Tuesday, July 6, 2010 | By: INDIA 2121

டெல்லி சர்வதேச விமான நிலையம்

 டெல்லி விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் திறப்புவிழா விமரிசையாக நடந்திருக்கிறது. ஏற்கனவே அங்கு இந்திய நகரங்களுக்கான விமானங்களுக்கு ஒன்றும், வெளிநாடுகளுக்கு என ஒன்றுமாக இரண்டு டெர்மினல்கள் இருக்கின்றன. இப்போது கட்டி முடித்திருப்பது மிகவும் பிரமாண்டமான டி3 முனையம்.
துபாய், பீஜிங் ஆகியவற்றுக்கு அடுத்ததாக பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய நிலையம் இது என்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும், பார்க்கிறவர்கள் பிரமித்து நிற்பதை டெல்லியில் காணமுடிகிறது. ஒரு காலத்தில் பாலம் ஏர்போர்ட் என்ற பெயரில் தூங்குமூஞ்சி விமான நிலையமாக இருந்த இடம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமாக இன்று நாட்டிலேயே மிகவும் சுறுசுறுப்பான தளமாக பரிணமித்திருப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கம்பீரமான சாட்சியம். அக்டோபரில் நடக்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு முன்னதாக முடித்தாக வேண்டும் என்ற இலக்கு தப்பவில்லை. 12 ஆயிரத்து 700 கோடி செலவில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமும் ஜி.எம்.ஆர் என்ற தனியார் குழுமமும் சேர்ந்து அனைத்து பணிகளையும் இந்திய முத்திரையோடு செய்து முடித்திருப்பதும் நமது திறமைக்கு நாமே நம்பிக்கையுடன் அளித்திருக்கும் முதல் மரியாதை. இன்னும் 20 ஆண்டுகளில் இங்கு ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் வசதியாக வந்து போக முடியும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் விமான போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் பறக்க ஆரம்பித்தாலே ஆறுமடங்கு வளர்ந்துவிடும் என துறையின் அமைச்சர் கணிக்கிறார். 2050ம் ஆண்டில் உலகில் ஒரு டஜன் விமான நிறுவனங்கள்தான் செயல்படும்; அதில் இந்திய, சீன கம்பெனிகள் தலா 3 இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போட்டி அதிகமாகும்போது பயணிகளுக்கு கொண்டாட்டம். கட்டணங்கள் குறையும். ரயில் டிக்கெட்டை விட மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்து பறக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பஸ்களில் நின்று கொண்டு செல்வதுபோல் விமானத்திலும் ஸ்டாண்டிங் டிக்கெட் போட ஒரு நிறுவனம் திட்டம் தயாரித்திருக்கிறது. செல்போன், கார் துறைகளில் ஏற்பட்டதை போல விமான போக்குவரத்திலும் ஒரு புரட்சி உருவாவது தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails