Thursday, July 15, 2010 | By: INDIA 2121

நீரின் அருமை

 நீச்சல் குளத்தில் குளிக்கும்போது தண்ணீர் குடிக்க தடை விதித்திருக்கிறது ஒரு நகராட்சி. நம்மூர் செய்தியல்ல, ஆஸ்திரியா நாட்டில் நடந்துள்ளது.
வியன்னா நகரில் 18 பொது நீச்சல் குளங்கள் இருக்கின்றன. மாநகராட்சி நிர்வகிக்கிறது. அனல் காற்று வீசுவதால் குளங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். குளிக்கும்போது அறிந்தும் அறியாமலும் வயிற்றுக்குள் தண்ணீர் போகிறது. இப்படி தினமும் 5,000 லிட்டர் தண்ணீர் காணாமல் போவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குளத்தில் நிரப்புவது குளோரின் கலந்த தண்ணீர். தினமும் ஐயாயிரம் லிட்டர் கு. க. நீர் சேர்க்க மாநகராட்சி கணிசமாக செலவிட நேர்கிறது. எனவே, ‘வாயை மூடிக் கொண்டு நீந்துங்கள்’ என பிரசாரம் செய்கிறது.
சென்ற ஆண்டும் இதுபோல் ஒரு சிக்கன நடவடிக்கை எடுத்தது மாநகராட்சி. பெர்மூடா ஷார்ட்ஸ் அணிந்து குளத்தில் இறங்க தடை விதித்தது. காரணம்? ஒரு பெர்மூடா பார்ட்டி குளித்து கரையேறும்போது இரண்டரை லிட்டர் தண்ணீரையும் அதில் உறிஞ்சி எடுத்துச் செல்கிறாராம். கழற்றி பிழிந்து அளந்து பார்த்தது. ஆஸ்திரியா டாப் 10 பணக்கார நாடுகளில் ஒன்று. செலவு பெரிதல்ல. தண்ணீரின் மதிப்பு தங்கத்தை காட்டிலும் உயர்ந்து வருவதற்கு சான்று இது.
பூமியின் முக்கால் பங்கு தண்ணீர் என்றாலும், அதில் 97 சதவீதம் கடல் நீர். குடிக்க முடியாது. நதி நீர் அரை சதவீதத்துக்கு சற்றே அதிகம். நிலத்தடி நீர் ஒன்றரை சதவீதம். மீதி மலையிலும் மேகத்திலும் ஒளிந்திருப்பது.
இரண்டே சதவீதம் உள்ள நதி நீர் + நிலத்தடி நீரில் 70 சதவீதம் விவசாயத்துக்கு செலவாகிறது. மீதிதான் வீடு முதல் ஆலைகள் வரை அனைத்து உபயோகத்துக்கும் கிடைக்கிறது. அவ்வளவு அரிய பொருளான நல்ல தண்ணீரை அளவுக்கு மீறி கெடுக்கிறோம்; வீணாக்குகிறோம். மாசு தாங்காமல் பல நதிகள் உயிரிழந்து போயின. பல வறண்டு மறைந்தன. தரமற்ற நீரால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு 30 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன.
இன்னும் 20 ஆண்டுகளில் இருப்பை விட தேவை 50 சதவீதம் அதிகரிக்குமாம். அடுத்த தலைமுறை தவிக்கட்டும் என விடுவது பாவம். அப்போது என்ன செய்வது என இப்போதே யோசிப்பது அவசியம்.
நீரின்றி அமையாது உலகு என்பதை உணர்ந்து நாம் அனைவரும் நீரை சிக்கனமாக
கையாள்வது அவசியம்.
ஆஸ்திரியாவின் தொலைநோக்கு திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது.

1 comments:

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு.......வாழ்த்துகள்

Post a Comment

Related Posts with Thumbnails