Saturday, July 24, 2010 | By: INDIA 2121

‘நாங்கள் ஏழைகள்’

 ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எல்லா மாநிலங்களும் பல்வேறு திட்டங்கள் தீட்டுகின்றன. சலுகைகள் வழங்குகின்றன. ஆனால் இந்த சலுகைகளில் பெரும்பகுதி ஏழைகளுக்கு போய் சேருவதில்லை. கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், ஏழை வேஷத்தில் பணக்காரர்கள் இச் சலுகையை அனுபவிக்கிறார்கள். விவசாய கூலிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை, பத்து விரலிலும் மோதிரம் மின்னும் பண்ணையார்கள் அனுபவித்து வருவதை காலம்காலமாக பார்த்து வருகிறோம்.
மத்திய பிரதேச அரசு இதை தடுக்க ஒரு புது ஐடியாவை உருவாக்கியிருப்பதாக நினைத்து சிக்கலில் மாட்டி தவிக்கிறது. இங்குள்ள பழங்குடி கிராமங்களில் பலர் வசதியானவர்கள். ஆனால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். இதற்கு ஒரு முடிவு கட்டத்தான் புதிய யோசனை உதித்தது. ம.பி.யின் கோப்லகஞ்ச் பஞ்சாயத்து அதை அமல்படுத்தி ‘அசத்திவிட்டது’. வேறொன்றும் செய்யவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை பட்டியலிட்டு, அந்த வீட்டின் சுவரில் ‘நாங்கள் ஏழைகள்’ என்று கருப்பு பெயின்டில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டது. இப்படி எழுதுவதற்கு வீட்டு சொந்தக்காரர்களிடம் அனுமதி கூட கேட்கவில்லை. ‘நாங்கள் ஏழைகள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இலவச ரேஷனை பெறலாம். எவ்வளவு எளிதாக பிரச்னையை தீர்த்துவிட்டோம் பாருங்கள் என்று பஞ்சாயத்து அதிகாரிகள் சந்தோஷப்பட்டனர். ஆனால் மக்கள் கொதித்து எழுந்துவிட்டனர். எங்களை இப்படி அடையாளப்படுத்துவதை அவமானமாக நினைக்கிறோம். பஞ்சாயத்தின் இந்த செயல் எல்லோரையும் புண்படுத்திவிட்டது. ஏழை முத்திரையோடு, எங்கள் மகள்களுக்கு திருமணம் செய்துவைப்பது எவ்வளவு பெரிய சிக்கல் என்பது இந்த அதிகாரிகளுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை கமிஷனிலும் புகார் செய்துள்ளனர். பிரச்னை பெரிதாகவே, ‘ஆர்வக் கோளாறால் செய்துவிட்டோம். வீட்டுச் சுவரில் எழுதியுள்ள வாசகத்தை அழித்து விடுகிறோம். இதுபற்றி விசாரணையும் நடத்தப்படும்’ என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
கவுரவம், மானம், ரோஷம் என்பதையெல்லாம் ஏழைகள்தான் இன்னும் கட்டிக்காத்து வருகின்றனர். சலுகைகளை சுரண்டும் வசதிபடைத்தவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை இல்லை. அவர்களிடம் கேட்டால், வீட்டைச் சுற்றி கூட எழுதிக்கொள்ளுங்கள் என்றுதான் கூறுவார்கள். உண்மையான ஏழைகளின் பட்டியலை எடுப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவர்களின் மனஉணர்வை புண்படுத்தி, அவமானப்படுத்தி இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ம.பி. அரசு இதை புரிந்துகொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails