Friday, July 2, 2010 | By: INDIA 2121

மாவோயிஸ்ட்

 இன்னும் எத்தனை முறை இந்த விஷயத்தை பற்றி எழுத நேருமோ தெரியவில்லை. மாவோயிஸ்ட் நக்சலைட் கும்பல் முப்பது போலீசாரை கொலை செய்திருக்கிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் சிப்பாய்கள் இதே மாதிரியான தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாவது புதிதல்ல. என்றாலும், எந்த நேரத்தில் எந்த திசையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறந்து வரும் என்பதை ஊகிக்க முடியாமலே இருப்பது பரிதாபம். இது யுத்தம் அல்ல. எதிரிகள் சீருடை அணிந்து வரிசையில் முன்னேறி வரவில்லை. எந்த அடையாளமும் இல்லாமல் திடீரென்று கும்பலாக வந்து சுற்றி வளைத்து ஒளிந்திருந்து சுட்டுத் தள்ளுவதுதான் நக்சல் பாணி. இப்போது சட்டீஸ்கரில் நடந்துள்ள தாக்குதல் வித்தியாசமானதல்ல.
ஒவ்வொரு சிப்பாயின் உடலிலும் நாலைந்து தோட்டாக்கள் பாய்ந்திருந்ததை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்தனை குண்டுகள் துளைத்தும் சாகாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரை கழுத்தை அறுத்தும், இரண்டு பேரை கல்லால் தலையை நசுக்கியும் கொலை செய்திருக்கின்றனர். ஏழைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் நக்சலைட்டுகள் எவ்வளவு இளகிய மனம் படைத்தவர்கள் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.
வாழ்வாதாரத்தை அழிப்பது, உரிமைகளை மறுப்பது, உழைப்பை சுரண்டுவது போன்ற அநீதிகள் ஓரிரு விதிவிலக்குகளை தவிர அனைத்து தரப்பு மக்களும் ஏதாவது ஒரு வகையில் அனுபவித்து வரும் இன்னல்கள். வரலாறு எழுதப்படுவதற்கு முன்பிருந்தே இந்த கதைதான். நியாயத்துக்காக போராட சமூக கட்டமைப்புக்கு உட்பட்ட வழிமுறைகள் எத்தனையோ இருக்கும்போது, காட்டுமிராண்டித்தனமாக மனித உயிர்களை வேட்டையாடுவது மன்னிக்க முடியாத குற்றம்.
உலக வல்லரசாக உருவாகும் கனவில் திளைக்கும் இந்திய குடிமகனின் உயிர் உண்மையில் அத்தனை மலிவா என்று ஆச்சரியமாக இருக்கிறது. விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்திக்கும்போது இது அடிப்படையில் சட்டம் & ஒழுங்கு பிரச்னை என்பது புலப்படும். அதை காக்கும் கடமையை போலீஸ் செய்யவில்லை என்பதால் இன்று ராணுவத்தை அழைப்பது பற்றி விவாதம் நடக்கிறது. காவல் துறையை அதிகார வர்க்கத்தின் ஏவல் துறையாக மாற்றியதன் விளைவை அனுபவிக்கிறது நாடு.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails