Thursday, August 19, 2010 | By: INDIA 2121

‘பொன்னி’ அரிசி இந்தியாவுக்கு சொந்தம்

 மலேசிய நிறுவனத்துக்கு எதிரான வழக்கில், ‘பொன்னி அரிசி’ டிரேடுமார்க் இந்தியாவுக்கே சொந்தம் என மலேசிய உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மலேசியாவின் சியாரிகட் பைஸா நிறுவனம் கடந்த 1990களின் பிற்பாதியில் இந்தியாவிலிருந்து பொன்னி அரிசியை இறக்குமதி செய்து ‘தாஜ் மகால்’ பிராண்டின் கீழ் விற்பனை செய்து வந்தது. 2000 ஆண்டில் மலேசிய டிரேடுமார்க் சட்டத்தின்படி, ‘பொன்னி’ என்ற பெயரில் அரிசியை விற்பதற்கான டிரேடுமார்க் உரிமை வழங்குமாறு கோரி இருந்தது.
இதன்படி, மலேசிய நிறுவனத்துக்கு கடந்த 2006ம் ஆண்டு டிரேடுமார்க் வழங்கப்பட்டது. மலேசிய நிறுவனத்தின் இந்த செயலுக்கு இந்திய விவசாயிகள் மற்றும் அரிசி ஏற்றுமதியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், ‘பொன்னி’ என்ற பெயர் இந்தியாவுக்கு சொந்தமானது.
குறிப்பாக, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் கடந்த 1986ம் ஆண்டு பொன்னி ரகத்தை கண்டுபிடித்தது. பாசுமதி அரிசிக்கு அடுத்தபடியாக இதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. பின்னர் லட்சக் கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
சியாரிகட் நிறுவனத்துக்கு எதிராக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (ஏபிஇடிஏ) மலேசிய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதில், பொன்னி என்ற பெயர் இந்தியாவுக்கே சொந்தம் அதை மலேசிய நிறுவனம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வழக்கில் மலேசிய உயர்நீதிமன்றம் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதுகுறித்து, ஏபிஇடிஏ தலைவர் அசித் திரிபாதி கூறுகையில், ‘‘பொன்னி அரிசி டிரேடு மார்க் இந்தியாவுக்கே முற்றிலும் சொந்தம், இந்த பெயரை சியாரிகா நிறுவனம் பயன்படுத்தக் கூடாது என மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது’’ என தெரிவித்தார்.
மேலும், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த அரிசியை பொன்னி என்ற பெயரில் விற்கவும் சியாரிகா நிறுவனத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2008 ஏப்ரலில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடைவிதிப்பதற்கு முன்பாக, ஆண்டுதோறும் 1.5 லட்சம் டன் பொன்னி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. இதில் மலேசியாவுக்கு மட்டும் 15 ஆயிரம் டன் ஏற்றுமதி ஆனது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails