Thursday, August 19, 2010 | By: INDIA 2121

உயிரை குடிப்பதில் முதலிடம்

புற்றுநோயால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.42 லட்சம் கோடி விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பணக்கார நோயாக உருவெடுத்துள்ளது. அத்துடன் மனித உயிரைக் கொல்வதில் இந்த ஆண்டில் புற்றுநோய்க்கு முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க புற்றுநோய் சங்கம், புற்றுநோய் குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வயது மூப்பு, விபத்து, இயற்கைச் சீற்றம் என மனித உயிரிழப்புக்கு பல்வேறு காரணம் இருந்தாலும், கொடிய நோய் காரணமாக உயிரிழப்பவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அதிலும், எய்ட்ஸ், இதய நோய், புற்று நோய் ஆகிய தீராத வியாதிகள் மனிதர்களை பலி வாங்குகிறது.
அண்மைக் காலமாக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மற்ற எல்லா நோய்களையும் விட புற்று நோயால் உயிரிழப்பவர்கள் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது. இந்த நோய்க்காக உலகம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.42 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இதன்மூலம் உலகின் காஸ்ட்லி நோயாக உருவெடுத்துள்ளது.
இந்த வரிசையில் இதய நோய்க்கும் இரண்டாம் இடம் கிடைக்கும். இதற்காக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி பணம் விரயமாகிறது. புற்று நோய்க்கான செலவைவிட இது 20 சதவீதம் குறைவு.
‘‘குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் புற்று நோய்க்கான செலவு வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும்’’ என அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் செப்ரின் தெரிவித்தார்.
ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் மற்றும் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வு மேற்கொண்டனர். ஒரு காலத்தில் புற்றுநோயால் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இப்போது ஏழை நாடுகளிலும் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
புற்று நோயால் உயிரிழக்கும் 3ல் ஒருவர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவராக உள்ளார். எனவே, இதிலிருந்து தற்காத்துக் கொள்ள உலக நாடுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails