Friday, July 9, 2010 | By: INDIA 2121

ஊழல் நாடுகள் வரிசையில் இந்தியா

 ஊழல் நிறைந்த நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து இடம் பிடிக்கிறது. அரசு அலுவலகங்களில் இருட்டான பகுதிகள் இருக்கும்வரை இந்த அந்தஸ்துக்கு ஆபத்து வராது.
இப்படியொரு நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம் என்ற அச்சம் சுதந்திரம் கிடைத்த காலத்திலேயே தலைவர்களுக்கு இருந்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த கமிஷன், ஊழலை தடுக்க 1966ல் வழி சொன்னது. அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க லோக் பால், லோக் ஆயுக்தா என்ற அமைப்புகளை உருவாக்க கமிஷன் சிபாரிசு செய்தது. முதலாவது மத்திய அரசுக்கு; அடுத்தது மாநிலங்களுக்கு. ஓய்வு பெற்ற நீதிபதி அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவார்.
தேசாய்க்கு முன்னால் இதே யோசனையை சந்தானம் கமிட்டி தெரிவித்து இருந்தது. அதை தூசி தட்டி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தனர். அதிகார வர்க்கம் சும்மா விடுமா? விசாரணை வரம்பில் இருந்து பிரதமருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதல் அம்பு விடப்பட்டது. வேறு யாரெல்லாம் விலக்கு பெற தகுதியானவர்கள் என விவாதம் தொடங்கியது. மசோதா கைவிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஆயுளுடன் சேர்ந்து காலாவதி ஆனது. 41 ஆண்டுகளில் இப்படி 8 முறை மசோதா மரித்துள்ளது.
பிரதமர் பதவிக்கு விலக்கு தேவையில்லை என மன்மோகன் கூறுகிறார். அவரது கட்சி உடன்படவில்லை.திரு.அப்துல்  கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது தன்னையும் லோக்பால் விசாரிக்க அனுமதிக்கலாம் என்றார். கேட்பாரில்லை. இதற்கிடையில் 17 மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை நிறுவின. அதில் ஒன்று கர்நாடகா. 5 லட்சம் டன் இரும்பு தாது கடத்தியதாக இரு அமைச்சர்கள் மீது வந்த புகாரை விசாரிக்க முடியாமல் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பதவி துறந்தார். கட்சிக்கு கெட்ட பெயர் வருமே என்ற கவலையில் அத்வானி சமாதானம் செய்தார். எழுத்து மூலமான புகார் வராவிட்டாலும் எவரையும் விசாரிக்கவும் சோதனை நடத்தவும் அதிகாரம் கேட்டார் ஹெக்டே. எடியூரப்பா அரசு அதற்கு சம்மதிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறது.
ஒரே ஒரு நிபந்தனைதானாம்: அரசியல்வாதிகளை விசாரிக்கக் கூடாது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails