Thursday, July 22, 2010 | By: INDIA 2121

விபரீத காதல்

விபரீதத்தால் பச்சிளம் குழந்தையை கொன்று வீசியிருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியின் மேல் இருந்த அளவுகடந்த வெறுப்பால், அவரது எல்கேஜி படிக்கும் மகனை கொடூரமான முறையில் கொன்றிருக்கிறார் கள்ளக்காதலி. காதலித்து மணந்த மனைவி, இரு குழந்தைகள் உள்ள அந்த அதிகாரி வேலி தாண்டி தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை வளைத்திருக்கிறார். திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்துள்ளார். கடைசியில் கழற்றிவிட நினைத்தபோது அதன் விளைவு இப்படியான பயங்கரத்தில் முடிந்திருக்கிறது.
உடல் ஆசைக்காக உடன் பணியாற்றும் பெண்ணை ஆசை வார்த்தை கூறி மயக்கிய அதிகாரியும், திருமணமானவர் என்று தெரிந்தும் நெருங்கிப் பழகிய அப் பெண்ணும் இதில் குற்றவாளிகள். இவர்களின் இந்த முறைதவறிய உறவுக்காக ஒரு பாவமும் அறியாத குழந்தை கொல்லப்பட்டிருப்பதுதான் கொடுமை. செலவுக்கு பணம் கொடுக்கிறோம், நல்ல வேலை வாங்கிக் கொடுக்கிறோம் எனவே பெரிதாக பிரச்னை ஒன்றும் வராது என அந்த அதிகாரி நினைத்திருக்கிறார். கள்ள உறவை தொடர்ந்திருக்கிறார். அதுவே அவருக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டது.
பால்வடியும் முகம் கொண்ட அச் சிறுவனை கொல்ல அப்பெண்ணுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் உயர் கல்வி படித்தவர். பெரிய வேலையில் உள்ளவர். கள்ளக்காதலின் உணர்ச்சி கொந்தளிப்பில், குழந்தை என்று கூட பார்க்கமால் கொன்றிருக்கிறார். மலரினும் மென்மையானவள் பெண் என்ற கவிஞர்களின் வர்ணனைகளை எல்லாம் வெற்று வார்த்தை ஆக்கிவிட்டார். பெண் இனத்துக்கே இழுக்கை தேடி தந்துவிட்டார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவரை தண்டிக்க சட்டரீதியாக எத்தனையோ வழி இருக்க, குழந்தையை கொல்லும் முடிவை அவர் எடுத்தது அநியாயம்.
நாட்டில் நடக்கும் பெரும்பகுதி கொடூர கொலைகளின் பின்னணி கள்ளக்காதல் விவகாரமாகவே உள்ளது. சங்கிலித் தொடர் போல் இது அதிகரித்து கொண்டேதான் போகிறது. தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மூலமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும்.

1 comments:

Anonymous said...

அது உண்மைதான்

Post a Comment

Related Posts with Thumbnails