.
ஏராளமான வீரர்களையும் அப்பாவிகளையும் பலி கொடுத்திருக்கிறோம். நாடெங்கும் நாசவேலைகளை சந்திக்கிறோம். எந்த மாநிலத்துக்கும் இல்லாத வகையில் நிதியை வாரி வழங்குகிறது மத்திய அரசு. காஷ்மீருக்கென தனி சட்டங்கள். தனி அரசியல் சாசனமே இருப்பது பலருக்கு தெரியாது. ஆனாலும் காஷ்மீர் மக்கள் நம்மை இந்தியர்கள் என அழைக்கிறார்களே தவிர தங்களை காஷ்மீரிகள் என்றுதான் அடையாளம் சொல்கின்றனர்.
பிரிவினை பேசிய மாநிலங்கள் எல்லாமும் காலப்போக்கில் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்து மூவர்ணக் கொடியை பெருமிதத்துடன் உயர்த்திப் பிடித்த பிறகும் மனம் மாறாத ஒரு மாநிலத்து மக்களை கட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது?
Wednesday, August 11, 2010 | By: INDIA 2121

ஆசிரியரே கொலைகாரர் ஆனார்

 கொடைக்கானலில் பள்ளி ஆசிரியை பிரம்பால் அடித்ததில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோரும்  உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டும் பஸ் மறியல் செய்தும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மாதா, பிதா, குரு, அதன்பிறகே தெய்வம் என்பார்கள். பாடம் சொல்லித் தர வேண்டிய குருவே கொலையாளியாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருடைய வாழ்க்கையிலும்  மிகவும் சந்தோஷமான காலகட்டம் என்பது மாணவ பருவம்தான். சாதி வித்தியாசம், ஏழை, பணக்காரன் வித்தியாசம் என எந்தக் கவலையும் இல்லாமல் சிறகடிக்கும் பருவம் . அதிலும் பிளஸ் 2 மாணவர்கள் டீன் ஏஜ் தொட்டவர்கள். பாட்டு, டான்ஸ், கேலி, கிண்டல் என உலகை மறந்து இருக்கும் பருவம். வகுப்பறையில் பாட்டுப் பாடி விளையாடியுள்ளனர் மாணவிகள். அப்போது அங்கு வந்த ஆசிரியைதான் கோபத்தில் கண் மண் தெரியாமல் மாணவியைப் போட்டு வெளுத்திருக்கிறார். அடி தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார் மாணவி. வீடு வந்த மாணவி ஆசிரியை பிரம்பால் அடித்த காயத்தை பெற்றோரிடம் காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
இப்போதெல்லாம் பெற்றோரே பிள்ளைகளை அடிப்பதில்லை. செல்லமாக வளர்க்கிறார்கள். அடித்தால் பயமில்லாமல் போய்விடும் என்பதால் அன்பு காட்டி திருத்துகிறார்கள். பிள்ளைகளும் பொறுப்பு உணர்ந்து படிக்கிறார்கள். அதனால்தான் டிவி, சினிமா, இன்டர்நெட் என எத்தனையோ விஷயங்கள் குறுக்கே வந்தாலும் அதையும் தாண்டி சாதனை படைக்கிறார்கள். பிளஸ் 2 வந்துவிட்டால், காலையில் கோச்சிங், ரெகுலர் கிளாஸ், ஈவினிங் கோச்சிங், நைட் ஸ்டடி, எக்ஸ்பர்ட் கிளாஸ், டியூஷன் என கேப் இல்லாமல் படிப்பு படிப்புதான். இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சிரித்து பேசி மகிழ்வது தவிர வேறு எந்த ரிலாக்ஸும் கிடையாது. கேலியும் கிண்டலும்தான் ஒரே பொழுதுபோக்கு. அதைக்கூட அனுமதிக்காமல் அடித்து நொறுக்குவது மனிதத் தன்மையே கிடையாது. படிப்பு முக்கியம்தான். அதற்காக ஞானிபோல் அத்தனையையும் விட்டுவிட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது எநத விதத்திலும் நியாயம் கிடையாது. படிப்பு இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு. உயிர்...? தண்டனை தருவதற்கு முன்னால் ஆசிரியர்கள் இதை உணர வேண்டும்.

இந்தியாவின் சாதனை பெண்

 தேஜஸ்வினி என்ற தங்க மங்கை புதிதாக கிடைத்திருக்கிறார் நமக்கு. கிரிக்கெட், டென்னிஸ் அளவுக்கு ஏனைய டீம் விளையாட்டு எதுவும் பிரபலம் ஆகாத நாட்டில் தனிநபர் விளையாட்டு பற்றி பேசவே இடமில்லை. அத்தகைய சூழலில் துப்பாக்கி சுடும் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை ஒரு பெண் வென்று வந்திருப்பது அபாரமான சாதனை.
மராட்டிய பெண் தேஜு. அப்பா சாவந்த் கடற்படையில் என்ஜினியராக இருந்தவர். அம்மா சுனிதாவுக்கு விளையாட்டில் ஈடுபாடு அதிகம். குறி பார்த்து சுடுவதில் தேஜு 12 வயதிலேயே ஆர்வம் காட்டினார். அதில் அவளுக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது என்று ஒரு பயிற்சியாளர் சொன்னதை பெற்றோர் பிடித்துக் கொண்டனர். ஆனால், துப்பாக்கியும் மற்ற சாதனங்களும் வாங்கி பயிற்சி பெற நிறைய பணம் தேவை. தெரிந்தவர்களிடம் மகளுக்காக உதவி கேட்டார் தந்தை. பலர் கேலி செய்தனர்; சிலர் செலவில்லாத விளையாட்டை சிபாரிசு செய்தனர். உலக சாம்பியனாக வரும் அளவுக்கு தேஜுவுக்கு திறமை இருப்பதாக சாவந்த் சொன்னதை ஒரு அப்பாவின் பெருமைப் பேச்சு என்றுதான் எடுத்துக் கொண்டனர்.
பெற்றோரின் கஷ்டத்தை சகிக்க முடியாமல், ‘இதெல்லாம் சரிப்படாது, நான் ஏதாவது பட்டம் வாங்கி வேலைக்கு போகிறேன்’ என்று மகள் விரக்தியுடன் சொன்னதை தாய் ஏற்கவில்லை. ‘தொடர்ந்து பயிற்சி செய், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று தெம்பூட்டினார். சிறுகச் சிறுக கடன் வாங்கி, வீட்டு செலவை குறைத்து தேஜுவுக்கு வேண்டியதை செய்துகொடுத்தனர். அந்தப் பெண் ஜெர்மனி சென்று கழுத்தில் தங்கப் பதக்கமும் கையில் உலக சாம்பியன் பட்டமும் ஏந்தி திரும்பிவந்த போது சுனிதாவின் தாயுள்ளம் பெருமையில் தளும்பியது. ‘இந்த காட்சியை பார்க்க அவளது அப்பா இருந்திருக்க வேண்டும்.. 18 ஆண்டுகளாக அவர் கண்ட கனவு..’ என்று மகளை அணைத்துக் கொண்டு கண்கலங்கினார் சுனிதா. சாவந்த் உடல் நலம் பாதித்து பிப்ரவரியில் காலமானார்.
‘பணமும் பின்னணியும் பெரிதல்ல. உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று என் மகள் நிரூபித்து விட்டாள்’ என்று சுனிதா சொன்னது பெற்றோர்கள் மனதில் எழுத வேண்டிய செய்தி.
Related Posts with Thumbnails