Friday, August 27, 2010 | By: INDIA 2121

கசக்குதே அமெரிக்கா.. இனிக்குதே இந்தியா

 அமெரிக்க மோகத்துடன் சென்ற இந்தியர்கள் தங்களது வேலை, கைநிறைய சம்பளம் போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு குடும்ப உறவுக்கும், பாசத்துக்கும் ஏங்கி தாய் நாடு திரும்பும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
‘என் மகள் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறாள்’, ‘மகன் இன்ஜினியராக இருக்கிறான்’ என்று சொல்வதை பெருமையாக கருதுகிறவர்கள் அந்தக்காலம் தொட்டு இந்த காலம் வரை இருக்கிறார்கள். பல இளைஞர்கள், இளைஞிகளின் கனவும் அமெரிக்கா செல்வதாகவே இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. ஆண்டுக்கணக்கில் அங்கு இயந்திரமயமான வாழ்க்கையில் உழன்ற பலர் உறவு, பாசம், கலாசாரம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்நாட்டு பிணைப்பை இழந்து விட்டது போல் உணருகின்ற பலரும் அவசர அவசரமாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
1990ம் ஆண்டு தனது 23ம் வயதில் ஐதராபாத்திலிருந்து அமெரிக்கா சென்றவர் கவுதம். பட்ட மேற்படிப்பு, மல்ட்டிநேஷனல் ஐ.டி. கம்பெனியில் உயர் பதவி, கைநிறைய சம்பளம், அமெரிக்க சிட்டிஷன்சிப்புடன் பிறந்த குழந்தை என கடந்த 18 வருடமாக அமெரிக்கவாசியாகவே வாழ்ந்தார். அந்த வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு திடீரென சொந்த ஊர் திரும்பினார். அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி என உறவுகளோடு வந்து கண்ணீரோடு கலந்து விட்டார்.
“பையை நிரப்பும் காசைவிட குடும்ப உறவுகள்தான் நம் மனதை ஆள்கிறது. சதா ஊர் ஞாபகம் வருகிறது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஊரில் இந்நேரம் நம் உறவுகள் என்ன செய்யும்? அவளுக்கு கல்யாணமாமே.. இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறதாமே.. என்ற தகவல்கள் ஏதோ ஒருவகையில் நாம் அங்கு இல்லாததை ஒரு இழப்பாக கருதச் செய்கிறது. பணம்தான் முக்கியம் என்று நினைத்தால் அதை இப்போது இந்தியாவிலேயே சம்பாதிக்கலாம். அதனால் நான் இந்தியா திரும்பிவிட்டேன்” என்கிறார் கவுதம்.
அமெரிக்காவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றவர் டாக்டர் பி.ரகுராம். வசதி, வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு திடீரென்று இந்தியா திரும்பினார். ‘இந்தியாவில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் மார்பக அறுவை சிகிச்சை மையங்கள் இல்லை என்று உணர்ந்தேன். அந்த சேவையை நம் மக்களுக்கு வழங்கும் லட்சியத்துடன் ஊர் திரும்பி விட்டேன். என் தாயார் பெயரில் மருத்துவமனை தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. இதன் மூலம் முழு திருப்தி கிடைத்திருக்கிறது” என்றார்.
அதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரமதி ரெட்டி (அப்பல்லோ மருத்துவமனை சீனியர் கன்சல்டன்ட்) கூறும்போது, “13 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து தம்பா, புளோரிடா பகுதிகளில் மருத்துவ தொழில் செய்தேன். அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிட்டேன். நமது கலாசாரம், குடும்ப பந்தம், பாசங்கள் நிறைந்த உறவுக்கான சூழ்நிலையில் எனது குழந்தையை வளர்ப்பதற்காக ஊர் திரும்பினேன்” என்றார்.
டாக்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இன்ஜினியர்கள், இந்தியா திரும்பினால் நிறைய சம்பாதிக்க முடியாது என்ற எண்ணம் கொண்ட உயர் அதிகாரிகள், வசதியான வாழ்க்கை இந்தியாவில் கிடைக்காது என்று எண்ணுபவர்கள்கூட மீண்டும் இந்தியா திரும்பும் எண்ணத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பல தொழில் அதிபர்களும், “அங்குள்ள மார்க்கெட் நிலவரம் மங்கி வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி தாய் மண்ணுக்கான வீரியம் எங்கிருந்தாலும் அதிகரித்து வருகிறது என்று கூறி தங்கள் தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு இங்கு வந்து வர்த்தகத்தை தொடங்கிவிட்டனர்.
நிதிமுதலீடு தொழில் நடத்தி வந்த மம்தா பானர்ஜி கூறும்போது, “18 வருடம் அமெரிக்காவில் நிறுவனம் நடத்தி வந்தேன். இப்போது அதற்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்தியா திரும்பி, இங்கே கம்பெனி தொடங்கி விட்டேன். மைக்ரோ சாஃப்ட் துறையில் புகழ்பெற்று விளங்கும் எனது கணவரும் தனது டீமுடன் இந்தியா திரும்பி நிறுவனத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் இப்படியொரு மனமாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

yes its a welcoming attitude

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய தாத்தாவும் பாட்டியும் கப்பல் ஏறி மலேசியா வந்தார்கள். கூலிகளாக வேலை செய்து இந்த நாட்டின் பிரஜைகளானார்கள். அவர்களின் பேரப் பிள்ளைகளாகிய நாங்கள் படித்து பட்டம் பெற்று நல்ல பதவிகளில் இருக்கிறோம். இருந்தாலும் இந்தியத் தாய் மண்ணின் நினைவுகள் வந்து கொண்டே இருக்கும். அதனால், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தமிழ் நாட்டிற்கு வருகிறோம். ஓரிரு மாதங்கள் தங்குகிறோம். உறவுகள் உடைந்து போவதில்லை.

Post a Comment

Related Posts with Thumbnails