Monday, August 30, 2010 | By: INDIA 2121

இந்திய வங்கிகளில் மோசடி 2,000 கோடியை தாண்டியது

 கடந்த 2009 - 10ம் நிதியாண்டில் நாடு முழுவதும் வங்கிகளில் 24,797 மோசடிகள் நடந்துள்ளன. மோசடி தொகை 2,000கோடியை தாண்டியது.
கடந்த 2009 - 10ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இது பற்றி கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2005 - 06ம் ஆண்டில் 13,914 வங்கி மோசடிகள் நடந்தன. மொத்த மோசடி தொகை
1,381 கோடி. ஆனால், 2009 - 10ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,797 ஆகவும், மோசடி தொகை2,017 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2008  - 09ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 23,914. மொத்த மோசடி தொகை1,883 கோடி.
2009 - 10ம் நிதியாண்டில் நடந்த மொத்த மோசடிகளில் 1கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள மோசடிகளின் எண்ணிக்கை 225. இதில் சம்பந்தப்பட்ட தொகை 1,524 கோடி. இதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 212 ஆகவும், தொகை 1,404 கோடியாகவும் இருந்தது. வங்கிகள், இதற்கு முன்பு செய்ததைப் போலவே இந்த மோசடிகள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. 2009 - 10ம் ஆண்டில் 4,01,476 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2008 - 09ல் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 3,98,111. அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கை 1,95,811. கடந்த நிதியாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் 86.9 சதவீதம் வங்கிகளால் கண்டு பிடிக்கப்பட் டவை. மற்றவை ரிசர்வ் வங்கியால் கண்டு பிடிக்கப்பட்டன. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கக்கூடும்.
கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து இருப்பதால் அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியாமலேயே பொதுமக்களின் கைக்கு கிடைத்து அவர்கள் அதை வங்கிலேயோ அல்லது வர்த்தக நிறுவனங்களிலேயோ கொடுக்கக் கூடும். அப்படி, தெரியாமல் வாங்கி வங்கி கவுண்டர்களில் கொடுக்கும்போது 5 நோட்டுகள் வரை மட்டும் இருந்தால், அந்த நோட்டுகளை முடக்கி வைத்து விட்டு அதற்கான ரசீதை அந்த நபருக்கு வங்கிகள் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அந்த நபருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், அந்த நபர்களின் அடையாளத்துக்கான அத்தாட்சியை வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails