Wednesday, August 25, 2010 | By: INDIA 2121

சென்னையில் இறக்குமதியாகும் ஆபத்து

 சென்னை நகரை எலக்ட்ரானிக் குப்பை மேடாக்க ஒரு கூட்டமே கிளம்பியிருக்கிறது. இ-வேஸ்ட் அல்லது இ-ஸ்கிராப் என்று சொல்லப்படும் மின்னணு கழிவுகள்.
டெலிபோன், கம்ப்யூட்டர், டெலிவிஷன், கால்குலேட்டர், வாஷிங் மெஷின், ரேடியோ, டியூப்லைட், ஃபிரிட்ஜ், பொம்மை, பேட்டரி, டிவிடி பிளேயர்.. மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் எதுவானாலும் செயலற்று போனால் இ - ஸ்கிராப். அமெரிக்காவில் ஓராண்டில் 3 கோடி கம்ப்யூட்டர் 10 கோடி டெலிபோன் இப்படி கழிக்கப்படுகிறது. முழுவதும் செயல் இழந்திருக்கலாம் அல்லது காலாவதி ஆகியிருக்கலாம். ரிப்பேருக்கு அழுவதைவிட புதிதாக வாங்குவது சுலபம் என்பதால் இப்படி.
இந்த சாதனங்களில் பல பாகங்கள் மறுசுழற்சி முறையில் புதுப்பிக்க கூடியவை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் விலை குறைந்த இரும்பு, அலுமினியம் போன்றவையும் இவற்றில் இருக்கின்றன. உடலுக்கும் சூழலுக்கும் கேடு உண்டாக்கும் நச்சு சமாசாரங்களும் உள்ளன. குழி தோண்டி புதைத்தாலும் நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கும் வீரியம் கொண்டவை இந்த பொருட்கள்.
இவற்றை கப்பல் கப்பலாக சென்னைக்கு ஏற்றுமதி செய்கின்றன பல நாடுகள். எரியாத டியூப்லைட், செத்த பேட்டரி பொறுக்கி உடைத்து ஈயம், பித்தளை சுரண்டி சேகரிக்கும் பழக்கம் இருப்பதால் இங்குள்ள சில வியாபாரிகள் ஆபத்தான அந்நிய கழிவுகளை வரவழைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் நிலம், நீர், காற்று மாசு படுவதுடன் எண்ணற்ற நோய்களும் பரவும் என்பதை அவர்கள் மறைக்கின்றனர். மூன்று நாள் முன்பு 4 நாடுகளில் இருந்து 8 கன்டெய்னர்களில் வந்த 127 டன் கழிவுகளை சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர். மூன்று மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.
கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும் இவ்வாறு தொடர்ந்து நடப்பது புதிராக இருக்கிறது. எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு வேகமாக அதிகரிக்கும் நிலையில், இங்கு இ-வேஸ்ட் அதிகரிக்காமல் தடுக்க வேண்டிய நெருக்கடி நமக்கு இருக்கிறது. இந்த லட்சணத்தில் கூடுதல் ஆபத்தை இறக்குமதி செய்யும் ஆசாமிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails