Friday, August 13, 2010 | By: INDIA 2121

மொபைல் தண்ணியில விழுந்துடுச்சா? உடனே எடுத்து குக்கர்ல போடுங்க...

 
தண்ணீரில் நன்கு ஊறிய செல்போனை எடுத்துக் கொள்ளவும். அதை ‘டிரையர் பாக்ஸில்’ போட்டு மூடவும். அரை மணி நேரம் கழித்து உங்கள் சூப்பர் செல்போன் ரெடியாகிவிடும். தேவைக்கேற்ப பவுச், டேக் சேர்த்து சட்டை பாக்கெட்டிலோ, பெல்ட்டிலோ செருகிக் கொள்ளலாம். இது காமெடி ‘சமையல்’ குறிப்பு அல்ல. நிஜம்தான்.
ரசம், தண்ணீர் தொட்டி, டாய்லெட்டில் செல்போன் தவறிவிழுந்த அனுபவம் பலருக்கு இருக்கும். மழைநீரில் குளிக்காத செல்போன்களே பெரும்பாலும் இருக்காது. வெளிப்பகுதியை டவல் போட்டு துடைத்து, பல மணி நேரம் வெயிலில் காய வைத்து சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றாலும், முதல் ஸ்குரூவை கழற்றியதுமே ‘நோ வாரன்டி’ என்று கறாராக சொல்லிவிடுவார் சர்வீஸ் சென்டர் ஊழியர். செல்போனின் உள்பகுதிகளில் புகுந்த தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் காய்வதில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறது ஜப்பானை சேர்ந்த ஜே.எம்.சி. ரிஸ்க் சொல்யூஷன்ஸ் நிறுவனம். தண்ணீரில் நனைந்த செல்போனை காயவைப்பதற்காக ‘டிரையர் பாக்ஸ்’ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது. சிறிய ஜெராக்ஸ் மெஷின் சைஸில் இருக்கிறது கருவி. நனைந்த செல்போனை இதனுள் போட வேண்டும். அரை மணி நேரத்தில் செல்போனின் உள்பாகங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் முழுவதும் காய்ந்துவிடுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்பட பல நகரங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், செல்போன் சர்வீஸ் சென்டர் உள்பட பல இடங்களிலும் விரைவில் இக்கருவிகள் வைக்கப்பட உள்ளன. செல்போனை உலர்த்தித் தர ரூ.585 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இக்கருவி பற்றி ஜே.எம்.சி. அதிகாரிகள் கூறுகையில், “செல்போன் ஸ்கிரீன், உள்ளே இருக்கும் சிப்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். சற்று வெப்பம் அதிகரித்தாலும் செல்போன் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுவிடும். எனவே, அதற்கேற்ற வெப்பம் தரும் வகையில் டிரையர் பாக்ஸ் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
டோக்கியோவுக்கு வந்து, சென்னைக்கு வந்து, நம்ம ஏரியாவுக்கு டிரையர் பாக்ஸ் வருவதற்குள் தண்ணீரில் செல்போன் விழுந்துவிட்டால் என்ன செய்வது? வெளிப்பகுதியை நன்கு துடைத்து, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போடுங்கள். ஈரத்தன்மையை அரிசி எடுத்துவிடும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails