Thursday, July 29, 2010 | By: INDIA 2121

சர்வாதிகாரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது இந்தியா.

 பர்மாவில் இருந்து தாண் ஷ்வே வந்திருக்கிறார். அதிபரா ?பிரதமரா? ஜனாதிபதியா? தெரியாது. அந்த நாட்டை ஆளும் ராணுவ தளபதிகள் குழுவின் தலைவர்.இவர் இதற்கு முன்பு அக்டோபர் 2004 ல் இந்தியா வந்திருந்தார்.
கடைசியாக அங்கு 1990ல் தேர்தல் நடந்தது. அதுவரை அதிபர் நீ வின். அவர் ராணுவ தளபதியாக இருந்தவர். 1962ல் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார். 26 ஆண்டுகள் அனுபவித்த பிறகு தேர்தல் அறிவித்தார். 489 தொகுதிகள். ஜனநாயக கட்சி 392 இடங்களில் வெற்றி பெற்றது. ஆங் சூ கீ என்ற பெண்மணி அதன் தலைவர். பிரதமராக வேண்டியவரை வீட்டுக் காவலில் வைத்து தேர்தல் முடிவை ரத்து செய்தது அரசு. அந்த குழப்பத்தின் நடுவே பொறுப்புக்கு வந்தவர் தாண் ஷ்வே. மனித உரிமைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர். ஆங்சூவை விடுவிக்க உலகமே கோரஸ் பாடியும் அசையாதவர்.
மேலைநாடுகள் பர்மாவுக்கு,  மியான்மர் என்றும் சொல்லலாம்  பொருளாதார தடை விதித்தன. சீனா துணை இருப்பதால் பர்மாவுக்கு வலிக்கவில்லை. நாடு சிறிதானாலும் இயற்கை வளம் அதிகம். எரிவாயு நிறைய கிடைக்கிறது. நமக்கு மிகவும் தேவை என்பதால் கிணறுகள் தோண்ட ஒப்பந்தம் போடலாமா என டெல்லி யோசித்தது. சீனா முந்திக் கொண்டது. இலங்கை வரை மூக்கை நுழைக்கும் பெய்ஜிங், அண்டை நாட்டை விட்டு வைக்குமா?
மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல் மாநிலங்களை ஒட்டி நமக்கும் பர்மாவுக்கும் 1640 கிலோ மீட்டர் பொதுவான எல்லைக்கோடு. இந்த மாநிலங்களிலும் அசாமிலும் நாசவேலையில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளுக்கு பர்மா எல்லைக்குள் முகாம்கள் இருக்கின்றன. இந்த எல்லை வழியாக போதை பொருட்களும் ஆயுதங்களும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டவும், பர்மாவை தாண்டி தென்கிழக்கு ஆசியாவுடன் ரயில், சாலை தொடர்பு ஏற்படுத்தவும் பர்மா தேவைப்படுகிறது. ஆக வேண்டியதை பார்ப்போம் என்று இறங்கி வந்து சர்வாதிகாரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது இந்தியா.
ஜனநாயக பிரியர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும், ஏமாற்றமாக இருந்தாலும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. இந்தியா , சீனா ஆதிக்கப் போட்டியால் இரண்டு லட்டு தின்ன கிடைப்பது அண்டை நாடுகளின் அதிர்ஷ்டம்.
ஷ்வேயின் வருகை பற்றி பர்மா அரசு தரப்பில் சொல்லும் போது,இரு நாடுகளின் எல்லை
பாதுகாப்பு பற்றி பேசவும்,பொருளாதார ஒத்துழைப்பு பற்றி பேசவுமே ஷ்வே இந்தியா
வந்துள்ளதாக தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails