Saturday, July 3, 2010 | By: INDIA 2121

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  ஐசிசி  தலைவராக சரத் பவார் பொறுப்பேற்றுள்ளார். அமைப்பின் எதிர்காலம் இனி கேள்விக்குறி என்று அதற்குள் சில பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன. பவார் தலைவர் ஆனதால் அல்ல இந்த சலசலப்பு. இரண்டு ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தவர், அடுத்த இரண்டாண்டு தலைவராக நீடிப்பது ஐசிசி விதிப்படியான நடைமுறை. அவர் காலி செய்த இடத்துக்கு யார் வருவது என்பதில் 
பிரச்சினை.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட் அந்த பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஐசிசி அமைப்பில் 104 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தாலும், நிர்வாகம் செய்வது டெஸ்ட் விளையாடும் 10 நாடுகள் அடங்கிய செயற்குழு. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நிறுத்திய ஹோவர்டுக்கு 7 ஓட்டு தேவை. வெள்ளைக்கார ஆஸி, நியூசி , இங்கிலாந்து தவிர ஏனைய நாடுகள் ஆதரிக்க மறுத்துவிட்டன. சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தவே அனுமதி கிடைக்கவில்லை. மரண அடி. இதுவரை இப்படி நடந்தது இல்லை. மேற்படி நாடுகளில் கொதிப்பு, கொந்தளிப்பு, குமுறல்.. விடமாட்டோம் என்று ஆவேசம்.
இந்த அவமானத்துக்கு காரணம் இந்தியா என்று  புகார் கூறுகின்றன ஆஸி,நியூசி , இங்கிலாந்து நாடுகள் . புதுப் பணக்காரன் தலைகால் புரியாமல் ஆடுகிறானாம். மொத்த கிரிக்கெட் வருமானத்தில் 80 சதவீதம் இந்தியர்களால் கிடைப்பது என்பதால், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் ஜால்ரா அடிக்கின்றனவாம்.
ஐசிசிக்கு 101 வயது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா சேர்ந்து ஆரம்பித்த அமைப்பு. நிறவெறி கொள்கையால் கடைசி நாடு 1970ல் வெளியேற்றப்பட்டது. மீதமுள்ள இரு நாடுகளும் ஐசிசியை பாட்டன் சொத்தாக கையாண்டு, மற்ற நாடுகளையெல்லாம் கிள்ளுக்கீரைகளாக நடத்தியது நூறாண்டு வரலாறு. இன்று அது திரும்புகிறது. ஹோவர்ட் சொந்த நாட்டிலேயே மக்களிடம் ஆதரவு இல்லாதவர். வேறு நபரை முன்மொழிந்தால் பரிசீலிக்கிறோம் என்று ஐசிசி சொல்கிறது. பிரிந்து செல்லலாமா என ஆஸி , நியூசி நாட்டு கிரிக்கெட் வாரியங்கள்  யோசிக்கின்றன.
‘விதி’யை மாற்ற அவர்களால் முடியாது. நம்மால் முடியும். வாங்கியதை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதில் தவறில்லை. அதே சமயம், பவார் தலைமையில் ஐசிசி பரிணமிக்குமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய ஆட்டம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails