Wednesday, July 14, 2010 | By: INDIA 2121

நக்சல் தீவிரவாதிகள்

 நாட்டின்மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாவோயிஸ்ட் என்னும் நக்சல் தீவிரவாதிகள் மாறிவருகின்றனர். பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கி 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நக்சலைட்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவர்கள் தனி ராஜாங்கம் நடத்துகின்றனர். சட்டீஸ்கரில் கடந்த ஏப்ரலில் இருந்து நக்சல்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கில் ரிசர்வ் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் ரயில் கவிழ்க்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாயினர். பழங்குடியின மக்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நக்சல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதை அடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்தார். இப் பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக நக்சலைட் பாதிப்பு உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒரிசா, சட்டீஸ்கர், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளதால் கவர்னர் பங்கேற்கிறார்.
நக்சலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, அதே நேரத்தில் இந்நடவடிக்கையின் மூலம் பழங்குடியின மக்கள் மீது எந்த அத்துமீறலும் நடைபெறாத வகையில் செயலாற்றுவது என மத்திய அரசு உத்தி வகுத்துள்ளது. இக் கூட்டத்தில் இந்த அம்சம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் சமீப காலங்களில் நக்சலைட் தாக்குதலில் வீரர்கள் அதிகளவு பலியாகி வருகின்றனர். போதிய பயிற்சி இல்லாததால்தான் வீரர்கள் இப்படி கொத்துக்கொத்தாக பலியாக நேர்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. இதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினருக்கு அதிநவீன பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்பதை ஒரிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். நக்சலைட்களின் கையில் தற்போது அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. சீனா, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து நக்சலைட்களுக்கு இந்த ஆயுதங்கள் சப்ளையாவதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய ஆயுத வர்த்தகத்தை கண்டுபிடித்து தடுக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நக்சல் அபாயத்தை உடனடியாக தடுப்பது இந்த நேரத்தில் மிக அத்தியாவசியம். பிரதமர் தலைமையில் நடக்கும் இன்றைய கூட்டம் இதற்கு அச்சாரமாக இருக்கட்டும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails