Tuesday, June 29, 2010 | By: INDIA 2121

ராணுவ சட்டம்

 ‘ஆயுத படைகளின் சிறப்பு அதிகாரங்கள் சட்டம்’ என ஒன்று இருக்கிறது. ‘அப்ஸ்பா’ என்பது சுருக்கம். 1958ல் நாகாலாந்தில் பிரிவினை போராட்டம் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யவும், சோதனையிடவும், சுட்டுக் கொல்லவும் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்குகிறது இச்சட்டம். நாகாலாந்தை தொடர்ந்து அசாம், மணிப்பூர், மிசோரம் என்று ஏனைய வடகிழக்கு மாநிலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதம் சிகரம் தொட்ட 1990ல் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
ராணுவம் கட்டுப்பாடான அமைப்பு என்றாலும், அதிலும் போக்கிரி அதிகாரிகள் உண்டு. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவிகளை சாகடிக்கின்றனர். துஷ்பிரயோகம் அம்பலத்துக்கு வரும்போது, ராணுவ சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மேலதிகாரிகள் சொல்வார்கள். இந்திய குற்றவியல் சட்டம் அவர்களை தொட முடியாது. ‘அப்ஸ்பா’தான் பாதுகாப்பு கவசம். வடகிழக்கிலும் காஷ்மீரிலும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
ராணுவத்தின் அத்துமீறல்கள் மக்களை அந்நியப்படுத்துவதாக மத்திய அரசும் உணர்ந்துள்ளது. அதனால், சட்டத்தின் கடுமையை குறைக்கவும், தப்பு செய்யும் ராணுவத்தினரை தண்டிக்கவும் சில திருத்தங்கள் செய்ய தீர்மானித்துள்ளது. அதற்கான யோசனைகளை உள்துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அதை பற்றி ராணுவ, சட்ட அமைச்சகங்கள் கருத்து கூறிய பின்னர் அமைச்சரவை விவாதித்து முடிவு எடுக்கும். இந்த நேரத்தில்தான் தளபதி வி.கே.சிங், ‘அற்ப அரசியல் லாபத்துக்காக சில தலைவர்கள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர்’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். வடபிரிவு தளபதி ஜஸ்வால் இச்சட்டத்தை ராணுவத்தின் புனித நூல் என சொல்லி கண்டனத்துக்கு ஆளாகி பத்து நாள்தான் ஆகிறது.
ராணுவ அமைச்சகத்துக்கு எழுத வேண்டியதை பகிரங்க பேட்டியில் வெளியிடுவது கடைந்தெடுத்த அரசியல். அந்த களம் ராணுவ தளபதிகளுக்கு கைகொடுத்ததாக வரலாறு கிடையாது.
Related Posts with Thumbnails