Tuesday, August 17, 2010 | By: INDIA 2121

பாஸ் வேலைக்கு ஆண்களே தகுதி

 ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்வதை பெண்களே விரும்பவில்லை என்கிறதாம் ஒரு சர்வே. பிரிட்டனில் நடத்தியது. மூவாயிரம் ஊழியர்கள், அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தொகுத்திருக்கின்றனர். பாஸ் பொறுப்புக்கு ஆண்களே சரியானவர்கள் என்று 75 சதவீத ஆண்களும் 63 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.
தலைமை பதவியில் இருப்பவரை பாஸ் என்று குறிப்பிடுவது சகஜம் என்றாலும் அவர் பெண்ணாக இருந்தால் பாஸ் என அழைப்பவர்கள் அரிது. பெண்கள் வேலைக்கு போக தொடங்கிய காலத்தில் இருந்தே இப்படியான ஆய்வுகள் நடக்கின்றன. முடிவுகள் வேறு மாதிரி இருந்ததில்லை. காரணங்களும் கூட.
சொந்த பிரச்னைகளை வேலையுடன் சம்பந்தப்படுத்தி குழப்புவதும், முதுகில் குத்துவதும் பெண்கள் சொல்லும் குறைகள். குத்திக் காட்டுவது, சந்தேகப்படுவது, மன பிராந்தி, மூட் மாற்றம் என்பவை ஆண்கள் தரும் பட்டியல். ஆண் பாஸ் என்றால் நாற்காலியை பற்றி அனாவசியமாக பயப்படுவதில்லை; எது சொன்னாலும் காதுகொடுத்து கேட்பார்; புகார்கள் மீது நியாயமாக முடிவு எடுப்பார் என இரு தரப்பும் புகழ்மாலை சூட்டுகின்றன.
ஆணுக்கு அடுத்த இடம்தான் பெண்ணுக்கு என்பது எல்லா நாகரிகத்திலும் மனித மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திரா காந்திகளும் நூயிகளும் விதிவிலக்குகளாக பார்க்கப்படுகின்றனர். உதைக்க உரிமையுள்ளவன் கணவன் என்று மனைவி தீர்ப்பெழுதும் நிலை மாறவில்லை. பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கிய ஒரு நூற்றாண்டுக்குள் தலைகீழ் மாற்றம் சாத்தியமில்லை. அத்தகைய பெண்கள் சிறுபான்மை. அவர்களிலும் இடறிவிழாமல் ஏணியேறி மேலிடத்தை எட்டுவோர் இன்னும் குறைவு. இந்த பயணத்தில் எதிர்கொண்ட அநீதிகள் ஆழ்மனதில் ஏற்படுத்தும் காயங்கள் வாழ்நாளில் ஆறக்கூடியவை அல்ல. சுலபத்தில் யாரையும் நம்ப மறுப்பது அந்த வலியின் வெளிப்பாடு. அதோடு சிறுபான்மை பார்வையும் சேரும்போது வெளிமதிப்பீடுகள் இப்படித்தான் அமையும்.
என்றாலும், 37 சதவீத பெண்களும் 25 சதவீத ஆண்களும் பெண் பாஸ் ஓகே என்று சொல்வதை உதாசீனப்படுத்த முடியுமா, என்ன? அடுத்த நூற்றாண்டில் இந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை இன்று யாராலும் கணிக்க முடியாது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails