Tuesday, July 20, 2010 | By: INDIA 2121

நடுவர் மண்டையை உடைத்த வீரர்

 ஹாக்கி போட்டி நடுவரை மட்டையால் அடித்து மண்டையை உடைத்திருக்கிறார் ஒரு ஆட்டக்காரர். விளையாட்டில் பங்கெடுப்பவர்களை வீரர்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமில்லை என்பதற்கு நல்ல உதாரணம் இந்த சம்பவம். கோழைத்தனமாக நடுவரின் பின் தலையில் அடித்த சுனில் எக்கா இந்திய ராணுவத்தின் இலச்சினையுடன் களம் இறங்கியவர் என்பது இன்னொரு முரண்பாடு.
சென்னையில் நடந்து வரும் எம்சிசி  முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில் ஓஎன்ஜிசி அணியுடன் நடப்பு சாம்பியனான ஆர்மி லெவன் அணி மோதிய போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. தப்பாட்டம் ஆடிய இரு ஆட்டக்காரர்களுக்கு பச்சை கார்டு காட்டினார் நடுவர் சூரிய பிரகாஷ். ஒருவர் ஆர்மி, மற்றவர் ஓஎன்ஜிசி. இதை எதிர்த்து நடுவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர் ஆர்மி அணியினர். அப்போது எக்கா ஆவேசமாக நடுவரின் பின் தலையில் ஹாக்கி மட்டையால் ஓங்கி அடித்ததில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
சூரிய பிரகாஷ் நாட்டின் தலைசிறந்த நடுவராக 1993ல் கவுரவிக்கப்பட்டவர். நான்கு தையல்களுக்கு பிறகு கண்விழித்தவர், ‘21 வருட நடுவர் பணியில் இப்படி ஒரு தாக்குதலை பார்த்ததில்லை. இந்திய அணிக்காகவும் ராணுவத்துக்காகவும் விளையாடும் சுனில் எக்காவிடம் ஒழுங்கு கட்டுப்பாடு சுத்தமாக இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்று வருத்தப்பட்டுள்ளார்.
கட்டுப்பாடு மிகுந்த அமைப்பு என்று இந்திய ராணுவத்துக்கு ஒரு பெயர் இருந்தது. ரயில் பயணிகளுடன் சண்டை, பஸ் டிரைவருக்கு எந்திர துப்பாக்கியால் மிரட்டல், மறியல் செய்த நிராயுதபாணி தொண்டர்களை ஓடஓட விரட்டி தாக்குவது போன்ற சம்பவங்கள் பரவலாக தெரிய ஆரம்பித்தபின் பேர் ரிப்பேர் ஆனது. சுனில் எக்கா போன்றவர்களால் சேதம் அதிகமாகும்.
போபாலில் நடந்த ரங்கசாமி கோப்பை தேசிய போட்டியில் சண்டிகருக்கு எதிராக ஆட இறங்கிய தமிழக அணி அதிகாரிகளை தாக்கி அவப்பெயர் சம்பாதித்துள்ளது. கேப்டன் ஆடம் சிங்ளேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு என புகழ் பெற்ற ஹாக்கி இன்று வாட்டத்தில் இருக்கிறது. விதிகளை மதிக்காமல் விளையாட்டை வினையாட்டாக மாற்றும் எக்கா போன்றவர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலமே இருக்கிற ரசிகர்களையும் கவுரவத்தையும் காப்பாற்ற முடியும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails