Tuesday, July 13, 2010 | By: INDIA 2121

யார் ஏழை?

யார் ஏழை என்ற கேள்விக்கு யாராலும் இன்னும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை. பொருளாதார வல்லுனர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மூன்று வேளை சாப்பிட முடியாதவன் என்று ஒரு அளவுகோல் நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆண்டு வருமானம் ஒரு அளவீடாக சேர்க்கப்பட்டது. அப்புறம் உடமைகள் கணக்கிடப்பட்டன. அந்த வரிசையில் ‘மல்ட்டி டைமென்ஷனல் பாவெர்ட்டி இண்டெக்ஸ்’  எம்பிஐ ஒரு புதிய கருவி. ஏழ்மையையும் மனித வளர்ச்சியையும் மதிப்பிட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள வழிகாட்டு முறை. ஐக்கிய நாடுகள் சபை இதை அங்கீகரித்துள்ளது.
கல்வி, மருத்துவம், தொழில், வேலை போன்றவற்றில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் இந்த முறையில் ஏழைகளாக கணக்கிடப்படுகின்றனர். முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஏதேனும் ஒன்று கிடைக்கப் பெறாத குடும்பமும் ஏழைகள் பட்டியலில் சேரும். அப்படி செய்த ஆய்வில் இந்தியாவில் 8 மாநிலங்களில் கடுமையான வறுமை நிலவுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஆப்ரிக்க கண்டத்தில் வறுமையில் உழலும் 26 நாடுகளின் மொத்த ஜனத்தொகையை காட்டிலும் அதிகமான இந்தியர்கள் 42 கோடி  வறுமையில் வாடுகின்றனர். பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களுடன் 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் மேற்கு வங்காளமும் இதில் இடம் பெற்றிருக்கிறது. புது கண்ணோட்டத்தில் வறுமையை மதிப்பிடும் யோசனையை முதலில் தெரிவித்தவர் நோபல் பரிசு பெற்ற வங்காள பொருளாதார மேதை அமர்தியா சென் என்பது நினைவிருக்கலாம். தெற்கு, மேற்கு மாநிலங்கள் எதுவும் இதில் சேரவில்லை என்பது ஆறுதல். அதற்காக மக்களும், கட்சிகளும், அதிகார வர்க்கமும் பெருமைப்படலாம்.
அதே சமயம், இந்திய பொருளாதாரம் பிரமிப்பூட்டும் வகையில் முன்னேறி வருவதாகவும் இதனால் அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைவ தாகவும் வெளிவரும் செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பதை இந்த ஆய்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது. கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக அர்த்தமில்லை. திட்டங்கள் தீட்டும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆய்வறிக்கை இது.

2 comments:

vasan said...

மிக‌ச்ச‌ரியான‌ ப‌திவு.
இங்கிலாந்தில் ஹாவ‌ர்டு,கேம்பிரிட்ஷ்
ப‌ல்க‌லை அறிஞ‌ர்க‌ள் அறியாத‌ பொருள‌தாராமா?
இந்திய‌ வ‌ய‌ல்களும், வ‌ற்றிய‌ வ‌யிறுக‌ளும், ப‌சியும்
அறிவார்க‌ளா இந்த‌ ப‌.சி, ம‌ன்மோக‌ன், சோனியா
மற்றும் அலுவாளியாக்காள். இவ‌ர்க‌ள் அலுவ‌ல்
ந‌லிந்த‌வ‌ர் அவ‌ல‌ம் போக்க‌, ஆனால் வாழ வைப்பாதோ
அவ‌ர்க‌ளை வாழ‌ வைக்கும், அம்பானிக‌ளும், எஸ்ஸார்க‌ளும்,
டாடாக்க‌ளும்,ரெட்டிக‌ளும், கோடாக்க‌ளும், தேசாய்க‌ளும்,
பிர்லாக்க‌ளும், ச‌த்திய‌மும், இன்போஷிஸ்சும், இன்ன‌பிற‌வும்.
உல‌கில் அதிக‌ ஏழைக‌ளும், உல‌கவங்கியில் அதிக‌ ப‌ண‌மும்
உள்ள‌ ஒரே நாடு எங்க‌ள் இந்திய‌நாடு மட்டுமோ.
என்னே..... பெருமை ..... ஏமாளி இந்திய‌னே.

INDIA 2121 said...

உங்கள் ஆதங்கம் மட்டுமல்ல.........
இது ஒவ்வொரு இந்தியனின் ஆதங்கமும் தான்
இந்த போட்டோ என்னை மிகவும் பாதித்தது.
நம் தேசப்பற்று இந்த குழந்தையின் நிலமையில்
தான் உள்ளது.கட்டிக் கொள்ள கோவணம் இல்லை
என்றாலும் நம் தேசப்பற்றுக்கு ஒன்றும் குறைச்சலில்லை

Post a Comment

Related Posts with Thumbnails