Wednesday, August 25, 2010 | By: INDIA 2121

ஆனந்த் இந்திய குடிமகனா வெளிநாட்டு பிரஜையா’

 எப்போதும் சண்டை சச்சரவுடன் வாழும் மக்கள், எதிரி நாடு போர் தொடுத்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். அப்படி யாரும் உதவிக்கு வராத பட்சத்தில் உள்நாட்டிலேயே எவராவது அந்த பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கிறது.
விஸ்வநாதன் ஆனந்த் விவகாரத்தில் மனிதவள மேம்பாடு துறை அதிகாரி ஒருவருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கணித மாநாட்டை முன்னிட்டு ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் பல்கலைக்கழகம் தீர்மானித்தது. மத்திய பல்கலை என்பதால் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதை கேட்டதற்கு, ‘ஆனந்த் இந்திய குடிமகனா வெளிநாட்டு பிரஜையா’ என்று சந்தேகம் கிளப்பி மொத்த பேருக்கும் ஒரே நேரத்தில் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டார் அதிகாரி.
‘ஆனந்த் இந்தியன் இல்லை என்றால் வேறு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது’ என்ற கேள்வியில் தொடங்கி, ‘பச்சைத் தமிழனை அந்நியனா என கேட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்’ என்பதுவரை இணையதளத்தில் சர்வதேச இந்தியர்களின் ஆவேசம் தெறிக்கிறது. சதுரங்க உலகின் சக்கரவர்த்தி, செஸ் ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே மனிதன், பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு வீரன், ஒவ்வொரு வெற்றிக்காகவும் நாடாளுமன்றத்தால் வாழ்த்தப்படும் மகத்தான இந்தியன் ஆனந்த். மாயவரத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து உலகை வென்றவர் இன்று ஸ்பெயினில் வசிக்கிறார். வசிப்பிடத்தால் குடியுரிமை மாறுவதில்லை. அவரது பாஸ்போர்ட் மீது அசோக சக்கர முத்திரைதான் மின்னுகிறது.
இதெல்லாம் தவிர, கவுரவ பட்டத்துக்கும் குடியுரிமைக்கும் சம்பந்தமே கிடையாது. இந்திய தலைவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் நமது நிறுவனங்கள் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் கவுரவ பட்டங்கள் வழங்குவது வழக்கமான நடைமுறை. அப்படி இருக்கும்போது ஒரு அரசு அதிகாரிக்கோ பல்கலைக்கழக நிர்வாகிக்கோ இப்படியொரு சந்தேகம் எழுந்ததே புதிராக இருக்கிறது.
பக்கத்து நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வந்து வசிப்பவர்களுக்கு குடியுரிமையும் சலுகைகளும் கொடுத்து வாழவைக்கும் அதிகார வர்க்கத்துக்கு சொந்த நாட்டு குடிமகன் விளையாட்டு உலகின் தலைமகன்  அந்நியனாக தெரிவது கடைந்தெடுத்த அநியாயம்.

2 comments:

geethappriyan said...

நல்ல பதிவு சுட்டி பையன்,

geethappriyan said...

இதை ஜாக்கியின் பதிவில் பின்னூட்டமாக போடுங்கள்,ஆனந்துக்கு பெருமை சேருங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails