Friday, July 23, 2010 | By: INDIA 2121

தனி நாடு பிரகடனம்

 கொசாவோ மக்கள் தனி நாடு பிரகடனம் செய்ததில் சட்டப்படி எந்த தப்பும் இல்லை என்று உலக கோர்ட் ஒரு தீர்ப்பை அறிவித்திருக்கிறது. உலகெங்கும் உள்ள பிரிவினைவாத அமைப்புகள் வானை நோக்கி தோட்டாக்கள் வெடித்து கொண்டாட தூண்டும் தீர்ப்பு. இந்தியா போன்ற நாடுகள் இதன் விளைவுகளை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.
யூகோஸ்லாவியா என்று ஒரு நாடு இருந்தது நினைவிருக்கலாம். சோவியத் யூனியன் உடைந்த அதிர்ச்சியில் சிக்கி சிதறிய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒன்று. அதிலிருந்து 6 நாடுகள் தோன்றின. ஒன்று செர்பியா. அதன் தெற்கில் கொசாவோ என்ற மாநிலம். 20 லட்சம் ஜனத்தொகை. 20 சதவீதம் செர்பியர்கள். மீதி அல்பேனியர். இருவருக்கும் ஒத்துப் போகாது. அடிக்கடி கலவரம். செர்பிய ராணுவம் கட்டுப்படுத்த போராடியது. மனித உரிமை மீறல் என்று கூறி அமெரிக்கா தலையிட்டது. நேட்டோ விமானங்கள் 78 நாள் குண்டுமழை பொழிந்தன. செர்பிய படைகள் 1999ல் வெளியேறின. கொசாவோ நிர்வாகத்தை ஐ.நா கையில் எடுத்தது. 2008ல் கொசாவோ தனி நாடு என சட்டமன்றத்தில் அல்பேனியர்கள் பிரகடனம் செய்தனர்.
செர்பியா அரசு ஐ.நா.சபையில் முறையிட்டது. அது வழக்கை உலக கோர்ட்டுக்கு அனுப்பியது. அதன் தீர்ப்புக்கு சட்ட அதிகாரம் கிடையாது. அட்வைஸ் அளவுக்குதான் மரியாதை. ஆனாலும், பல நாடுகள் கொசாவோ அரசை அங்கீகரிக்கவும் அதோடு பிசினஸ் செய்யவும் வழி பிறக்கும். ‘நாட்டின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் ஒரு அரசின் அடிப்படை உரிமை. தேசிய எல்லைகளை மாற்றும் வகையில் ஒரு பிராந்தியம் சுதந்திர பிரகடனம் செய்வது அந்த உரிமைக்கு எதிரானது’ என செர்பியா வாதிட்டது. ‘சேர்வதா பிரிவதா என்பதை தீர்மானிப்பது ஒரு இனத்தின் அடிப்படை உரிமை’ என்று கொசாவோ வாதிட்டது.
‘சுதந்திர பிரகடனம் செய்வது சர்வதேச சட்டங்களில் தடை செய்யப்படவில்லை’ என்று மழுப்பலாக தீர்ப்பளித்திருக்கிறது உலக கோர்ட். இதை சாக்கிட்டு கொசாவோ ஐ.நா.வில் உறுப்பினராக முயலும். பிரிவினையை ஏற்காத ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்துவிடும்.
பெரிய நாடுகள் சிதறுவதால் தொடர்ந்து பயனடையும் நாடு அமெரிக்கா என்பது எதேச்சையான உண்மை.

1 comments:

இனிய தமிழ் said...

நன்றாக எழுதுகிறீர்...இனியதமிழ் மற்றும் நல்ல திரட்டிகளில் இணைக்கவும்...
http://www.striveblue.com/iniyatamil/

Post a Comment

Related Posts with Thumbnails