Wednesday, July 7, 2010 | By: INDIA 2121

நேபாள மக்களின் சுதந்திர தாகம்

 தலாய் லாமாவின் 75வது பிறந்தநாளை திபெத்தியர்கள் நேற்று ஆடம்பரமின்றி அனுசரித்திருக்கிறார்கள். புத்த துறவிகளோ சீடர்களோ எதையும் கொண்டாடுவது கிடையாது. இது வாழ்க்கையின் ஒரு மைல் கல் என்பதால் அந்த விதியில் சின்ன தளர்வு.
தலாய் லாமா வயதுக்கு பொருந்தாத சுறுசுறுப்புடன் உலகம் சுற்றி வருகிறார். வருடத்தில் பாதிநாள் பேட்டிகள் மூலம் திபெத் பிரச்னையை உயிருடன் வைத்திருக்கிறார். அவர் இல்லையென்றால், சீனா என்றோ திபெத்தை மறந்து நிம்மதியாக தூங்கத் தொடங்கியிருக்கும்.
பலவான்களே பழங்கால வரலாற்றை ஆதாரமாக காட்டி சாதித்துக் கொள்ள முடியும். ஆதிகாலம் தொட்டே சீன மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிதான் திபெத் என்று செஞ்சீனம் அடித்துச் சொல்கிறது. எல்லையை பாதுகாக்க குத்தகைக்கு அமர்த்தப்பட்டதே சீன மன்னரின் படை என்பது திபெத் பழங்குடியினர் வாதம். அவர்கள் எண்ணிக்கை அதிகமில்லை. வாதம் எடுபடவில்லை.
சீன ஆதிக்கத்தில் இருந்து விடுபட 1959ல் புரட்சி நடந்தது. வழக்கமான பாணியில் சீனா அதை நசுக்கியது. தலாய் லாமாவும் சீடர்களும் இமயமலையின் சிகரங்கள், பள்ளத்தாக்குகளை நடந்து கடந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தனர். அன்றிலிருந்து தர்மசாலா அவர்களின் வீடானது. ‘நாடு கடந்த திபெத் அரசு’ அமைத்து, சுதந்திரத்துக்காக அமைதியாக போராடி வருகின்றனர். நா.க.அரசில் பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் உண்டு. ‘நாடாளுமன்றம்’ வேறு செயல்படுகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள லட்சம் திபெத்தியர்களும் அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இன்னும் அரை லட்சம் பேர் பல நாடுகளில் பரவியிருக்கின்றனர்.
சுதந்திரம், ஜனநாயகம் பரவலாக விரும்பும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தலாய் லாமாவின் கனவு நனவாகட்டும் என சீனாவுக்கு பயந்து ரகசியமாக பிரார்த்திக்கின்றன. இந்த 50 ஆண்டுகளில் திபெத்தை அடியோடு மாற்றிவிட்டது சீன அரசு. லாமா பிறந்த பழங்குடி இனத்தவர் ஆகப் பெரும்பான்மையாக வாழ்ந்தது போய், வேற்று இனங்களின் குடியிருப்புகள் பெருகிவிட்டன. சுதந்திர தாகம் தலாய் லாமாவுடன் தணியும் என்று சீனா திடமாக நம்புகிறது.
அழிக்கப்பட்ட அத்தியாயத்தை திரும்ப எழுதுவது வரலாற்றில் அடிக்கடி நடக்கும் நிகழ்வல்ல என்பதை உலகமும் உணர்ந்திருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails