Monday, July 26, 2010 | By: INDIA 2121

வட கொரியா - தென் கொரியா போர் வெடிக்குமா?



எப்படியெல்லாம் எதிரி நாட்டை எரிச்சல்படுத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இந்தியாவை எரிச்சல் படுத்த பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், வட கொரியாவை நோகடிக்க, மெகா சைஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறது தென் கொரியா.
ஒரே நாடு, ஒரே இனமாக இருந்த கொரியாவை ஜப்பான் ஆண்டு வந்தது. பசிபிக் போருக்குப் பிறகு, 1945ல் அமெரிக்கா ஆதரவுடன் தென் கொரியாவும் சீனா, ரஷ்யா ஆதரவோடு வட கொரியாவும் உருவானது. இந்தப் பக்கம் ஜனநாயகம், அந்தப் பக்கம் கம்யூனிசம் என இரு துருவங்களாகி போனது. தென் கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலில் கடலில் மூழ்க, அதற்குக் காரணம் வட கொரியாதான் என முஷ்டியை மடக்கியது  தென் கொரியா. இது அபாண்டம் என வட கொரியா மறுக்கிறது. இந்த நிலையில்தான் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது தென் கொரியா.
இரு நாடுகளுக்கும் இடையில் 155 மைல் நீள எல்லைப் பகுதியில் மெகா சைஸ் ஸ்பீக்கர்களை வைத்து இரவும் பகலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் சிறப்பு, தென்கொரியர்களின் சந்தோஷமான வாழ்க்கை முறை பற்றி 4 மணி நேரம் கொண்ட நிகழ்ச்சியை தினமும் மூன்று முறை ஒலிபரப்புகிறது. அதோடு, வட கொரியாவைப் போல் பஞ்சம் எதுவும் இல்லை என்றும் எல்லோரும் நிறைய சாப்பிட்டு குண்டாக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றும குத்திக் காட்டுகிறது. இதைக் கேட்கும்  வட கொரியர்கள் எல்லை தாண்டி வந்தால், வரவேற்று வாழ்வளிக்கிறது. அதோடு எல்லை நெடுகிலும் பெரிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வைத்துள்ளது. அவற்றில் தென் கொரியாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், சந்தோஷமான குடும்பங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுபோக ஹீலியம் பலூன்களில் போட்டோக்கள் நிரம்பிய துண்டுப் பிரசுரங்களை எதிர்ப் பக்கம் கொட்டி வருகிறது. இப்படி பல விதங்களில் வட கொரிய அரசை வெறுப்பேற்றி வருகிறது தென் கொரியா.
எவ்வளவுதான் பொறுக்கும் வட கொரியா. ஸ்பீக்கர் பிரசாரத்தை நிறுத்தாவிட்டால், பீரங்கித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
அணு ஆயுத யுத்தம் வரலாம் என்ற பயம் திடீரென்று உலகை உலுக்கியிருக்கிறது. வட கொரியா அரசு அப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது. சட்டப்படி அதிகாரம் உள்ளவர்கள் விடுப்பது எச்சரிக்கை; இல்லாதவர்கள் எச்சரித்தால் அது மிரட்டல்.
இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானதுபோல் பிறந்தது வட கொரியா. நமக்கு அந்த கதி ஏற்பட்ட அடுத்த ஆண்டில் அங்கே கொரியர்களிடம் விதி விளையாடியது.
பாகிஸ்தான் இஸ்லாமை அடையாளமாக ஏற்றதுபோல் கம்யூனிசத்தை சுவீகரித்தது வட கொரியா. அன்று முதல் இந்தியா,பாகிஸ்தான் பாசம்தான் இரு நாடுகளுக்கும் இடையே. முட்டாள் இந்தியர்களை புத்திசாலிகள் ஆக்க பாகிஸ்தான் எந்த அளவுக்கு பாடுபடுகிறதோ அதற்கு சற்றும் குறையாதது வட கொரியாவின் முயற்சிகள்.
1968ல் தென் கொரிய அதிபரை கொலை செய்ய கமாண்டோ வீரர்களை அனுப்பியது வட கொரிய அரசு. ஈடேறவில்லை. வேறு பல நாசவேலைகளில் ஈடுபட்டது. ஒவ்வொரு முறையும் தென் கொரியா தப்பியது. வட கொரியாவுக்கு மூக்கணாங்கயிறு போட எவரும் முன்வரவில்லை. காரணம், சீனாவின் ஆதரவு. 
அதே போல் தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு .
இந்த இருநாட்டு பிரச்சினை பல ஆண்டுகளாக தொடந்து இருந்து வருகிறது
பாகிஸ்தானை போலவே வட கொரியாவையும் தனது செல்லப் பிள்ளையாக வளர்க்கிறது சீனா. அமெரிக்காவையும் தனக்கு வேண்டாத இதர நாடுகளையும் சீண்டிப் பார்க்க வட கொரியாவை ஏவுவது அதன் வாடிக்கை. விவகாரம் முற்றி ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் வந்தால், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி வட கொரியா மீதான தண்டனையை தடுத்து விடுகிறது.
இப்போதைய சிக்கலுக்கு காரணம், தென் கொரிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று மூழ்கி அதில் இருந்த 46 வீரர்கள் இறந்தனர்; வட கொரிய நீர்மூழ்கி கப்பல்தான் இதை செய்திருக்கிறது என்பது தென் கொரியாவின் நம்பிக்கை. இந்த சூழலில் அமெரிக்க, தென் கொரிய படைகள் கூட்டாக நடத்தும் ராணுவ ஒத்திகை நேற்று கொரிய வளைகுடாவில் தொடங்கியுள்ளது. ஒத்திகை முடிவதற்குள் உண்மையான போர் வெடிக்குமா என்பதுதான் உலக நாடுகள் தூக்கத்தை தொலைக்க காரணம்.
இன்னொரு போருக்கு தயாராகிறது ஒரே இனம்.கொரியா தீபகற்பத்தில் அமைதி நிலவ இறைவனை பிரார்த்திப்போம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails