Saturday, August 21, 2010 | By: INDIA 2121

நிலவு சுருங்கி வருகிறது

 நிலவு சுருங்கி வருகிறது.. அதன் அளவில் இனி அதிகரிக்க வாய்ப்பு இல்லை’ என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு இது. நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களை வைத்தே நிலவு சுருங்குவதை கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் உட்பகுதியில் குறைந்து வரும் வெப்பநிலை காரணமாக அப்பகுதி சுருங்குகிறது. உட்பகுதி சுருங்குவதால் அந்த பருமனுக்கேற்ப மேற்பகுதியிலும் சுருக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கீறல்கள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடும் போது சமீப காலங்களில் இந்த கீறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் இந்த சுருக்கம் சட்டென நிகழவில்லையாம். பல பில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
நிலவின் சுருக்கம், மெல்ல மெல்ல காற்றிறங்கும் பலூன் போல இருக்கிறதாம். மேலும் நிலவின் வெப்பநிலை குறைவு காரணமாக இதுவரை அதன் ஆரம் 100 மீட்டர் வரை சுருங்கி விட்டது என்று கூறுகிறார் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனைச் சேர்ந்த தாமஸ் வாட்டர். நிலவின் மேற்பரப்பை காட்டும் புகைப்படங்களை ஆய்வு செய்து, நிலவின் உயர்ந்த பரப்பில் இந்த கீறல்கள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த கீறல்களை ‘லோபேட் ஸ்கார்ப்ஸ்’ என்கிறார்கள். 1970களில் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களிலும் இதே கீறல்கள் இருந்தன. ஆனால் தற்போது ‘நாசா’ எடுத்த படங்களில் 14 புதிய கீறல்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதை வைத்தே நிலவு சுருங்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
‘சுருக்கத்தால் நிலவு முழுக்க மறைந்து விடப் போவதில்லை. அதேசமயம் அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு கிடையாது. இதனால் பூமிக்கும் ஆபத்து வராது’ என்று கூறுகிறார் தாமஸ் வாட்டர்.

1 comments:

Post a Comment

Related Posts with Thumbnails