Wednesday, August 11, 2010 | By: INDIA 2121

இந்தியாவின் சாதனை பெண்

 தேஜஸ்வினி என்ற தங்க மங்கை புதிதாக கிடைத்திருக்கிறார் நமக்கு. கிரிக்கெட், டென்னிஸ் அளவுக்கு ஏனைய டீம் விளையாட்டு எதுவும் பிரபலம் ஆகாத நாட்டில் தனிநபர் விளையாட்டு பற்றி பேசவே இடமில்லை. அத்தகைய சூழலில் துப்பாக்கி சுடும் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை ஒரு பெண் வென்று வந்திருப்பது அபாரமான சாதனை.
மராட்டிய பெண் தேஜு. அப்பா சாவந்த் கடற்படையில் என்ஜினியராக இருந்தவர். அம்மா சுனிதாவுக்கு விளையாட்டில் ஈடுபாடு அதிகம். குறி பார்த்து சுடுவதில் தேஜு 12 வயதிலேயே ஆர்வம் காட்டினார். அதில் அவளுக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது என்று ஒரு பயிற்சியாளர் சொன்னதை பெற்றோர் பிடித்துக் கொண்டனர். ஆனால், துப்பாக்கியும் மற்ற சாதனங்களும் வாங்கி பயிற்சி பெற நிறைய பணம் தேவை. தெரிந்தவர்களிடம் மகளுக்காக உதவி கேட்டார் தந்தை. பலர் கேலி செய்தனர்; சிலர் செலவில்லாத விளையாட்டை சிபாரிசு செய்தனர். உலக சாம்பியனாக வரும் அளவுக்கு தேஜுவுக்கு திறமை இருப்பதாக சாவந்த் சொன்னதை ஒரு அப்பாவின் பெருமைப் பேச்சு என்றுதான் எடுத்துக் கொண்டனர்.
பெற்றோரின் கஷ்டத்தை சகிக்க முடியாமல், ‘இதெல்லாம் சரிப்படாது, நான் ஏதாவது பட்டம் வாங்கி வேலைக்கு போகிறேன்’ என்று மகள் விரக்தியுடன் சொன்னதை தாய் ஏற்கவில்லை. ‘தொடர்ந்து பயிற்சி செய், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று தெம்பூட்டினார். சிறுகச் சிறுக கடன் வாங்கி, வீட்டு செலவை குறைத்து தேஜுவுக்கு வேண்டியதை செய்துகொடுத்தனர். அந்தப் பெண் ஜெர்மனி சென்று கழுத்தில் தங்கப் பதக்கமும் கையில் உலக சாம்பியன் பட்டமும் ஏந்தி திரும்பிவந்த போது சுனிதாவின் தாயுள்ளம் பெருமையில் தளும்பியது. ‘இந்த காட்சியை பார்க்க அவளது அப்பா இருந்திருக்க வேண்டும்.. 18 ஆண்டுகளாக அவர் கண்ட கனவு..’ என்று மகளை அணைத்துக் கொண்டு கண்கலங்கினார் சுனிதா. சாவந்த் உடல் நலம் பாதித்து பிப்ரவரியில் காலமானார்.
‘பணமும் பின்னணியும் பெரிதல்ல. உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று என் மகள் நிரூபித்து விட்டாள்’ என்று சுனிதா சொன்னது பெற்றோர்கள் மனதில் எழுத வேண்டிய செய்தி.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails