Saturday, July 31, 2010 | By: INDIA 2121

சினிமா பாணியில் ரயிலில் கொள்ளை

 ஓடும் ரயிலில் 40 திருடர்கள் ஏறி சாவகாசமாக 500 பயணிகளிடம் கொள்ளை அடிக்கும் காட்சி சினிமாவில் வந்ததில்லை. மேற்கு வங்காளத்தில் நேற்று முன்தினம் நடந்த நிஜ சம்பவம். பெரிய செய்தியாக வராதது ஆச்சரியம். வதந்திகள் பரவும் வேகத்தில் செய்திகள் பயணம் செய்வதில்லை என்றாலும் இது அதிகம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாடா நகரில் புறப்பட்டு, மேற்கு வங்கம் வழியாக பீகாரில் உள்ள சப்ராவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் அது. அதிகாலை 2 மணி. எல்லாரும் தூங்கும்போது ஒரு பயணி எழுந்து அபாய சங்கிலியை இழுக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி அது. ரயில் நிற்கிறது. நாலைந்து ஜீப்புகள் வேகமாக வருகின்றன. முகமூடி அணிந்த ஆசாமிகள் 40 பேர் ஏழு பெட்டிகளில் தாவி ஏறுகின்றனர். பயணிகளை எழுப்பி துப்பாக்கியை காட்டி நகை, பணம், மொபைல் போன்களை சேகரிக்கின்றனர். தர மறுத்தவர்களுக்கு அடி. 40 நிமிடத்தில் வேலை முடிந்து, கொள்ளையர்கள் ஜீப் ஏறி டாட்டா காட்டுகின்றனர். ரயில் பயணத்தை தொடர்கிறது.
அடுத்த ஸ்டேஷனில் 12 பேர் இறங்கி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். நடந்த எதுவும் தெரியாமல் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த கார்டுக்கு தர்ம அடி விழுந்ததால் அவரும் படுக்கையில். ரயில் நின்றால், செயினை இழுத்தது யார், ஏன் என்று பார்க்க டிரைவரும் கார்டும் வருவது வழக்கம். டிரைவரை மிரட்டி தடுத்து வைத்திருந்ததால் அங்கிருந்து தகவல் அனுப்ப முடியாமல் போனதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
கஜானாவுக்கு பணம் கொண்டு செல்லும்போது, அரசகுமாரி உடல் நிறைய நகைகள் அணிந்து பயணிக்கும் போது, ராணுவத்துக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்லும்போது ‘முகமூடி வீரர்கள்’ புரவிகளில் வந்து தாவியேறி கொள்ளை அடிப்பது பற்றி படித்திருக்கிறோம், திரையில் பார்த்திருக்கிறோம். கர்ண பரம்பரை கதையாகும் சுவாரசியம் இருந்தது அந்த சம்பவங்களில்.
ரிசர்வேஷன் இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்களிடம் கொள்ளையடிப்பது ‘கிரேட் டிரெய்ன் ராபரி’களின் நினைவுக்கும் கொள்ளைத் தொழிலுக்கும் அவமானம். மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தில் வைக்கும் வெடிகுண்டுக்கு சமமானது. மம்தாவுக்கும் மார்க்சிஸ்டுக்கும் சோதனையான காலமிது.

காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு அரசு எச்சரிக்கை

மாலை நேரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் தெற்கு மாடவீதி ஜேஜே என்றிருக்கும். நடைபாதை இல்லாத சாலையின் இருபுறமும் காய்கறிகள், பழங்கள் வரிசைகட்டி அமர்ந்திருக்கும். எடுத்துக் கடிக்க தூண்டும் வகையில் பசுமையாக காட்சியளிக்கும். அங்காடித் தெருவில் விண்டோ ஷாப்பிங் செல்வதைப் போல, இதையெல்லாம் கண்ணால் ருசிப்பதற்கே வருவார்கள் சிலர். பை நிறைய வாங்கிச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள் பலர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது மத்திய அரசு.
காய்கறி, பழங்கள் பெரிதாகவும் பசுமையாகவும் வளர ஆபத்தான மருந்துகளை பல விவசாயிகள் பயன்படுத்துகின்றனர் என மத்திய நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியிருக்கிறார். குறிப்பாக ஆக்சிடாசின் என்ற ஹார்மோன் செடிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறதாம். கர்ப்பிணிகளுக்கு வலி உண்டாக்கவும், பிரசவத்தால் ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்தவும், தாய்ப்பால் சுரக்கவும் இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிந்ததும் அரசு தடை விதித்தது.
மருந்து கடைகளில் காணாமல்போன ஆக்சிடாசின் வெவ்வேறு பெயர்களில் உரம், பூச்சிகொல்லி கடைகளில் கிடைக்கிறது. மாடுகள் அதிக பால் சுரக்க ஊசி மூலம் செலுத்துகின்றனர். கத்தரி, பூசணி, வெள்ளரி, பாகற்காய் போன்ற பல காய்கறிகள் பெரிதாக வளர அந்த மருந்து செலுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதை சாப்பிடுவதால் இதய கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்பு, மறதி, மலட்டுத் தன்மை உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என அவர் எச்சரிக்கிறார்.
பாகற்காய் ஜூஸ் குடித்த ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சென்ற வாரம் பெரிதாக பேசப்பட்டது. இன்னும் கொடுமை என்னவென்றால் கலப்பட காய்கறிதான் வில்லன் என்பதை யாரும் கண்டுபிடித்து சொல்வதில்லை. கார்பைடு கற்களால் பழுக்க வைத்து மெருகூட்டிய மாம்பழம் சாப்பிட்டு பலர் நோயாளியானார்கள். காய்களுக்கு பசுமையும் பழங்களுக்கு வண்ணமும் ஏற்றுவதால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை.
எப்படியாவது சம்பாதிப்பது என்ற வெறி சமூகத்தின் எந்தப் பிரிவையும் விட்டு வைத்திருப்பதாக தெரியவில்லை. அவரவர் குடும்பத்தில் ஒருவர் படுக்கும்போதுதான் உறைக்கும் என்றால் அதுவரை இந்த பூமி தாங்காது.
Thursday, July 29, 2010 | By: INDIA 2121

10 ஆண்டுகளில் இந்தியாவில் 11 கோடி பேருக்கு வேலை


 அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 11 கோடி பேருக்கு வேலை அளிக்கும். அது உலகிலேயே மிக அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் வேலைவாய்ப்பு பற்றி கோல்டுமேன் சாச் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, இந்தியாவில் 2020ம் ஆண்டுக்குள் மேலும் 11 கோடி பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். இங்கிலாந்து, தென்கொரியா நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் மத்திய அரசின் புள்ளிவிவரத்தின்படி இப்போதைய மக்கள்தொகையில் 51 சதவீதத்தினர் 25 வயதுக்கு குறைந்தவர்கள். மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இளைய தலைமுறையினர் அதிகரிப்பு 2050ம் ஆண்டு வரை இந்தியாவில் தொடர்ந்து உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்களில் 11 கோடி பேர் வேலை பெறவுள்ள நிலையில், அதே காலத்தில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடான சீனாவில் 1.5 கோடி பேருக்கு மட்டுமே புதிதாக வேலை கிடைக்கக்கூடும்.
இந்தியாவில் புதிதாக ஏற்படவுள்ள 11 கோடி வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறை முதலிடம் வகிக்கும். நிதி, கல்வித் துறையில் குவிய உள்ள அதிக முதலீடு காரணமாக திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் 21 கோடி பேர் வேலை பெறுவார்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சர்வாதிகாரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது இந்தியா.

 பர்மாவில் இருந்து தாண் ஷ்வே வந்திருக்கிறார். அதிபரா ?பிரதமரா? ஜனாதிபதியா? தெரியாது. அந்த நாட்டை ஆளும் ராணுவ தளபதிகள் குழுவின் தலைவர்.இவர் இதற்கு முன்பு அக்டோபர் 2004 ல் இந்தியா வந்திருந்தார்.
கடைசியாக அங்கு 1990ல் தேர்தல் நடந்தது. அதுவரை அதிபர் நீ வின். அவர் ராணுவ தளபதியாக இருந்தவர். 1962ல் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார். 26 ஆண்டுகள் அனுபவித்த பிறகு தேர்தல் அறிவித்தார். 489 தொகுதிகள். ஜனநாயக கட்சி 392 இடங்களில் வெற்றி பெற்றது. ஆங் சூ கீ என்ற பெண்மணி அதன் தலைவர். பிரதமராக வேண்டியவரை வீட்டுக் காவலில் வைத்து தேர்தல் முடிவை ரத்து செய்தது அரசு. அந்த குழப்பத்தின் நடுவே பொறுப்புக்கு வந்தவர் தாண் ஷ்வே. மனித உரிமைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர். ஆங்சூவை விடுவிக்க உலகமே கோரஸ் பாடியும் அசையாதவர்.
மேலைநாடுகள் பர்மாவுக்கு,  மியான்மர் என்றும் சொல்லலாம்  பொருளாதார தடை விதித்தன. சீனா துணை இருப்பதால் பர்மாவுக்கு வலிக்கவில்லை. நாடு சிறிதானாலும் இயற்கை வளம் அதிகம். எரிவாயு நிறைய கிடைக்கிறது. நமக்கு மிகவும் தேவை என்பதால் கிணறுகள் தோண்ட ஒப்பந்தம் போடலாமா என டெல்லி யோசித்தது. சீனா முந்திக் கொண்டது. இலங்கை வரை மூக்கை நுழைக்கும் பெய்ஜிங், அண்டை நாட்டை விட்டு வைக்குமா?
மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல் மாநிலங்களை ஒட்டி நமக்கும் பர்மாவுக்கும் 1640 கிலோ மீட்டர் பொதுவான எல்லைக்கோடு. இந்த மாநிலங்களிலும் அசாமிலும் நாசவேலையில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளுக்கு பர்மா எல்லைக்குள் முகாம்கள் இருக்கின்றன. இந்த எல்லை வழியாக போதை பொருட்களும் ஆயுதங்களும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டவும், பர்மாவை தாண்டி தென்கிழக்கு ஆசியாவுடன் ரயில், சாலை தொடர்பு ஏற்படுத்தவும் பர்மா தேவைப்படுகிறது. ஆக வேண்டியதை பார்ப்போம் என்று இறங்கி வந்து சர்வாதிகாரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது இந்தியா.
ஜனநாயக பிரியர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஏமாற்றமாக இருந்தாலும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. இந்தியா , சீனா ஆதிக்கப் போட்டியால் இரண்டு லட்டு தின்ன கிடைப்பது அண்டை நாடுகளின் அதிர்ஷ்டம்.
ஷ்வேயின் வருகை பற்றி பர்மா அரசு தரப்பில் சொல்லும் போது,இரு நாடுகளின் எல்லை
பாதுகாப்பு பற்றி பேசவும்,பொருளாதார ஒத்துழைப்பு பற்றி பேசவுமே ஷ்வே இந்தியா
வந்துள்ளதாக தெரிவிக்கிறது.
Wednesday, July 28, 2010 | By: INDIA 2121

யார் சொன்னது இந்தியாவை ஏழை நாடென்று?

நாட்டில் சோற்றுக்கே வழியில்லாமல் பஞ்சத்தில் பலர் இருக்க, மலைமலையாக உணவுப் பொருள்களை வீணடிக்கும் வினோதம் இங்குதான் நிகழும். சுப்ரீம் கோர்ட் இதற்கு குட்டு வைத்திருக்கிறது. வடக்கே பல மாநிலங்களில் திறந்தவெளி கிடங்குகளில் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. வெறும் தார்பாய்தான் போர்வை. இதனால் ஒவ்வோர் ஆண்டும் கணிசமான அளவுக்கு உணவுப் பொருள் வீணாகின்றன. மழையால் சேதம் அடைவதுதான் அதிகம். இதனால் உணவுப் பொருள் அழுகி கெடுகிறது. ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்க முடியாமல் குப்பையில் கொட்டப்படுகிறது. திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 15 லட்சம் டன் கோதுமையை பாதுகாக்க முடியாமலும் விற்க முடியாமலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் திரிசங்கு நிலையில் உள்ளன.
உணவுப் பொருள் வீணடிக்கப்படுவதை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்களை வீணடிப்பது மிகப்பெரிய குற்றம். நாட்டில் விளையும் ஒரு சிறிய தானியத்தை கூட பாழடிக்க கூடாது. ரேஷனில் வழங்க வேண்டிய உணவுப் பொருளை சரியாக பாதுகாக்காத அதிகாரிகளை அரசு தண்டிக்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களில் 61 ஆயிரம் டன் அழுகிவிட்டதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நாட்டின் பல இடங்களில் கிடங்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் அதிகளவு மழையால்தான் சேதம் அடைந்திருக்கின்றன. இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க கூடுதலாக கிடங்குகளை கட்டவும் சேமிப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
திறந்தவெளி கிடங்குகளில் மழையால் உணவுப் பொருள் சேதமாவதை தடுக்க இந்த நவீன காலத்தில் எத்தனையோ வழிகள் உள்ளன. அக்கறையின்மை, அலட்சியம் ஆகியவற்றால்தான் இவை செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. உணவுப்பொருள் வீணாவது என்பது மிக முக்கிய பிரச்னை. எனவே இதை தடுக்க போதிய நிதி ஒதுக்கி, தகுந்த ஏற்பாடுகள் செய்வது மத்திய அரசின் முக்கிய கடமை.

இந்திய சிறைச்சாலையும் 5 நட்சத்திர ஓட்டலும்

 சினிமாவில் பார்க்கும் ஜெயிலுக்கும் நிஜ ஜெயிலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. முதலாவதில் இடம் சுத்தமாக இருக்கும். கைதிகள் உடை பளிச்சென்று இருக்கும். மணி அடித்ததும் வரிசையில் நின்றால் சாதம், சாம்பார் எல்லாம் கிடைக்கும். வார்டன்கள் அக்கறையாக குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். உண்மையான ஜெயில் இதற்கு நேர் மாறாக நரகம் போல் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
மகாராஷ்டிர உள்துறை இணை அமைச்சர் ரமேஷ் பாக்வேயும் நம்பினார். திடீரென்று ஒரு ஜெயிலுக்குள் போய் பார்த்தபோது சுரீரென்று சுட்டிருக்கிறது நிஜம். பளிங்கு கற்கள் பதித்த தரை. பளபளக்கும் பாத்திரங்கள், அவற்றில் வகை வகையான உணவுகள், பீங்கான் கோப்பைகளில் ரகம் ரகமான பழங்கள், மெத்தையுடன் விசாலமான படுக்கை, சுற்றிலும் சுவர்களில் அழகிய மாடல்களின் கவர்ச்சி போஸ்டர்கள். அட்டாச்டு பாத்ரூமுக்குள் எட்டிப் பார்த்த அமைச்சர் அதன் சுத்தம் கண்டு அசந்துபோனார். ‘ஐந்து நட்சத்திர ஓட்டல் அறை மாதிரி இருக்கிறது’ என்று சட்டசபையில் ஆச்சரியப்பட்டார். இதெல்லாம் என்ன என்று போஸ்டரை காட்டி அமைச்சர் கேட்டபோது கைதி அட்டகாசமாக சிரித்தானாம். அவன் பெயர் அபு சலீம். 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி.
வழக்கு முடிந்து தண்டனை அறிவிக்கப்படும்வரை ஒருவர் விசாரணைக் கைதி. அப்போது அவர்கள் சொந்த உடை அணிந்து கொள்ளலாம்; வீட்டு சாப்பாடு வரவழைத்து சாப்பிடலாம் என கோர்ட் கூறியிருக்கிறது. இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் நான்கு லட்சம் பேரில் பாதிக்கு மேல் இந்த பிரிவில் வருகிறார்கள்.
கோடிக் கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் தீர்ப்புகள் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. வசதி படைத்தவர்களும் செல்வாக்கான கோஷ்டி பின்னணி உள்ளவர்களும் அதுவரை இந்த “விருந்தினர் மாளிகை”யில் சகல வசதிகளோடும் தங்கலாம். கைதிகள் அப்படித்தான் குறிப்பிடுகின்றனர். செல்போனும் கிடைப்பதால் எந்த குறையும் தெரிவதில்லை.
சிறை சீர்திருத்தம் பற்றி 50 ஆண்டுகளாக பேசப்படுகிறது. ஊழலால் செழிப்பவர்கள் எதுவும் சீர்பட விடமாட்டார்கள் போலிருக்கிறது.
இது தான் ஜனநாயகம்! என் அருமை இந்தியாவே,எவ்வளவு நாட்க்ளுக்கு தான்
பணக்காரர்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிப்பாய்.
ஏழைகளுக்கு என்று தான் வாழ்வளிப்பாய்!
Tuesday, July 27, 2010 | By: INDIA 2121

பனிமலை கடலில் விழுந்தது

 சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்

அமெரிக்க ராணுவ ரகசியம் அம்பலம்

 அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போர் தகவல்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அத்தனையும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுப்படை ஆட்கள் சேகரித்தவை.
தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக நட்பு நாடுகளை சேர்த்துக் கொண்டு அங்கு அமெரிக்கா நடத்தும் போர் ஒன்பது ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நேரத்தில் கசிந்துள்ள இந்த தகவல்கள், போரின் போக்கையே மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போரில் உதவ அமெரிக்காவிடம் ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி வாங்கும் பாகிஸ்தான் மறைமுகமாக தலிபான்களுக்கு உதவுகிறது என்ற உண்மை ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எப்படி இரட்டை வேடம் போட்டு இரு அரசுகளையும் ஏமாற்றுகிறது என்பது சுவாரசியமாக தொகுக்கப்பட்டுள்ளது.
‘ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளை திட்டமிட்டு நிறைவேற்றும் பொறுப்பு எஸ் விங் என்ற பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது எவருக்கும் பதில் சொல்ல அவசியமில்லாத அதிகாரத்துடன் செயல்படுகிறது. அதனிடம் கணக்கு வழக்கு இல்லாமல் பணம் புரள்கிறது’ என்பது கசிந்த ரகசியங்களில் ஒன்று. வியட்நாம் போரின்போது ராணுவத்தின் ரகசிய தகவல்கள் அம்பலமானதன் விளைவாக அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக கொதித்தெழுந்தனர். அதுபோல் இப்போது நடக்கலாம் என சிலர் கணிக்கின்றனர்.
விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் 92 ஆயிரம் ஆவணங்களை பிரபலமான மூன்று பத்திரிகைகள் மூலம் இந்த ரகசியங்கள் அம்பலமாக வழி வகுத்துள்ளது. அரசாங்கத்தின் அளவுக்கு மீறிய ரகசிய நடவடிக்கைகளுக்கு எதிராக உருவானது அந்த தளம். ‘வெளிப்படையான நிர்வாகத்தில்தான் அனைவருக்கும் நீதி கிடைக்கும். அனாவசியமான ரகசியங்கள் தவறுகள் நடக்க வாய்ப்பளிக்கும்’ என்பது அதன் நிறுவனர் தத்துவம். இராக்கில் அமெரிக்க போர் விமானம் அப்பாவிகள் மீது குண்டு வீசி 12 பேர் இறந்த காட்சி அந்த விமானத்தின் வீடியோவில் பதிவாகி இருந்ததை வெளியிட்டு பிரபலமானது இந்த தளம்.
தற்போது 12 நாடுகளில் தன்னார்வலர்கள் உதவியால் செயல்படும் விக்கிலீக்கை முடக்க ஒபாமா அரசு எடுக்கும் முயற்சிக்கு உலகெங்கும் உள்ள அரசுகள் மானசீகமான ஆதரவு அளிக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.
Monday, July 26, 2010 | By: INDIA 2121

வட கொரியா - தென் கொரியா போர் வெடிக்குமா?



எப்படியெல்லாம் எதிரி நாட்டை எரிச்சல்படுத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இந்தியாவை எரிச்சல் படுத்த பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், வட கொரியாவை நோகடிக்க, மெகா சைஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறது தென் கொரியா.
ஒரே நாடு, ஒரே இனமாக இருந்த கொரியாவை ஜப்பான் ஆண்டு வந்தது. பசிபிக் போருக்குப் பிறகு, 1945ல் அமெரிக்கா ஆதரவுடன் தென் கொரியாவும் சீனா, ரஷ்யா ஆதரவோடு வட கொரியாவும் உருவானது. இந்தப் பக்கம் ஜனநாயகம், அந்தப் பக்கம் கம்யூனிசம் என இரு துருவங்களாகி போனது. தென் கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலில் கடலில் மூழ்க, அதற்குக் காரணம் வட கொரியாதான் என முஷ்டியை மடக்கியது  தென் கொரியா. இது அபாண்டம் என வட கொரியா மறுக்கிறது. இந்த நிலையில்தான் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது தென் கொரியா.
இரு நாடுகளுக்கும் இடையில் 155 மைல் நீள எல்லைப் பகுதியில் மெகா சைஸ் ஸ்பீக்கர்களை வைத்து இரவும் பகலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் சிறப்பு, தென்கொரியர்களின் சந்தோஷமான வாழ்க்கை முறை பற்றி 4 மணி நேரம் கொண்ட நிகழ்ச்சியை தினமும் மூன்று முறை ஒலிபரப்புகிறது. அதோடு, வட கொரியாவைப் போல் பஞ்சம் எதுவும் இல்லை என்றும் எல்லோரும் நிறைய சாப்பிட்டு குண்டாக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றும குத்திக் காட்டுகிறது. இதைக் கேட்கும்  வட கொரியர்கள் எல்லை தாண்டி வந்தால், வரவேற்று வாழ்வளிக்கிறது. அதோடு எல்லை நெடுகிலும் பெரிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வைத்துள்ளது. அவற்றில் தென் கொரியாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், சந்தோஷமான குடும்பங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுபோக ஹீலியம் பலூன்களில் போட்டோக்கள் நிரம்பிய துண்டுப் பிரசுரங்களை எதிர்ப் பக்கம் கொட்டி வருகிறது. இப்படி பல விதங்களில் வட கொரிய அரசை வெறுப்பேற்றி வருகிறது தென் கொரியா.
எவ்வளவுதான் பொறுக்கும் வட கொரியா. ஸ்பீக்கர் பிரசாரத்தை நிறுத்தாவிட்டால், பீரங்கித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
அணு ஆயுத யுத்தம் வரலாம் என்ற பயம் திடீரென்று உலகை உலுக்கியிருக்கிறது. வட கொரியா அரசு அப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது. சட்டப்படி அதிகாரம் உள்ளவர்கள் விடுப்பது எச்சரிக்கை; இல்லாதவர்கள் எச்சரித்தால் அது மிரட்டல்.
இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானதுபோல் பிறந்தது வட கொரியா. நமக்கு அந்த கதி ஏற்பட்ட அடுத்த ஆண்டில் அங்கே கொரியர்களிடம் விதி விளையாடியது.
பாகிஸ்தான் இஸ்லாமை அடையாளமாக ஏற்றதுபோல் கம்யூனிசத்தை சுவீகரித்தது வட கொரியா. அன்று முதல் இந்தியா,பாகிஸ்தான் பாசம்தான் இரு நாடுகளுக்கும் இடையே. முட்டாள் இந்தியர்களை புத்திசாலிகள் ஆக்க பாகிஸ்தான் எந்த அளவுக்கு பாடுபடுகிறதோ அதற்கு சற்றும் குறையாதது வட கொரியாவின் முயற்சிகள்.
1968ல் தென் கொரிய அதிபரை கொலை செய்ய கமாண்டோ வீரர்களை அனுப்பியது வட கொரிய அரசு. ஈடேறவில்லை. வேறு பல நாசவேலைகளில் ஈடுபட்டது. ஒவ்வொரு முறையும் தென் கொரியா தப்பியது. வட கொரியாவுக்கு மூக்கணாங்கயிறு போட எவரும் முன்வரவில்லை. காரணம், சீனாவின் ஆதரவு. 
அதே போல் தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு .
இந்த இருநாட்டு பிரச்சினை பல ஆண்டுகளாக தொடந்து இருந்து வருகிறது
பாகிஸ்தானை போலவே வட கொரியாவையும் தனது செல்லப் பிள்ளையாக வளர்க்கிறது சீனா. அமெரிக்காவையும் தனக்கு வேண்டாத இதர நாடுகளையும் சீண்டிப் பார்க்க வட கொரியாவை ஏவுவது அதன் வாடிக்கை. விவகாரம் முற்றி ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் வந்தால், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி வட கொரியா மீதான தண்டனையை தடுத்து விடுகிறது.
இப்போதைய சிக்கலுக்கு காரணம், தென் கொரிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று மூழ்கி அதில் இருந்த 46 வீரர்கள் இறந்தனர்; வட கொரிய நீர்மூழ்கி கப்பல்தான் இதை செய்திருக்கிறது என்பது தென் கொரியாவின் நம்பிக்கை. இந்த சூழலில் அமெரிக்க, தென் கொரிய படைகள் கூட்டாக நடத்தும் ராணுவ ஒத்திகை நேற்று கொரிய வளைகுடாவில் தொடங்கியுள்ளது. ஒத்திகை முடிவதற்குள் உண்மையான போர் வெடிக்குமா என்பதுதான் உலக நாடுகள் தூக்கத்தை தொலைக்க காரணம்.
இன்னொரு போருக்கு தயாராகிறது ஒரே இனம்.கொரியா தீபகற்பத்தில் அமைதி நிலவ இறைவனை பிரார்த்திப்போம்.
Saturday, July 24, 2010 | By: INDIA 2121

‘நாங்கள் ஏழைகள்’

 ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எல்லா மாநிலங்களும் பல்வேறு திட்டங்கள் தீட்டுகின்றன. சலுகைகள் வழங்குகின்றன. ஆனால் இந்த சலுகைகளில் பெரும்பகுதி ஏழைகளுக்கு போய் சேருவதில்லை. கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், ஏழை வேஷத்தில் பணக்காரர்கள் இச் சலுகையை அனுபவிக்கிறார்கள். விவசாய கூலிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை, பத்து விரலிலும் மோதிரம் மின்னும் பண்ணையார்கள் அனுபவித்து வருவதை காலம்காலமாக பார்த்து வருகிறோம்.
மத்திய பிரதேச அரசு இதை தடுக்க ஒரு புது ஐடியாவை உருவாக்கியிருப்பதாக நினைத்து சிக்கலில் மாட்டி தவிக்கிறது. இங்குள்ள பழங்குடி கிராமங்களில் பலர் வசதியானவர்கள். ஆனால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். இதற்கு ஒரு முடிவு கட்டத்தான் புதிய யோசனை உதித்தது. ம.பி.யின் கோப்லகஞ்ச் பஞ்சாயத்து அதை அமல்படுத்தி ‘அசத்திவிட்டது’. வேறொன்றும் செய்யவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை பட்டியலிட்டு, அந்த வீட்டின் சுவரில் ‘நாங்கள் ஏழைகள்’ என்று கருப்பு பெயின்டில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டது. இப்படி எழுதுவதற்கு வீட்டு சொந்தக்காரர்களிடம் அனுமதி கூட கேட்கவில்லை. ‘நாங்கள் ஏழைகள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இலவச ரேஷனை பெறலாம். எவ்வளவு எளிதாக பிரச்னையை தீர்த்துவிட்டோம் பாருங்கள் என்று பஞ்சாயத்து அதிகாரிகள் சந்தோஷப்பட்டனர். ஆனால் மக்கள் கொதித்து எழுந்துவிட்டனர். எங்களை இப்படி அடையாளப்படுத்துவதை அவமானமாக நினைக்கிறோம். பஞ்சாயத்தின் இந்த செயல் எல்லோரையும் புண்படுத்திவிட்டது. ஏழை முத்திரையோடு, எங்கள் மகள்களுக்கு திருமணம் செய்துவைப்பது எவ்வளவு பெரிய சிக்கல் என்பது இந்த அதிகாரிகளுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை கமிஷனிலும் புகார் செய்துள்ளனர். பிரச்னை பெரிதாகவே, ‘ஆர்வக் கோளாறால் செய்துவிட்டோம். வீட்டுச் சுவரில் எழுதியுள்ள வாசகத்தை அழித்து விடுகிறோம். இதுபற்றி விசாரணையும் நடத்தப்படும்’ என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
கவுரவம், மானம், ரோஷம் என்பதையெல்லாம் ஏழைகள்தான் இன்னும் கட்டிக்காத்து வருகின்றனர். சலுகைகளை சுரண்டும் வசதிபடைத்தவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை இல்லை. அவர்களிடம் கேட்டால், வீட்டைச் சுற்றி கூட எழுதிக்கொள்ளுங்கள் என்றுதான் கூறுவார்கள். உண்மையான ஏழைகளின் பட்டியலை எடுப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவர்களின் மனஉணர்வை புண்படுத்தி, அவமானப்படுத்தி இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ம.பி. அரசு இதை புரிந்துகொள்ள வேண்டும்.

வித்யாசமான தீர்ப்பு

 ஜெயிலுக்குள் நல்லவனாக நடந்தால் செய்த குற்றத்தின் கடுமை குறைந்து விடுமா? குறையாது; அதற்கான தண்டனை குறையும் என்று தெரிகிறது, சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பை படிக்கும்போது.
அசோக் ராய் ஒரு கல்லூரியில் டியூட்டராக பணியாற்றினார். ஆசிரியர் + காப்பாளர் பொறுப்பு அது. ஆனால் மனிதர் தன் மாணவியுடன் வல்லுறவு கொண்டார். அதிர்ச்சி, அவமானம் தாளாமல் அந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்டார். ஆசிரியருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். அது விசாரணைக்கு வரும்வரை காலத்தை வீணாக்கவில்லை. ஜெயிலில் படித்து ஐஏஎஸ் தேர்வுகளை பாஸ் செய்தார்.
ஹைகோர்ட் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டது. ரேப் குற்றம் நிரூபணம் ஆனாலும், சம்பந்தப்பட்ட மாணவியை தற்கொலைக்கு தள்ளினார் என்ற குற்றச்சாட்டை நீதிபதி ஏற்கவில்லை. ஜெயிலில் நல்லபடி நடந்து நற்பெயரை மீட்டுள்ளார்; எனவே, இதுவரை கம்பி எண்ணிய காலத்தை தண்டனையாக கணக்கிட்டு அவரை விடுதலை செய்யலாம் என தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. ‘ரேப் மிகவும் சீரியசான குற்றம். பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் எவரும் ஏற்க முடியாத காரணங்களை சொல்லி ராயின் தண்டனையை ஹைகோர்ட் குறைத்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என ஆணையம் கேட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது நடந்தது ஜனவரி 2009ல். நேற்று விசாரணைக்கு வந்தது வழக்கு. ‘அரசோ அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரோ இந்த வழக்கில் அப்பீல் செய்யலாம். மற்றவர்களுக்கு அந்த உரிமை கிடையாது’ என்று நீதிபதிகள் கூறினர். ஹைகோர்ட் முடிவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என அரசு வக்கீல் தெளிவுபடுத்தினார். உடனே மகளிர் ஆணையத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்தனர் நீதிபதிகள்.
ஆசிரியராக இருந்து மாணவியை பலாத்காரம் செய்த ஒரு குற்றவாளி, தேர்வு எழுதி பாசானதால் நல்லவனாகி ஆட்சிப்பணி அதிகாரியாவதற்கு தகுதி பெற்றுவிட்டதாக நினைக்கும் அளவுக்கு இந்திய மக்களுக்கும் பெருந்தன்மை இருக்குமானால், அது இறைவன் கொடுத்த வரம்.
Friday, July 23, 2010 | By: INDIA 2121

தனி நாடு பிரகடனம்

 கொசாவோ மக்கள் தனி நாடு பிரகடனம் செய்ததில் சட்டப்படி எந்த தப்பும் இல்லை என்று உலக கோர்ட் ஒரு தீர்ப்பை அறிவித்திருக்கிறது. உலகெங்கும் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் வானை நோக்கி தோட்டாக்கள் வெடித்து கொண்டாட தூண்டும் தீர்ப்பு. இந்தியா போன்ற நாடுகள் இதன் விளைவுகளை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.
யூகோஸ்லாவியா என்று ஒரு நாடு இருந்தது நினைவிருக்கலாம். சோவியத் யூனியன் உடைந்த அதிர்ச்சியில் சிக்கி சிதறிய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒன்று. அதிலிருந்து 6 நாடுகள் தோன்றின. ஒன்று செர்பியா. அதன் தெற்கில் கொசாவோ என்ற மாநிலம். 20 லட்சம் ஜனத்தொகை. 20 சதவீதம் செர்பியர்கள். மீதி அல்பேனியர். இருவருக்கும் ஒத்துப் போகாது. அடிக்கடி கலவரம். செர்பிய ராணுவம் கட்டுப்படுத்த போராடியது. மனித உரிமை மீறல் என்று கூறி அமெரிக்கா தலையிட்டது. நேட்டோ விமானங்கள் 78 நாள் குண்டுமழை பொழிந்தன. செர்பிய படைகள் 1999ல் வெளியேறின. கொசாவோ நிர்வாகத்தை ஐ.நா கையில் எடுத்தது. 2008ல் கொசாவோ தனி நாடு என சட்டமன்றத்தில் அல்பேனியர்கள் பிரகடனம் செய்தனர்.
செர்பியா அரசு ஐ.நா.சபையில் முறையிட்டது. அது வழக்கை உலக கோர்ட்டுக்கு அனுப்பியது. அதன் தீர்ப்புக்கு சட்ட அதிகாரம் கிடையாது. அட்வைஸ் அளவுக்குதான் மரியாதை. ஆனாலும், பல நாடுகள் கொசாவோ அரசை அங்கீகரிக்கவும் அதோடு பிசினஸ் செய்யவும் வழி பிறக்கும். ‘நாட்டின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் ஒரு அரசின் அடிப்படை உரிமை. தேசிய எல்லைகளை மாற்றும் வகையில் ஒரு பிராந்தியம் சுதந்திர பிரகடனம் செய்வது அந்த உரிமைக்கு எதிரானது’ என செர்பியா வாதிட்டது. ‘சேர்வதா பிரிவதா என்பதை தீர்மானிப்பது ஒரு இனத்தின் அடிப்படை உரிமை’ என்று கொசாவோ வாதிட்டது.
‘சுதந்திர பிரகடனம் செய்வது சர்வதேச சட்டங்களில் தடை செய்யப்படவில்லை’ என்று மழுப்பலாக தீர்ப்பளித்திருக்கிறது உலக கோர்ட். இதை சாக்கிட்டு கொசாவோ ஐ.நா.வில் உறுப்பினராக முயலும். பிரிவினையை ஏற்காத ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்துவிடும்.
பெரிய நாடுகள் சிதறுவதால் தொடர்ந்து பயனடையும் நாடு அமெரிக்கா என்பது எதேச்சையான உண்மை.
Thursday, July 22, 2010 | By: INDIA 2121

விபரீத காதல்

விபரீதத்தால் பச்சிளம் குழந்தையை கொன்று வீசியிருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியின் மேல் இருந்த அளவுகடந்த வெறுப்பால், அவரது எல்கேஜி படிக்கும் மகனை கொடூரமான முறையில் கொன்றிருக்கிறார் கள்ளக்காதலி. காதலித்து மணந்த மனைவி, இரு குழந்தைகள் உள்ள அந்த அதிகாரி வேலி தாண்டி தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை வளைத்திருக்கிறார். திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்துள்ளார். கடைசியில் கழற்றிவிட நினைத்தபோது அதன் விளைவு இப்படியான பயங்கரத்தில் முடிந்திருக்கிறது.
உடல் ஆசைக்காக உடன் பணியாற்றும் பெண்ணை ஆசை வார்த்தை கூறி மயக்கிய அதிகாரியும், திருமணமானவர் என்று தெரிந்தும் நெருங்கிப் பழகிய அப் பெண்ணும் இதில் குற்றவாளிகள். இவர்களின் இந்த முறைதவறிய உறவுக்காக ஒரு பாவமும் அறியாத குழந்தை கொல்லப்பட்டிருப்பதுதான் கொடுமை. செலவுக்கு பணம் கொடுக்கிறோம், நல்ல வேலை வாங்கிக் கொடுக்கிறோம் எனவே பெரிதாக பிரச்னை ஒன்றும் வராது என அந்த அதிகாரி நினைத்திருக்கிறார். கள்ள உறவை தொடர்ந்திருக்கிறார். அதுவே அவருக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டது.
பால்வடியும் முகம் கொண்ட அச் சிறுவனை கொல்ல அப்பெண்ணுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் உயர் கல்வி படித்தவர். பெரிய வேலையில் உள்ளவர். கள்ளக்காதலின் உணர்ச்சி கொந்தளிப்பில், குழந்தை என்று கூட பார்க்கமால் கொன்றிருக்கிறார். மலரினும் மென்மையானவள் பெண் என்ற கவிஞர்களின் வர்ணனைகளை எல்லாம் வெற்று வார்த்தை ஆக்கிவிட்டார். பெண் இனத்துக்கே இழுக்கை தேடி தந்துவிட்டார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவரை தண்டிக்க சட்டரீதியாக எத்தனையோ வழி இருக்க, குழந்தையை கொல்லும் முடிவை அவர் எடுத்தது அநியாயம்.
நாட்டில் நடக்கும் பெரும்பகுதி கொடூர கொலைகளின் பின்னணி கள்ளக்காதல் விவகாரமாகவே உள்ளது. சங்கிலித் தொடர் போல் இது அதிகரித்து கொண்டேதான் போகிறது. தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மூலமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும்.

விமான கறுப்பு பெட்டி கண்டுபிடித்தவர் மரணம்

 விமான விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியர், 85 வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டேவிட் வாரன். அந்நாட்டின் ராணுவ அறிவியல் தொழில்நுட்ப அமைப் பில் விஞ்ஞானியாக இருந்தார். 1953ம் ஆண்டில் முதல் ஜெட் விமானம் விபத்தில் சிக்கிய விசாரணை குழுவில் இடம்பெற்றார்.
பைலட்களின் உரையாடலை பதிவு செய்வதன் மூலம் மட்டுமே விமான விபத்துக்கான காரணத்தை அறிய முடியும் என்று டேவிட் கருதினார். 1956ல் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்தார்.
அதை 1960களில் விமானங்களில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலிய அரசு. அது பிரபலமானதால், உலகம் முழுவதும் பயணிகள் விமானங்களில் கறுப்பு பெட்டி கட்டாயமானது.
Wednesday, July 21, 2010 | By: INDIA 2121

ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்வாரா?

 
 அரியலூரில்நடந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று 1956ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதை முன்னுதாரணமாக கொண்டு ஒவ்வொரு முறை ரயில் விபத்து நடக்கும்போதும் அத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. மேற்கு வங்கத்தில் 17.07.2010 இரவு 2 ரயில்கள் மோதி 62 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மேற்குவங்க சட்டசபையில் இடதுசாரி எம்எல்ஏக்கள் இதை வலியுறுத்தி பேசியுள்ளனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பில் மம்தா அலட்சியப் போக்குடன் நடந்துகொள்கிறார். இதனால்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் நக்சலைட்கள் நடத்திய குண்டுவெடிப்பில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஐம்பது நாள் இடைவெளியில் மீண்டும் அங்கு பெரிய ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை சுட்டிக்காட்டிதான் இடதுசாரி கட்சிகள் மம்தா ராஜினாமா கோரிக்கையை முன்வைக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நக்சலைட்கள் நடத்தியது மிகப்பெரிய சதி. எதிர்பாராதது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு ரயில்வே பாதைகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்போது நடந்த விபத்துக்கு காரணம் மனித தவறாக இருக்கலாம் என ஆரம்ப நிலை விசாரணை தெரிவிக்கிறது. எனினும், ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருக்கும்போது அதே பாதையில் மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது எப்படி, ஸ்டேஷனில் வந்து நிற்க வேண்டிய ரயில் பிளாட்பாரத்தை நெருங்கும்போதும் மின்னல் வேகத்தில் வந்த காரணம் என்ன என்பதெல்லாம் புதிராக இருக்கிறது. இதில் நாசவேலை ஏதாவது இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. சதி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று மம்தாவும் கூறியிருக்கிறார். எனவே இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரம் அறியப்பட வேண்டும். இந்த நிலையில் அதுதான் முக்கியமானது. அதைவிட்டு மம்தா பானர்ஜி உடனே பதவி விலக வேண்டும் என இடதுசாரிகள் சொல்வது, மேற்குவங்க அரசியல் கணக்கை முன்வைத்துத்தான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அழகானவர்கள் மட்டுமே அறிவாளிகளா?

 கருப்பு தோலைவிட வெள்ளை தோல் உயர்ந்தது என்ற நிறவெறி கண்ணோட்டம் தென் ஆப்ரிக்காவோடு போயிற்று என உலகம் நம்பியது. முற்றிலுமாக ஒழியவில்லை என்று காட்டும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் மாதிரி. நிறவெறியின் உச்சகட்ட கொடுமைகளை கருப்பர்கள் சந்தித்த அமெரிக்காவில் இன்று அந்த இனத்தை சேர்ந்தவர் அதிபராக இருக்கிறார். சக்கரத்தின் சுழற்சி முடிந்துவிட்டதாக நினைத்தவர்களுக்கு புதிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
அழகானவர்களே அறிவாளிகள், திறமைசாலிகள், வேலைக்கு தகுதியானவர்கள் என்ற கருத்து அந்த நாட்டில் வேகமாக வேர்விட்டு பரவுகிறது. இதனால் சமுதாயத்தில் மோசமான விளைவுகள் உருவாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எந்த கலாசாரமானாலும் அழகுக்கு எப்போதுமே தனி இடம் இருந்து வருகிறது. ஆனால், வேலையில் சேர்வதற்கான அல்லது பதவி உயர்வுக்கான தகுதிகளில் கல்வி, அனுபவம், நம்பிக்கை, பின்னணி, செயலாற்றல் ஆகியவற்றை காட்டிலும் அழகுக்கு அதிக மார்க் கொடுப்பது இதுவரை கண்டிராத நடைமுறை.
இதில் ஆண்,பெண் வித்தியாசம் கிடையாது. அழகான ஆண்கள் 5 சதவீதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்கள் 4 சதவீதம். இந்த பட்டியலில் இடம் பிடிக்க முடியாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அழகாக தோன்ற வேண்டும் என்பது ஆசையாக இருந்தது போய் அவசியமாக மாறியிருக்கிறது. இயற்கையில் வாய்க்காததை செயற்கையாக அடைய வழி தேடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் சர்ஜன்கள் காட்டில் மழை. கண், காது, மூக்கு, உதடு எதை வேண்டுமானாலும் விரும்பும் வகையில் ‘திருத்தி’ அமைக்கின்றனர்.
இதையடுத்து அழகு சாதன தயாரிப்பாளர்கள் பார்வை இந்தியா போன்ற வளரும் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது. கட்டிங், ஷேவிங், மேக்கப் செலவை மாதம்250க்குள் வைத்திருந்த இந்தியர்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது 8 மடங்கு அதிகம் செலவிடுவதாக கம்பெனிகள் கணக்கிட்டுள்ளன. இது வேகமாக அதிகரித்து ஆண்டுக்கு 4000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி கலாசாரம் இறக்குமதி ஆவதற்குள் இந்தியர்கள் எல்லோரும் அழகாகி விடுவார்கள் என்று தோன்றுகிறது.
Tuesday, July 20, 2010 | By: INDIA 2121

54 வயது மகன் மீது புகார் கொடுத்த 104 வயது தந்தை

 “பெத்தமனசு பித்து; பிள்ளை மனசு கல்லு” என்று பெற்றோர் & பிள்ளைகள் உறவு பற்றி பேசப்படும் பழமொழிகள் நிறைய உண்டு. ‘தென்னைய வச்சா இளநீரு... புள்ளையை பெத்தா கண்ணீரு...’ என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் இப்போதும் ஒலிப்பது உண்டு. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை இப்படி புலம்ப விடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டமே வந்து விட்டது. சட்டத்தின் கீழ் நிறைய பேர் தண்டிக்கப்படும் நிலையும் தொடங்கி விட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்த குற்றம் சத்தமின்றி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குடும்பம், உறவு, பாசம் என பக்கம் பக்கமாக வசனம் பேசும் தமிழகம் தான் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளை அதிகம் கொண்ட மாநிலங்களில் முதலிடமாம். அதிலும் தலைநகர் சென்னை தனியிடம் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் 104 வயது முதியவர் ஒருவர், மகனிடம் கருணை கேட்டு நீதிமன்றம் வந்திருக்கிறார் என்ற செய்தி ஒன்று போதும், பெற்றோர் & பிள்ளை உறவை சொல்ல. ஏன் இந்த நிலை? என்ன காரணம்?
கூட்டுக் குடும்ப முறை குறைந்து போனது தான் காரணமா? இல்லை, பிள்ளைகளை வளர்க்கும் முறையில் வந்த கோளாறா? எந்திரத்தனமான வாழ்க்கை என்பதால் தொலைந்து போனதோ பாசம்? எது காரணமோ தெரியவில்லை. ஆனால், ஊர்தோறும் வந்து விட்டது முதியோர் இல்லங்கள், நாகரீகத்தின் அடையாளமாக.
பிள்ளைகளை பெற்று பேணிக்காத்து, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து கல்யாணமும் செய்து வைக்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் சேர்ந்து 2 பேரை அதாவது பெற்றோரை கவனிக்க மனசில்லாமல் விட்டு விடுகின்றனர்.
உழைக்கும் போது இருந்த மரியாதையும், கவனிப்பும் ஓய்வு பெற்று உட்கார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. பெற்றப் பிள்ளைகள் மட்டுமின்றி பேரப் பிள்ளைகளாலும் பெரியவர்களுக்கு மரியாதை குறைவு. இப்படி மனம் புழுங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஏராளம்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்லி பழக்கப்பட்ட பூமி. ஆனால், அன்பும், பாசமும் அற்றுப் போய் விட்டதாலோ என்னவோ, அந்த முதல் தெய்வங்கள் இன்றைக்கு முதியோர் இல்லங்களில் தான் அடைக்கலம் கொண்டுள்ளன. 
               ‘100 கோடியை கடந்த மக்கள் தொகையில் சுமார் 8.1 கோடி பேர் 60 வயதை கடந்த முதியவர்கள்’ என்று சொல்கிறது முதியோர்களுக்கான தொண்டு நிறுவனமான ஹெல்பேஜ் இந்தியா ‘‘முதியோர்களின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 13.5 கோடியாக இருக்கும். இப்போது இருக்கும் 8.1 கோடியில் 5.1 கோடி முதியவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். முதியவர்களில் 70 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். தென்னிந்தியாவில் இருக்கும் முதியவர்களில் 82 சதவீதம் பேர் போதிய ஆதரவு இல்லாத நிலையில் இருக்கின்றனர். அதேபோல் 87 சதவீதத்தினர் தொடர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள். 80 சதவீதத்தினர் ஓய்வூதியம் உட்பட எந்த வருவாயும் இல்லாதவர்கள். வயதானவர்களில் 60 சதவீதத்தினர் சட்ட உரிமைகள் உட்பட எந்த விவரத்தையும் அறியாதவர்கள். 52 சதவீத முதியவர்கள், தங்கள் வாரிசுகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்.
இதில் கொடுமையான விஷயம் 40 சதவீத முதியவர்கள், கட்டாயம் வேலைக்கு சென்று பிழைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள்’’ 
              இனி முதியோர் இல்லங்கள் குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பிறப்பு குறைகிறது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒரு குடும்பம் ஒரு பிள்ளை என்ற கொள்கையும் இதற்கு காரணம். முன்பு நான்கைந்து பிள்ளைகள் இருப்பார்கள் ஒருவர் இல்லாவிட்டால், ஒருவர் பார்த்துக் கொள்வார் என்ற நிலை இருந்தது.
அந்த காலத்தில் விவசாயம் முக்கிய தொழில். ஊரை விட்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. கூட்டு குடும்ப வாழ்க்கை இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் எப்போதும் முதியவர்களுக்கு மரியாதை அதிகம். இப்போது அப்படி இல்லை. விளைச்சல் குறைந்து விட்டது. பிழைப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை. படிப்பு, பணி காரணமாக ஆண், பெண் என இரண்டு தரப்பும் வெளியூருக்கு செல்லகின்றனர். அதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை கவனிப்பது இயலாத விஷயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல சில பெற்றோர்களே விரும்பி முதியோர் இல்லங்களில் சேருகின்றனர். காரணம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கவனிக்காதது மட்டுமில்லை. அவர்கள் போடும் கட்டுபாடுகளும் முதியோர்களுக்கு பிடிப்பதில்லை. அதேபோல் வீட்டிலுள்ள இடநெருக்கடி பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதையும் சில முதியோர் காரணங்களாக சொல்கின்றனர். முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருவது நமது பண்பாட்டுக்கும், பழக்க வழக்கத்திற்கும் மாறானது என்றாலும், அதிகமாகி வருவதை தவிர்க்க முடியாது.

நடுவர் மண்டையை உடைத்த வீரர்

 ஹாக்கி போட்டி நடுவரை மட்டையால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறார் ஒரு ஆட்டக்காரர். விளையாட்டில் பங்கெடுப்பவர்களை வீரர்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமில்லை என்பதற்கு நல்ல உதாரணம் இந்த சம்பவம். கோழைத்தனமாக நடுவரின் பின் தலையில் அடித்த சுனில் எக்கா இந்திய ராணுவத்தின் இலச்சினையுடன் களம் இறங்கியவர் என்பது இன்னொரு முரண்பாடு.
சென்னையில் நடந்து வரும் எம்சிசி  முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில் ஓஎன்ஜிசி அணியுடன் நடப்பு சாம்பியனான ஆர்மி லெவன் அணி மோதிய போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. தப்பாட்டம் ஆடிய இரு ஆட்டக்காரர்களுக்கு பச்சை கார்டு காட்டினார் நடுவர் சூரிய பிரகாஷ். ஒருவர் ஆர்மி, மற்றவர் ஓஎன்ஜிசி. இதை எதிர்த்து நடுவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர் ஆர்மி அணியினர். அப்போது எக்கா ஆவேசமாக நடுவரின் பின் தலையில் ஹாக்கி மட்டையால் ஓங்கி அடித்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
சூரிய பிரகாஷ் நாட்டின் தலைசிறந்த நடுவராக 1993ல் கவுரவிக்கப்பட்டவர். நான்கு தையல்களுக்கு பிறகு கண்விழித்தவர், ‘21 வருட நடுவர் பணியில் இப்படி ஒரு தாக்குதலை பார்த்ததில்லை. இந்திய அணிக்காகவும் ராணுவத்துக்காகவும் விளையாடும் சுனில் எக்காவிடம் ஒழுங்கு கட்டுப்பாடு சுத்தமாக இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்று வருத்தப்பட்டுள்ளார்.
கட்டுப்பாடு மிகுந்த அமைப்பு என்று இந்திய ராணுவத்துக்கு ஒரு பெயர் இருந்தது. ரயில் பயணிகளுடன் சண்டை, பஸ் டிரைவருக்கு எந்திர துப்பாக்கியால் மிரட்டல், மறியல் செய்த நிராயுதபாணி தொண்டர்களை ஓடஓட விரட்டி தாக்குவது போன்ற சம்பவங்கள் பரவலாக தெரிய ஆரம்பித்தபின் பேர் ரிப்பேர் ஆனது. சுனில் எக்கா போன்றவர்களால் சேதம் அதிகமாகும்.
போபாலில் நடந்த ரங்கசாமி கோப்பை தேசிய போட்டியில் சண்டிகருக்கு எதிராக ஆட இறங்கிய தமிழக அணி அதிகாரிகளை தாக்கி அவப்பெயர் சம்பாதித்துள்ளது. கேப்டன் ஆடம் சிங்ளேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு என புகழ் பெற்ற ஹாக்கி இன்று வாட்டத்தில் இருக்கிறது. விதிகளை மதிக்காமல் விளையாட்டை வினையாட்டாக மாற்றும் எக்கா போன்றவர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலமே இருக்கிற ரசிகர்களையும் கவுரவத்தையும் காப்பாற்ற முடியும்.
Monday, July 19, 2010 | By: INDIA 2121

மத்திய ரிசர்வ் போலீஸ் படை

  மாவோயிஸட்களுக்கு எதிராக போராடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாவோ தீவிரவாதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் இவர்கள் நீண்ட நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் திடீர் என தாக்கும் தீவிரவாதிகளின் கொரில்லா பாணி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் நக்சல்களின் கையால் இவர்கள் கும்பல் கும்பலாக சுட்டுக்கொல்லப்படும் நிலை உள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் பண்ணையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி போன்றவர்கள். அவர்களை கொத்துக்கொத்தாக பிடித்து கொன்று குவியுங்கள் என நக்சல் தலைவன் தனது அமைப்பினருக்கு இளக்காரமாக சொல்லும் அளவுக்கு நிலை இருக்கிறது. இதனால் சிஆர்பிஎப படை வீரர்கள் பலருக்கு கடுமையான மன அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.
17.07.2010 இரவு நடந்த கொடூர சம்பவம் ஒன்று இதை தெளிவுபடுத்துகிறது. ஜார்கண்டின் சரைகெலா மாவட்டம் குசாய் கிராமத்தில் சிஆர்பிஎப் படையின் 196வது பட்டாலியன் முகாம் உள்ளது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஹர்பிந்தர்சிங் என்ற வீரர், தனது சக வீரர்களையே வெறிபிடித்தது போல துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளார். மெஸ்சில் உணவு வீணாவது தொடர்பான தகராறில் இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக சொல்கிறார்கள். மேலும் ஹர்பிந்தர்சிங் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சரமாரியாக அவர் சுட்டதில் அதிகாரி உள்பட 6 வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். நான்கு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தின் முடிவில் ஹர்பிந்தர்சிங்கும் சக வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
மாவோ தீவிரவாதிகளின் தாக்குதலால் எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலையில் இருந்த வீரர்கள், சக வீரர் ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையகம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துகிறது.
உணவு வீணாவது போன்ற சாதாரண பிரச்னைக்காக சக வீரர்களே கொல்லப்படுகின்றனர் என்பதை நம்ப முடியவில்லை என்கின்றனர் ஜார்கண்டின் மூத்த போலீஸ் அதிகாரிகள். விடுப்பு முடிந்து தற்போதுதான் ஹர்பிந்தர்சிங் பணியில் சேர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து மன அழுத்த பிரச்னையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியிருப்பதாலும், போதிய ஆட்கள் இல்லாததாலும் சிஆர்பிஎப் வீரர்கள் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகி வருவது முன்பே கண்டறியப்பட்டிருக்கிறது. பலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனவே கொரில்லா தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதும் உரிய கவுன்சலிங் அளிப்பதும் முக்கியமானது.
Friday, July 16, 2010 | By: INDIA 2121

திரு.அப்துல் கலாம் அமைத்த குடில், நீருற்று இடிப்பு

 
 ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்தில், அப்துல் கலாம் ஆசையுடன் அமைத்த குடில், மியூசிக் நீருற்று தற்போது இடிக்கப்பட்டு விட்டது.
ஜனாதிபதியாக கலாம் இருந்தபோது ஜனாதிபதி மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்தில், மணிப்புரி ஸ்டைல் குடில் ஒன்று அமைக்கப்பட்டது. அது கலாமுக்கு மிகவும் பிடித்தமான இடம். காலை மற்றும் மாலை நேரங்களில் கலாம் அங்கு அமர்ந்திருப்பார். தனது இரு புத்தகங்களை அந்த குடிலில் அமர்ந்து எழுதியதாக கலாம் கூறியுள்ளார். அந்த இடத்தை ‘சிந்தனை குடில்’ என கலாம் குறிப்பிடுவார். அந்த குடில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக அந்த குடில் இடிக்கப்பட்டுள்ளது. மொகலாய தோட்டத்தில் கலாம் அமைத்த மியூசிக் நீருற்றும் இடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புது சட்டம் வருகிறது

 குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க புதுச்சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம்நாட்டிலும் கொண்டு வரப்படவுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவம் நம்நாட்டில் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன்(என்சிபிசிஆர்) சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர், ஆசிரியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஒரு ஆண்டு ஜெயில் அல்லது ரூ.5000 அபராதம், இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள், வேலைக்கு வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும். இந்த சட்ட மசோதா, பார்லிமென்ட்டில் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அமெரிக்காவிற்கு எதிராக குரங்கு படை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக தலிபான்கள் புதுவித யுத்த தந்திரத்தை உபயோகிக்கிறார்கள் என்பது சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறியிருக்கிறது. தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு உலகில் உள்ள நவீன ஆயுதங்கள் அனைத்தையும் அமெரிக்க படைகள் பயன்படுத்துகின்றன. இதற்கு பதிலடி கொடுக்க தலிபான்கள் செய்யும் தந்திரம் என்ன தெரியுமா? குரங்குகளுக்கு ஆயுத பயிற்சி கொடுப்பது. குரங்கு கூட்டங்களை பிடித்து வந்து, அதற்கு ஏகே 47 உள்ளிட்ட இயந்திர துப்பாக்கிகளை கையாள்வதில் பயிற்சி கொடுப்பது, அமெரிக்க யூனிபார்ம் அணிந்த படைவீரர்களை இனம் கண்டு தாக்குவதற்கு சொல்லிக் கொடுப்பது என தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறார்களாம். இந்த குரங்குகளுக்கு சம்பளம் வாழைப்பழம், கடலை.
ஆயுதப் பயிற்சி பெற்ற குரங்குகளை களத்தில் இறக்குவதால், தலிபான் தரப்பில் ஆள்சேதம் குறையும். மேலும் மேற்குலக விலங்கின ஆர்வலர்கள் இதனால் ஆடிப்போய், அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க மும்முரமாக வலியுறுத்துவார்கள் என்பது தலிபான்களின் கணக்காம். வியட்நாம் போரின்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ இதுபோன்ற குரங்கு தீவிரவாதிகளை உருவாக்கினர். அதை பின்பற்றித்தான் தலிபான்களும் இந்த குரங்கு வேலையில் ஈடுபட்டிருக்கின்றனராம்.
இந்த செய்தி உலகை குலுக்கியது. அமெரிக்கா அதிர்ந்துபோனது. ஆனாலும் தலிபான்கள் குரங்கு தீவிரவாதிகளை பயன்படுத்துகிறார்களா என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. இச் செய்தியை முதலில் உலகுக்கு அளித்தது சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழின் இணையதளம். ஏகே47 தூக்கியபடி உள்ள போட்டோ ஆதாரம் வேறு அதில் இருந்தது. பீப்பிள்ஸ் டெய்லி ஏதோ காமாசோமா பத்திரிகை அல்ல. சீன கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நாளிதழ். அதில் வந்ததால்தான் அதிர்ச்சி.
அமெரிக்க போர் நிபுணர்கள் இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என மறுத்துள்ளனர். ஆயுதங்களை கையாளும் அளவுக்கு விலங்குகளுக்கு லாவகம் போதாது. மேலும் இயந்திர துப்பாக்கி போன்றவற்றில் இருந்து வரும் பேரோசை விலங்குகளை அலறியடித்து ஓடவே செய்யும் என்கின்றனர். குரங்கு துப்பாக்கி தூக்கியிருப்பது போன்ற படம், மட்டமான போட்டோஷாப் வேலை என்றும் சொல்லியிருக்கின்றனர். இதுபோன்ற மலிவான வதந்திகளை சீனா ஏன் பரப்புகிறது என புரியவில்லை.

ரேஷன் கடையில் ஸ்டாக் இருக்கா? எஸ்எம்எஸ் அனுப்பினால் தெரியும்

 ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வைத்து கொண்டே ‘ஸ்டாக் இல்லை’ என்று இனிமேல் சொல்ல முடியாது. எஸ்எம்எஸ் மூலமே நீங்கள் எவ்வளவு ஸ்டாக் உள்ளது என கண்டுபிடித்து விடலாம்.  ரேஷன் கடை செயல்பாடுகள் ஒளிவுமறைவின்றி இருப்பதை உறுதி செய்வதற்கு, இந்த வசதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
ரேஷன் கடையில் என்னென்ன பொருள் எவ்வளவு இருப்பு உள்ளது என்று அறிய நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதுதான். முதலில் GPS  என  டைப் செய்து இடைவெளி விட்டு, மாவட்ட குறியீட்டு எண்ணை டைப் செய்து இடைவெளி     விட்டு     உங்கள் பகுதி ரேஷன் கடை எண்ணை டைப் செய்து 9789006492 மற்றும் 9789005450 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாக இருப்பு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் வந்து விடும்.
மாவட்ட குறியீட்டு எண், ரேஷன் கடை எண் ஆகியவை ரேஷன் கார்டிலேயே இருக்கிறது. கார்டில் மேல்பகுதியில் 11 இலக்கம் கொண்ட எண் உள்ளது. இதில் ஆங்கில எழுத்துக்கு முன்புள்ள 2 எண்கள் மாவட்ட குறியீட்டு எண். கடை எண் ரேஷன் கார்டின் கீழ்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் ஙிறி146 என்ற கடையின் இருப்பு விவரம் அறிய GPS12 ஙிறி146 என டைப் செய்து எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். இதன்மூலம், உப்பு, அரிசி, ரவை, கெரசின், மளிகை, பாமாயில்  ,   சர்க்கரை, உளுந்து, துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் ஸ்டாக் விவரங்களை அறியலாம்.
மக்கள் இம்முறையை அதிகமாக பயன்படுத்தினால், முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.
Thursday, July 15, 2010 | By: INDIA 2121

ரூபாய்க்கு புதிய குறியீடு

 
அமெரிக்க டாலர், இங்கிலாந்து பவுண்டு, யூரோ டாலர் போல இந்திய ரூபாய்க்கு தனி குறியீட்டை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக ஒரு போட்டி வைத்து ரூ.2.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தி ‘ர’ எழுத்தை அடிப்படையாக வைத்து புதிய குறியீட்டை உருவாக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல குறியீடுகளை உருவாக்கியிருந்தனர். இதில் ஐஐடி மாணவர் உதயகுமார் வடிவமைத்த குறியீடு உள்பட 5 குறியீடுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் உதயகுமார் வடிவமைத்த குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசின் அனைத்து பயன்பாட்டிலும் இந்தக்குறியீடு நடைமுறைக்கு வர 6 மாதங்கள் ஆகும் , சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற 2 ஆண்டுகள் ஆகும்.

நீரின் அருமை

 நீச்சல் குளத்தில் குளிக்கும்போது தண்ணீர் குடிக்க தடை விதித்திருக்கிறது ஒரு நகராட்சி. நம்மூர் செய்தியல்ல, ஆஸ்திரியா நாட்டில் நடந்துள்ளது.
வியன்னா நகரில் 18 பொது நீச்சல் குளங்கள் இருக்கின்றன. மாநகராட்சி நிர்வகிக்கிறது. அனல் காற்று வீசுவதால் குளங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். குளிக்கும்போது அறிந்தும் அறியாமலும் வயிற்றுக்குள் தண்ணீர் போகிறது. இப்படி தினமும் 5,000 லிட்டர் தண்ணீர் காணாமல் போவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குளத்தில் நிரப்புவது குளோரின் கலந்த தண்ணீர். தினமும் ஐயாயிரம் லிட்டர் கு. க. நீர் சேர்க்க மாநகராட்சி கணிசமாக செலவிட நேர்கிறது. எனவே, ‘வாயை மூடிக் கொண்டு நீந்துங்கள்’ என பிரசாரம் செய்கிறது.
சென்ற ஆண்டும் இதுபோல் ஒரு சிக்கன நடவடிக்கை எடுத்தது மாநகராட்சி. பெர்மூடா ஷார்ட்ஸ் அணிந்து குளத்தில் இறங்க தடை விதித்தது. காரணம்? ஒரு பெர்மூடா பார்ட்டி குளித்து கரையேறும்போது இரண்டரை லிட்டர் தண்ணீரையும் அதில் உறிஞ்சி எடுத்துச் செல்கிறாராம். கழற்றி பிழிந்து அளந்து பார்த்தது. ஆஸ்திரியா டாப் 10 பணக்கார நாடுகளில் ஒன்று. செலவு பெரிதல்ல. தண்ணீரின் மதிப்பு தங்கத்தை காட்டிலும் உயர்ந்து வருவதற்கு சான்று இது.
பூமியின் முக்கால் பங்கு தண்ணீர் என்றாலும், அதில் 97 சதவீதம் கடல் நீர். குடிக்க முடியாது. நதி நீர் அரை சதவீதத்துக்கு சற்றே அதிகம். நிலத்தடி நீர் ஒன்றரை சதவீதம். மீதி மலையிலும் மேகத்திலும் ஒளிந்திருப்பது.
இரண்டே சதவீதம் உள்ள நதி நீர் + நிலத்தடி நீரில் 70 சதவீதம் விவசாயத்துக்கு செலவாகிறது. மீதிதான் வீடு முதல் ஆலைகள் வரை அனைத்து உபயோகத்துக்கும் கிடைக்கிறது. அவ்வளவு அரிய பொருளான நல்ல தண்ணீரை அளவுக்கு மீறி கெடுக்கிறோம்; வீணாக்குகிறோம். மாசு தாங்காமல் பல நதிகள் உயிரிழந்து போயின. பல வறண்டு மறைந்தன. தரமற்ற நீரால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு 30 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன.
இன்னும் 20 ஆண்டுகளில் இருப்பை விட தேவை 50 சதவீதம் அதிகரிக்குமாம். அடுத்த தலைமுறை தவிக்கட்டும் என விடுவது பாவம். அப்போது என்ன செய்வது என இப்போதே யோசிப்பது அவசியம்.
நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்ந்து நாம் அனைவரும் நீரை சிக்கனமாக
கையாள்வது அவசியம்.
ஆஸ்திரியாவின் தொலைநோக்கு திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது.
Wednesday, July 14, 2010 | By: INDIA 2121

நக்சல் தீவிரவாதிகள்

 நாட்டின்மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாவோயிஸ்ட் என்னும் நக்சல் தீவிரவாதிகள் மாறிவருகின்றனர். பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கி 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நக்சலைட்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவர்கள் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர். சட்டீஸ்கரில் கடந்த ஏப்ரலில் இருந்து நக்சல்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கில் ரிசர்வ் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் ரயில் கவிழ்க்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாயினர். பழங்குடியின மக்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நக்சல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதை அடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்தார். இப் பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக நக்சலைட் பாதிப்பு உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒரிசா, சட்டீஸ்கர், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளதால் கவர்னர் பங்கேற்கிறார்.
நக்சலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, அதே நேரத்தில் இந்நடவடிக்கையின் மூலம் பழங்குடியின மக்கள் மீது எந்த அத்துமீறலும் நடைபெறாத வகையில் செயலாற்றுவது என மத்திய அரசு உத்தி வகுத்துள்ளது. இக் கூட்டத்தில் இந்த அம்சம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் சமீப காலங்களில் நக்சலைட் தாக்குதலில் வீரர்கள் அதிகளவு பலியாகி வருகின்றனர். போதிய பயிற்சி இல்லாததால்தான் வீரர்கள் இப்படி கொத்துக்கொத்தாக பலியாக நேர்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. இதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினருக்கு அதிநவீன பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்பதை ஒரிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். நக்சலைட்களின் கையில் தற்போது அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. சீனா, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து நக்சலைட்களுக்கு இந்த ஆயுதங்கள் சப்ளையாவதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய ஆயுத வர்த்தகத்தை கண்டுபிடித்து தடுக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நக்சல் அபாயத்தை உடனடியாக தடுப்பது இந்த நேரத்தில் மிக அத்தியாவசியம். பிரதமர் தலைமையில் நடக்கும் இன்றைய கூட்டம் இதற்கு அச்சாரமாக இருக்கட்டும்.
Tuesday, July 13, 2010 | By: INDIA 2121

யார் ஏழை?

யார் ஏழை என்ற கேள்விக்கு யாராலும் இன்னும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை. பொருளாதார வல்லுனர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மூன்று வேளை சாப்பிட முடியாதவன் என்று ஒரு அளவுகோல் நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆண்டு வருமானம் ஒரு அளவீடாக சேர்க்கப்பட்டது. அப்புறம் உடமைகள் கணக்கிடப்பட்டன. அந்த வரிசையில் ‘மல்ட்டி டைமென்ஷனல் பாவெர்ட்டி இண்டெக்ஸ்’  எம்பிஐ ஒரு புதிய கருவி. ஏழ்மையையும் மனித வளர்ச்சியையும் மதிப்பிட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள வழிகாட்டு முறை. ஐக்கிய நாடுகள் சபை இதை அங்கீகரித்துள்ளது.
கல்வி, மருத்துவம், தொழில், வேலை போன்றவற்றில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இந்த முறையில் ஏழைகளாக கணக்கிடப்படுகின்றனர். முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஏதேனும் ஒன்று கிடைக்கப் பெறாத குடும்பமும் ஏழைகள் பட்டியலில் சேரும். அப்படி செய்த ஆய்வில் இந்தியாவில் 8 மாநிலங்களில் கடுமையான வறுமை நிலவுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஆப்ரிக்க கண்டத்தில் வறுமையில் உழலும் 26 நாடுகளின் மொத்த ஜனத்தொகையை காட்டிலும் அதிகமான இந்தியர்கள் 42 கோடி  வறுமையில் வாடுகின்றனர். பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களுடன் 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் மேற்கு வங்காளமும் இதில் இடம் பெற்றிருக்கிறது. புது கண்ணோட்டத்தில் வறுமையை மதிப்பிடும் யோசனையை முதலில் தெரிவித்தவர் நோபல் பரிசு பெற்ற வங்காள பொருளாதார மேதை அமர்தியா சென் என்பது நினைவிருக்கலாம். தெற்கு, மேற்கு மாநிலங்கள் எதுவும் இதில் சேரவில்லை என்பது ஆறுதல். அதற்காக மக்களும், கட்சிகளும், அதிகார வர்க்கமும் பெருமைப்படலாம்.
அதே சமயம், இந்திய பொருளாதாரம் பிரமிப்பூட்டும் வகையில் முன்னேறி வருவதாகவும் இதனால் அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைவ தாகவும் வெளிவரும் செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பதை இந்த ஆய்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது. கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக அர்த்தமில்லை. திட்டங்கள் தீட்டும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆய்வறிக்கை இது.
Saturday, July 10, 2010 | By: INDIA 2121

ஆக்டோபஸ் ஜோசியம்

 ஒரு கடல் பிராணியை வறுத்து சாப்பிட ஒரு நாடே நாக்கு தொங்க காத்திருக்கிறது.
ஆக்டோபஸ் பால் எட்டியிருக்கும் சிகரம் கடல் உலகத்துக்கு கிடைத்த கவுரவம். ஜெர்மனியில் ஒரு மீன் காட்சியகத்தின் கண்ணாடி தொட்டிக்குள் மிதக்கும் அந்த ஜந்து, உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை ‘கணித்து’ சொல்லியிருக்கிறது. ஞாயிறன்று நெதர்லாந்து அணியை ஸ்பெயின் தோற்கடித்து கோப்பையை வெல்லுமாம்.
மோதும் நாடுகளின் தேசிய கொடி பொறித்த இரு டப்பாக்களை தீனியுடன் தொட்டிக்குள் வைக்கின்றனர். எந்த டப்பாவை பிடித்து அது தீனியை விழுங்குகிறதோ அந்த அணி ஜெயிப்பதாக ஐதீகம். ஜெர்மனி பங்கேற்ற 6 போட்டிகளின் முடிவை சரியாக ‘கணித்து’ உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறது ஆக்டோபஸ் பால். அரையிறுதியில் ஸ்பெயினிடம் ஜெர்மனி தோற்கும் என்றது. அதே மாதிரி நடந்தது. ஜெர்மானியர்கள் கொதிக்கின்றனர். ஒழிக கோஷத்துடன் நாடெங்கும் ஆர்ப்பாட்டம். வாயில்லா ஜீவனின் பிறப்பையே சந்தேகிப்பதாக இன்டர்நெட்டில் அவதூறு பரப்புகின்றனர். தீனி தின்ற நன்றி இன்றி நடந்துகொண்ட துரோகியை கொன்று கூறுபோடாமல் விட மாட்டோம் என சபதிக்கின்றனர்.
நிலைமை விபரீதமாவதை கண்டு ஸ்பெயின் அரசு கவலைப் படுகிறது. ஆக்டோபஸ் பாலை பாதுகாக்க அதிரடிப்படை அனுப்ப தயார் என்று அதன் பிரதமர் அறிவித்துள்ளார். மிரண்டு போன ஆக்டோபஸ், இன்று நடக்கும் ஆறுதல் போட்டியில் உருகுவேயை ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆரூடம் சொல்லி தப்பப் பார்க்கிறது. பியர் வியாபாரிகளை தவிர யாரும் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. யூரோ கோப்பை போட்டியிலும் பால் ஜோசியம் சொன்னது. இறுதி ஆட்டத்தில் பலிக்கவில்லை. அதே போல் நாளை சொதப்பினால் என்னாவது என்று ஸ்பெயின் வீரர்களுக்கு லேசான கிலி.
யார் ஜெயித்தாலும் சரி, ஃபைனலுக்கு பிறகு பாலுக்கு பால்தான். ஆக்டோபஸ் ஆயுள் 3 ஆண்டு. பாலுக்கு இப்போது இரண்டரை வயது. இந்தியன் கிளி ஜோசியம் கேட்டால் கிண்டலடிக்கும் உலகம், ஐரோப்பிய ஆக்டோபஸ்ஸை ஆராதிக்கிறது.
எல்லோரையும் ஸ்பெயின் மீது பணம் கட்ட வைத்துவிட்டு, நெதர்லாந்து ஜெயிக்க காத்திருக்கும் சூதாடிகள் காட்டில் பணமழை கொட்டப் போகிறது.
Friday, July 9, 2010 | By: INDIA 2121

ஊழல் நாடுகள் வரிசையில் இந்தியா

 ஊழல் நிறைந்த நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து இடம் பிடிக்கிறது. அரசு அலுவலகங்களில் இருட்டான பகுதிகள் இருக்கும்வரை இந்த அந்தஸ்துக்கு ஆபத்து வராது.
இப்படியொரு நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம் என்ற அச்சம் சுதந்திரம் கிடைத்த காலத்திலேயே தலைவர்களுக்கு இருந்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த கமிஷன், ஊழலை தடுக்க 1966ல் வழி சொன்னது. அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க லோக் பால், லோக் ஆயுக்தா என்ற அமைப்புகளை உருவாக்க கமிஷன் சிபாரிசு செய்தது. முதலாவது மத்திய அரசுக்கு; அடுத்தது மாநிலங்களுக்கு. ஓய்வு பெற்ற நீதிபதி அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவார்.
தேசாய்க்கு முன்னால் இதே யோசனையை சந்தானம் கமிட்டி தெரிவித்து இருந்தது. அதை தூசி தட்டி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தனர். அதிகார வர்க்கம் சும்மா விடுமா? விசாரணை வரம்பில் இருந்து பிரதமருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதல் அம்பு விடப்பட்டது. வேறு யாரெல்லாம் விலக்கு பெற தகுதியானவர்கள் என விவாதம் தொடங்கியது. மசோதா கைவிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஆயுளுடன் சேர்ந்து காலாவதி ஆனது. 41 ஆண்டுகளில் இப்படி 8 முறை மசோதா மரித்துள்ளது.
பிரதமர் பதவிக்கு விலக்கு தேவையில்லை என மன்மோகன் கூறுகிறார். அவரது கட்சி உடன்படவில்லை.திரு.அப்துல்  கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது தன்னையும் லோக்பால் விசாரிக்க அனுமதிக்கலாம் என்றார். கேட்பாரில்லை. இதற்கிடையில் 17 மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை நிறுவின. அதில் ஒன்று கர்நாடகா. 5 லட்சம் டன் இரும்பு தாது கடத்தியதாக இரு அமைச்சர்கள் மீது வந்த புகாரை விசாரிக்க முடியாமல் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பதவி துறந்தார். கட்சிக்கு கெட்ட பெயர் வருமே என்ற கவலையில் அத்வானி சமாதானம் செய்தார். எழுத்து மூலமான புகார் வராவிட்டாலும் எவரையும் விசாரிக்கவும் சோதனை நடத்தவும் அதிகாரம் கேட்டார் ஹெக்டே. எடியூரப்பா அரசு அதற்கு சம்மதிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.
ஒரே ஒரு நிபந்தனைதானாம்: அரசியல்வாதிகளை விசாரிக்கக் கூடாது.
Wednesday, July 7, 2010 | By: INDIA 2121

நேபாள மக்களின் சுதந்திர தாகம்

 தலாய் லாமாவின் 75வது பிறந்தநாளை திபெத்தியர்கள் நேற்று ஆடம்பரமின்றி அனுசரித்திருக்கிறார்கள். புத்த துறவிகளோ சீடர்களோ எதையும் கொண்டாடுவது கிடையாது. இது வாழ்க்கையின் ஒரு மைல் கல் என்பதால் அந்த விதியில் சின்ன தளர்வு.
தலாய் லாமா வயதுக்கு பொருந்தாத சுறுசுறுப்புடன் உலகம் சுற்றி வருகிறார். வருடத்தில் பாதிநாள் பேட்டிகள் மூலம் திபெத் பிரச்னையை உயிருடன் வைத்திருக்கிறார். அவர் இல்லையென்றால், சீனா என்றோ திபெத்தை மறந்து நிம்மதியாக தூங்கத் தொடங்கியிருக்கும்.
பலவான்களே பழங்கால வரலாற்றை ஆதாரமாக காட்டி சாதித்துக் கொள்ள முடியும். ஆதிகாலம் தொட்டே சீன மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிதான் திபெத் என்று செஞ்சீனம் அடித்துச் சொல்கிறது. எல்லையை பாதுகாக்க குத்தகைக்கு அமர்த்தப்பட்டதே சீன மன்னரின் படை என்பது திபெத் பழங்குடியினர் வாதம். அவர்கள் எண்ணிக்கை அதிகமில்லை. வாதம் எடுபடவில்லை.
சீன ஆதிக்கத்தில் இருந்து விடுபட 1959ல் புரட்சி நடந்தது. வழக்கமான பாணியில் சீனா அதை நசுக்கியது. தலாய் லாமாவும் சீடர்களும் இமயமலையின் சிகரங்கள், பள்ளத்தாக்குகளை நடந்து கடந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தனர். அன்றிலிருந்து தர்மசாலா அவர்களின் வீடானது. ‘நாடு கடந்த திபெத் அரசு’ அமைத்து, சுதந்திரத்துக்காக அமைதியாக போராடி வருகின்றனர். நா.க.அரசில் பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் உண்டு. ‘நாடாளுமன்றம்’ வேறு செயல்படுகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள லட்சம் திபெத்தியர்களும் அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இன்னும் அரை லட்சம் பேர் பல நாடுகளில் பரவியிருக்கின்றனர்.
சுதந்திரம், ஜனநாயகம் பரவலாக விரும்பும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தலாய் லாமாவின் கனவு நனவாகட்டும் என சீனாவுக்கு பயந்து ரகசியமாக பிரார்த்திக்கின்றன. இந்த 50 ஆண்டுகளில் திபெத்தை அடியோடு மாற்றிவிட்டது சீன அரசு. லாமா பிறந்த பழங்குடி இனத்தவர் ஆகப் பெரும்பான்மையாக வாழ்ந்தது போய், வேற்று இனங்களின் குடியிருப்புகள் பெருகிவிட்டன. சுதந்திர தாகம் தலாய் லாமாவுடன் தணியும் என்று சீனா திடமாக நம்புகிறது.
அழிக்கப்பட்ட அத்தியாயத்தை திரும்ப எழுதுவது வரலாற்றில் அடிக்கடி நடக்கும் நிகழ்வல்ல என்பதை உலகமும் உணர்ந்திருக்கிறது.
Tuesday, July 6, 2010 | By: INDIA 2121

டெல்லி சர்வதேச விமான நிலையம்

 டெல்லி விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் திறப்புவிழா விமரிசையாக நடந்திருக்கிறது. ஏற்கனவே அங்கு இந்திய நகரங்களுக்கான விமானங்களுக்கு ஒன்றும், வெளிநாடுகளுக்கு என ஒன்றுமாக இரண்டு டெர்மினல்கள் இருக்கின்றன. இப்போது கட்டி முடித்திருப்பது மிகவும் பிரமாண்டமான டி3 முனையம்.
துபாய், பீஜிங் ஆகியவற்றுக்கு அடுத்ததாக பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய நிலையம் இது என்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும், பார்க்கிறவர்கள் பிரமித்து நிற்பதை டெல்லியில் காணமுடிகிறது. ஒரு காலத்தில் பாலம் ஏர்போர்ட் என்ற பெயரில் தூங்குமூஞ்சி விமான நிலையமாக இருந்த இடம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமாக இன்று நாட்டிலேயே மிகவும் சுறுசுறுப்பான தளமாக பரிணமித்திருப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கம்பீரமான சாட்சியம். அக்டோபரில் நடக்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு முன்னதாக முடித்தாக வேண்டும் என்ற இலக்கு தப்பவில்லை. 12 ஆயிரத்து 700 கோடி செலவில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமும் ஜி.எம்.ஆர் என்ற தனியார் குழுமமும் சேர்ந்து அனைத்து பணிகளையும் இந்திய முத்திரையோடு செய்து முடித்திருப்பதும் நமது திறமைக்கு நாமே நம்பிக்கையுடன் அளித்திருக்கும் முதல் மரியாதை. இன்னும் 20 ஆண்டுகளில் இங்கு ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் வசதியாக வந்து போக முடியும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் விமான போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் பறக்க ஆரம்பித்தாலே ஆறுமடங்கு வளர்ந்துவிடும் என துறையின் அமைச்சர் கணிக்கிறார். 2050ம் ஆண்டில் உலகில் ஒரு டஜன் விமான நிறுவனங்கள்தான் செயல்படும்; அதில் இந்திய, சீன கம்பெனிகள் தலா 3 இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போட்டி அதிகமாகும்போது பயணிகளுக்கு கொண்டாட்டம். கட்டணங்கள் குறையும். ரயில் டிக்கெட்டை விட மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்து பறக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பஸ்களில் நின்று கொண்டு செல்வதுபோல் விமானத்திலும் ஸ்டாண்டிங் டிக்கெட் போட ஒரு நிறுவனம் திட்டம் தயாரித்திருக்கிறது. செல்போன், கார் துறைகளில் ஏற்பட்டதை போல விமான போக்குவரத்திலும் ஒரு புரட்சி உருவாவது தெரிகிறது.
Saturday, July 3, 2010 | By: INDIA 2121

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  ஐசிசி  தலைவராக சரத் பவார் பொறுப்பேற்றுள்ளார். அமைப்பின் எதிர்காலம் இனி கேள்விக்குறி என்று அதற்குள் சில பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன. பவார் தலைவர் ஆனதால் அல்ல இந்த சலசலப்பு. இரண்டு ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தவர், அடுத்த இரண்டாண்டு தலைவராக நீடிப்பது ஐசிசி விதிப்படியான நடைமுறை. அவர் காலி செய்த இடத்துக்கு யார் வருவது என்பதில் 
பிரச்சினை.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட் அந்த பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஐசிசி அமைப்பில் 104 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தாலும், நிர்வாகம் செய்வது டெஸ்ட் விளையாடும் 10 நாடுகள் அடங்கிய செயற்குழு. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நிறுத்திய ஹோவர்டுக்கு 7 ஓட்டு தேவை. வெள்ளைக்கார ஆஸி, நியூசி , இங்கிலாந்து தவிர ஏனைய நாடுகள் ஆதரிக்க மறுத்துவிட்டன. சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தவே அனுமதி கிடைக்கவில்லை. மரண அடி. இதுவரை இப்படி நடந்தது இல்லை. மேற்படி நாடுகளில் கொதிப்பு, கொந்தளிப்பு, குமுறல்.. விடமாட்டோம் என்று ஆவேசம்.
இந்த அவமானத்துக்கு காரணம் இந்தியா என்று  புகார் கூறுகின்றன ஆஸி,நியூசி , இங்கிலாந்து நாடுகள் . புதுப் பணக்காரன் தலைகால் புரியாமல் ஆடுகிறானாம். மொத்த கிரிக்கெட் வருமானத்தில் 80 சதவீதம் இந்தியர்களால் கிடைப்பது என்பதால், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் ஜால்ரா அடிக்கின்றனவாம்.
ஐசிசிக்கு 101 வயது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா சேர்ந்து ஆரம்பித்த அமைப்பு. நிறவெறி கொள்கையால் கடைசி நாடு 1970ல் வெளியேற்றப்பட்டது. மீதமுள்ள இரு நாடுகளும் ஐசிசியை பாட்டன் சொத்தாக கையாண்டு, மற்ற நாடுகளையெல்லாம் கிள்ளுக்கீரைகளாக நடத்தியது நூறாண்டு வரலாறு. இன்று அது திரும்புகிறது. ஹோவர்ட் சொந்த நாட்டிலேயே மக்களிடம் ஆதரவு இல்லாதவர். வேறு நபரை முன்மொழிந்தால் பரிசீலிக்கிறோம் என்று ஐசிசி சொல்கிறது. பிரிந்து செல்லலாமா என ஆஸி , நியூசி நாட்டு கிரிக்கெட் வாரியங்கள்  யோசிக்கின்றன.
‘விதி’யை மாற்ற அவர்களால் முடியாது. நம்மால் முடியும். வாங்கியதை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதில் தவறில்லை. அதே சமயம், பவார் தலைமையில் ஐசிசி பரிணமிக்குமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய ஆட்டம்.
Friday, July 2, 2010 | By: INDIA 2121

ஒவ்வொரு இந்தியர் மீதும் சராசரி கடன் பாக்கி ரூ.11,145

 இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் பாக்கி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகம். இது 2009 மார்ச் மாத நிலவரம். அதன் பிறகு மேலும் அதிகரித்திருக்கலாம்.
இதை ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2008 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2008&09 நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.10.53 லட்சம் கோடியாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 16.5 சதவீத அதிகரிப்பு.
இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன் தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன் தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
மொத்த வெளிநாட்டு கடனில் அரசின் பங்கு 2008ல் 24.4 சதவீதமாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் 25.7 சதவீதமாக உயர்ந்தது. மாறாக, அரசு சாராத கடன் தொகை 75.6 சதவீதத்தில் இருந்து 74.3 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் குறுகிய கால கடன் 41.2 சதவீதம். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்தும் வர்த்தக நோக்கில் வெளிநாடுகளிடம் இருந்தும் அதிக அளவில் கடன் பெறப்படுகிறது.
இதனால் ஆண்டு தோறும் நாட்டின் கடன் சுமை வேகமாக உயர்ந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 110 கோடி என்று வைத்துக் கொண்டால் நிலுவையில் உள்ள கடன்களால் ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் சுமை உள்ளது.

மாவோயிஸ்ட்

 இன்னும் எத்தனை முறை இந்த விஷயத்தை பற்றி எழுத நேருமோ தெரியவில்லை. மாவோயிஸ்ட் நக்சலைட் கும்பல் முப்பது போலீசாரை கொலை செய்திருக்கிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் சிப்பாய்கள் இதே மாதிரியான தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாவது புதிதல்ல. என்றாலும், எந்த நேரத்தில் எந்த திசையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறந்து வரும் என்பதை ஊகிக்க முடியாமலே இருப்பது பரிதாபம். இது யுத்தம் அல்ல. எதிரிகள் சீருடை அணிந்து வரிசையில் முன்னேறி வரவில்லை. எந்த அடையாளமும் இல்லாமல் திடீரென்று கும்பலாக வந்து சுற்றி வளைத்து ஒளிந்திருந்து சுட்டுத் தள்ளுவதுதான் நக்சல் பாணி. இப்போது சட்டீஸ்கரில் நடந்துள்ள தாக்குதல் வித்தியாசமானதல்ல.
ஒவ்வொரு சிப்பாயின் உடலிலும் நாலைந்து தோட்டாக்கள் பாய்ந்திருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்தனை குண்டுகள் துளைத்தும் சாகாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை கழுத்தை அறுத்தும், இரண்டு பேரை கல்லால் தலையை நசுக்கியும் கொலை செய்திருக்கின்றனர். ஏழைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் நக்சலைட்டுகள் எவ்வளவு இளகிய மனம் படைத்தவர்கள் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.
வாழ்வாதாரத்தை அழிப்பது, உரிமைகளை மறுப்பது, உழைப்பை சுரண்டுவது போன்ற அநீதிகள் ஓரிரு விதிவிலக்குகளை தவிர அனைத்து தரப்பு மக்களும் ஏதாவது ஒரு வகையில் அனுபவித்து வரும் இன்னல்கள். வரலாறு எழுதப்படுவதற்கு முன்பிருந்தே இந்த கதைதான். நியாயத்துக்காக போராட சமூக கட்டமைப்புக்கு உட்பட்ட வழிமுறைகள் எத்தனையோ இருக்கும்போது, காட்டுமிராண்டித்தனமாக மனித உயிர்களை வேட்டையாடுவது மன்னிக்க முடியாத குற்றம்.
உலக வல்லரசாக உருவாகும் கனவில் திளைக்கும் இந்திய குடிமகனின் உயிர் உண்மையில் அத்தனை மலிவா என்று ஆச்சரியமாக இருக்கிறது. விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்திக்கும்போது இது அடிப்படையில் சட்டம் & ஒழுங்கு பிரச்னை என்பது புலப்படும். அதை காக்கும் கடமையை போலீஸ் செய்யவில்லை என்பதால் இன்று ராணுவத்தை அழைப்பது பற்றி விவாதம் நடக்கிறது. காவல் துறையை அதிகார வர்க்கத்தின் ஏவல் துறையாக மாற்றியதன் விளைவை அனுபவிக்கிறது நாடு.
Related Posts with Thumbnails