Wednesday, July 28, 2010 | By: INDIA 2121

யார் சொன்னது இந்தியாவை ஏழை நாடென்று?

நாட்டில் சோற்றுக்கே வழியில்லாமல் பஞ்சத்தில் பலர் இருக்க, மலைமலையாக உணவுப் பொருள்களை வீணடிக்கும் வினோதம் இங்குதான் நிகழும். சுப்ரீம் கோர்ட் இதற்கு குட்டு வைத்திருக்கிறது. வடக்கே பல மாநிலங்களில் திறந்தவெளி கிடங்குகளில் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. வெறும் தார்பாய்தான் போர்வை. இதனால் ஒவ்வோர் ஆண்டும் கணிசமான அளவுக்கு உணவுப் பொருள் வீணாகின்றன. மழையால் சேதம் அடைவதுதான் அதிகம். இதனால் உணவுப் பொருள் அழுகி கெடுகிறது. ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்க முடியாமல் குப்பையில் கொட்டப்படுகிறது. திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 15 லட்சம் டன் கோதுமையை பாதுகாக்க முடியாமலும் விற்க முடியாமலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் திரிசங்கு நிலையில் உள்ளன.
உணவுப் பொருள் வீணடிக்கப்படுவதை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்களை வீணடிப்பது மிகப்பெரிய குற்றம். நாட்டில் விளையும் ஒரு சிறிய தானியத்தை கூட பாழடிக்க கூடாது. ரேஷனில் வழங்க வேண்டிய உணவுப் பொருளை சரியாக பாதுகாக்காத அதிகாரிகளை அரசு தண்டிக்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களில் 61 ஆயிரம் டன் அழுகிவிட்டதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நாட்டின் பல இடங்களில் கிடங்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் அதிகளவு மழையால்தான் சேதம் அடைந்திருக்கின்றன. இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க கூடுதலாக கிடங்குகளை கட்டவும் சேமிப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
திறந்தவெளி கிடங்குகளில் மழையால் உணவுப் பொருள் சேதமாவதை தடுக்க இந்த நவீன காலத்தில் எத்தனையோ வழிகள் உள்ளன. அக்கறையின்மை, அலட்சியம் ஆகியவற்றால்தான் இவை செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. உணவுப்பொருள் வீணாவது என்பது மிக முக்கிய பிரச்னை. எனவே இதை தடுக்க போதிய நிதி ஒதுக்கி, தகுந்த ஏற்பாடுகள் செய்வது மத்திய அரசின் முக்கிய கடமை.

1 comments:

ஸ்ரீ.... said...

நேர்மையான கருத்து நண்பா. நல்ல இடுகை.

ஸ்ரீ....

Post a Comment

Related Posts with Thumbnails