Friday, August 27, 2010 | By: INDIA 2121

‘மப்பில்’ இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது

 தண்ணியடித்து விட்டு போதையில் இருந்தால் பைக், கார் ஸ்டார்ட் ஆகாது. இதற்கான பிரத்யேக கருவியை கோவை இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.
கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). பி.இ. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர். 2004&ம் ஆண்டில் முத்துக்குமார் கண்டுபிடித்த ‘ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர்’ என்ற கருவிக்கு போபாலில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது. பூட்டை உடைத்து திருடர்கள் வீட்டுக்குள் வந்தால், இந்தக் கருவி சத்தமிடுவதுடன் தானாக அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும். இதனால் திருட்டை தவிர்க்கலாம். இதேபோல பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது, ‘டிரங் அண்ட் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க இந்தக் கருவி பயன்படும். இதை பைக், கார்களில் டேஸ் போர்டு இருக்கும் இடத்தில் பொருத்த வேண்டும். கருவி சீல் வைக்கப்பட்டிருப்பதால் எலக்ட்ரிக் அமைப்பை கழற்றி மாற்ற முடியாது.
டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார், தானாக செயல்படும். வாகனம் ஓட்டுபவர் குடித்து இருந்தால் ‘மன்னிச்சிடுங்க பாஸ்... நீங்க மது குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்ட முடியாது’ என்று எச்சரிக்கை வரும். மது குடிக்காவிட்டால், டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும். அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும். அந்த எண்ணுடன், ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வாகனம் ஸ்டார்ட் ஆகும். வாகனத்தை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தால் 30 வினாடியில் கண்டுபிடித்து வாகனம் தானாக நின்றுவிடும். ‘மத்திய, மாநில அரசுகள், வாகன உற்பத்தியாளர்கள் உதவினால், இந்தக் கருவியை ஒவ்வொரு வாகனங்களிலும் பொருத்தி, விபத்துகளை தடுக்க முடியும்’ என்கிறார் முத்துக்குமார்.

2 comments:

dearbalaji said...

Great good one

நண்பர்கள் உலகம் said...

சபாஷ்!இம்மாத்ரியன செய்திகளுடன் தொடர்பு கொள்ள முகவரியையும் தெரிவித்தால் நன்று.

Post a Comment

Related Posts with Thumbnails