Saturday, July 24, 2010 | By: INDIA 2121

வித்யாசமான தீர்ப்பு

 ஜெயிலுக்குள் நல்லவனாக நடந்தால் செய்த குற்றத்தின் கடுமை குறைந்து விடுமா? குறையாது; அதற்கான தண்டனை குறையும் என்று தெரிகிறது, சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பை படிக்கும்போது.
அசோக் ராய் ஒரு கல்லூரியில் டியூட்டராக பணியாற்றினார். ஆசிரியர் + காப்பாளர் பொறுப்பு அது. ஆனால் மனிதர் தன் மாணவியுடன் வல்லுறவு கொண்டார். அதிர்ச்சி, அவமானம் தாளாமல் அந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்டார். ஆசிரியருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். அது விசாரணைக்கு வரும்வரை காலத்தை வீணாக்கவில்லை. ஜெயிலில் படித்து ஐஏஎஸ் தேர்வுகளை பாஸ் செய்தார்.
ஹைகோர்ட் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டது. ரேப் குற்றம் நிரூபணம் ஆனாலும், சம்பந்தப்பட்ட மாணவியை தற்கொலைக்கு தள்ளினார் என்ற குற்றச்சாட்டை நீதிபதி ஏற்கவில்லை. ஜெயிலில் நல்லபடி நடந்து நற்பெயரை மீட்டுள்ளார்; எனவே, இதுவரை கம்பி எண்ணிய காலத்தை தண்டனையாக கணக்கிட்டு அவரை விடுதலை செய்யலாம் என தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. ‘ரேப் மிகவும் சீரியசான குற்றம். பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் எவரும் ஏற்க முடியாத காரணங்களை சொல்லி ராயின் தண்டனையை ஹைகோர்ட் குறைத்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என ஆணையம் கேட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது நடந்தது ஜனவரி 2009ல். நேற்று விசாரணைக்கு வந்தது வழக்கு. ‘அரசோ அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரோ இந்த வழக்கில் அப்பீல் செய்யலாம். மற்றவர்களுக்கு அந்த உரிமை கிடையாது’ என்று நீதிபதிகள் கூறினர். ஹைகோர்ட் முடிவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என அரசு வக்கீல் தெளிவுபடுத்தினார். உடனே மகளிர் ஆணையத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்தனர் நீதிபதிகள்.
ஆசிரியராக இருந்து மாணவியை பலாத்காரம் செய்த ஒரு குற்றவாளி, தேர்வு எழுதி பாசானதால் நல்லவனாகி ஆட்சிப்பணி அதிகாரியாவதற்கு தகுதி பெற்றுவிட்டதாக நினைக்கும் அளவுக்கு இந்திய மக்களுக்கும் பெருந்தன்மை இருக்குமானால், அது இறைவன் கொடுத்த வரம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails